உடல்நலக்குறைவுக்கு ஆளாகாதவர்களே இல்லை என்ற நிலை மேலோங்கி வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக பஞ்ச பூதங்களின் செயல்பாடு பிறழ்கிறது. இது மனிதர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நோயை மட்டும் நாடக்கூடாது. நோயின் மூலத்தையும் நாடி அறிய வேண்டும் என்ற அடிப்படையில் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அவசியம். அமெரிக்கா போன்ற பல நாடுகளில் மருத்துவச் செலவு மிகவும் அதிகம். காப்பீடு இருந்தாலும் கூட மருத்துவச் செலவை எதிர்கொள்வது கடினமாக உள்ளது என்று அந்த நாட்டைச் சேர்ந்த பலர் கூறுகின்றனர்.
பாரதத்தைப் பொறுத்தவரை மருத்துவ சேவை தரமாக உள்ளது. கட்டணமும் சற்று குறைவாகவே உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாரதத்தில் அலோபதி தவிர நேச்சுரோபதி, ஆயுர்வேதா, சித்த மருத்துவம் உள்ளிட்டவையும் பயன்பாட்டில் உள்ளன. அலோபதி மருத்துவத்தை உடனடி நிவாரணத்துக்கு பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. அலோபதி மருத்துவம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. எனவே அலோபதி மருத்துவத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது.
பாரத பாரம்பரிய மருத்துவ முறைகளான இயற்கை வைத்தியம், ஆயுர்வேதா, சித்த மருத்துவம் ஆகியவற்றில் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. பாரம்பரிய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பத்தியங்களை தவறாமல் பின்பற்றினால் செம்மையான முறையில் குணமடையலாம், வியாதியிலிருந்து முழுமையாக விடுபடலாம். இதர பாதிப்பு எதுவும் ஏற்படாமல் தடுத்து விடலாம். இதுபற்றிய விழிப்புணர்வு உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்த விழிப்புணர்வுதான் பாரதத்தில் மருத்துவச் சுற்றுலா துரிதமாக வளர்ச்சியடைந்து வருவதற்கு வித்தாக அமைந்துள்ளது. கொரோனா காலத்துக்கு முன்பாகவே வெளிநாடுகளிலிருந்து சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக பாரதத்துக்கு கணிசமானோர் வந்து கொண்டிருந்தனர். கொரோனா காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இந்த எண்ணிக்கையில் தொய்வு ஏற்பட்டது.
இப்போது பாரதத்துக்கு சிகிச்சைப் பெறும் பொருட்டு வரும் வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 167 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இ மெடிக்கல் விசா வசதியை வழங்கியுள்ளது. இதனால் வெளிநாட்டு நோயாளிகள் பாரதத்துக்கு வருவதில் தடை எதுவும் இல்லை. அவர்களால் சுலபமாக வர முடிகிறது.
உச்சி முதல் உள்ளங்கால் வரை பல முக்கிய இடங்கள் உடல்நலம் சார்ந்த முக்கிய கேந்திரங்களாக கருதப்படுகின்றன. இதை நாம் வர்ம சிகிச்சை முறையில் பின்பற்றுகிறோம். குறிப்பாக கேரளாவில் வர்ம சிகிச்சை அளிக்கும் ஆசான்கள் இப்போதும் சிறந்த முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சீனாவில் பிரபலமாக உள்ள அக்கு பஞ்சர், அக்கு பிரஷர் ஆகியவற்றுக்கு நமது மருத்துவ முறையே ஆணிவேர். அக்கு பஞ்சர் என்பது வர்ம சிகிச்சையின் ஒரு பிரிவுதான். அக்கு பிரஷர் என்பது கிராமங்களில் இப்போதும் கூட நடைமுறையில் உள்ளது. குறிப்பாக சுளுக்கு எடுப்பது ஒருவகையான அக்கு பிரஷர்தான். இதுதான் இப்போது மசாஜ் என்ற பெயரில் வியாபார நோக்கில் விளம்பரப்படுத்தப்படுகிறது. மசாஜ் என்பது தவிர்க்கப்பட வேண்டியதல்ல. ஆனால் அதே நேரத்தில் அதை அதீத வர்த்தக மயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சர்வதேச அளவில் மெடிக்கல் பேக்கேஜ் என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்த மருத்துவச் சேவை தொடர்பான விளம்பரங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. பாரத சுற்றுலாத் துறை வெளியிடும் இன்கிரிடிபிள் இண்டியா விளம்பரத்திலும் இதற்கு முன்னுரிமை அளிக்க முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டுரையாளர்: ஆர்கனைசர் செய்தியாளர் குழு
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி