பாம்பன் புதிய ரயில் பாலம் டிசம்பரில் திறக்க வாய்ப்பு

ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து டிசம்பரில் பயன்பாட்டிற்கு வர உள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாம்பன் ரயில் பாலம் 110 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. இதன் நடுவில் உள்ள துாக்குப் பாலம் கடல் உப்பு காற்றில் இரும்பு பிளேட்டுகள் துருப்பிடித்து பலமிழந்ததால் 2022 நவ.23ல் ரயில் போக்குவரத்திற்கு முழுமையாக தடை விதித்தனர். அதே நேரம் 2020ல் ரூ.550 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணி துங்கியது. புதிய பாலம் கடலில் 2.8 கி. மீ., நீளத்திற்கு அமைத்து நடுவில் பெரிய கப்பல்கள் சென்று வர வசதியாக 72.5 மீ., ல் லிப்ட் வடிவ துாக்கு பாலம் வடிவமைத்து இதனை நடுவில் பொருத்த மார்ச் 13 முதல் நகர்த்தி வருகின்றனர்.

ஆசியாவில் முதல் லிப்ட் முறையில் இயங்கும் இந்த துாக்கு பாலம் ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் 17 மீ., உயரத்திற்கு திறந்து மூடப்பட உள்ளது. இது அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு இணையான உயரம் ஆகும்.

லக்னோ ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பின் ஆலோசனையில் பாலத்தின் கர்டர்களை வடிவமைக்கும் பணி பாம்பனில் இருந்து 60 கி.மீ.,ல் உள்ள சத்திரக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. அங்கிருந்து லாரி மூலம் கர்டர்கள், துாக்கு பாலத்தின் துாண்கள் கொண்டு வந்து பாம்பனில் பொருத்தினர்.

எதிர்காலத் தேவையை கருதி இரட்டை ரயில் பாதை அமைக்க அடித்தளமும், துாண்களும் அகலமாக அமைத்துள்ளனர். ஆனால் தற்போது ஒரு ரயில் பாதை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மேற்கு பகுதியில் 1.5 கி.மீ.,ல் 76 கர்டர்கள் பொருத்தி 100 சதவீதம் பணி முடிந்துள்ளது. பாம்பன் பாலத்தின் கிழக்கில் மீதமுள்ள 500 மீ., துாரத்தில் 23 கர்டர்கள் பொருத்தும் பணி துவங்க உள்ளது. இப்பணிகள் மற்றும் துாக்கு பாலத்தை பொருத்தும் பணிகள் நிறைவடைந்து இந்த ஆண்டு டிசம்பருக்குள் பாலம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு உள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.