பாட்டாலே புத்தி சொல்லும் சங்கம்

 

பாட்டாலே புத்தி சொல்லும் சங்கம்

இஸ்ரோவின் முன்னாள் சேர்மன் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ்ஸின் நாகபுரி விஜயதசமி விழா தலைமையுரையில் “ஆண்டு 2040ல் நம் நாட்டவர் நிலவில் பாதம் பதிப்பார்” என்று பேசுகையில் கேட்டுக் கொண்டிருந்த 55 ஆண்டு ஸ்வயம்சேவகர் எவருக்கும் ‘பாமாலை’யின் இந்த வரிகள் (ஷாகாவில் என்றோ பாடியது) நிச்சயம் ஞாபகம் வந்திருக்கும்:

புதுமை அறிவுத் துறைகளில் நாம்

நிகரிலா முன்னேற்றம் காண்போம்

பரந்த வானின் புதிர்களெல்லாம்

புதிய வழியில் புரிய வைப்போம்

(இன்னமுதமாம் ராஷ்ட்ரபக்தி)

அதே விழாவில் பேருரை நிகழ்த்திய ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத், “தங்களை வோக்கனிசம், கல்சுரல் மார்க்ஸிசம், டீப் ஸ்டேட் ஆட்கள் என்றெல்லாம் சொல்லித் திரிகிறவர்கள் தேசத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் எதிரிகள்” என்று சொல்வதை மொபைலில் கேட்டுக் கொண்டிருந்த எந்த ஸ்வயம்சேவகரும் சங்கஸ்தானில் இது போல பாடிக் கேட்டிருக்கிறோமே என்று நினைக்கச் செய்யும் வரிகள் இவை.

இதன் அகமும் புறமும் எதிரி

இதன் சுதந்திரம் பறிக்கும் வைரி

இந்த நாட்டினை அடிமையாக்க

சதிகள் பல செய்யும் துரோகி

(இந்தப் புண்ணிய நாடெங்கள் நாடு)

அன்று ஹரியானா, இன்று மகாராஷ்ட்ரா என மாநில தேர்தல் வெற்றிகளை மகிழ்ச்சியோடு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போதும் அரசியலிலுள்ள அந்த ஸ்வயம்சேவகருக்கு கறாராக ஞாபகம் வரும் சங்க பாடல் வரிகள் இவை

வீட்டினிலே இருக்கும்போதும்        ஓட்டுப்போடச் செல்லும்போதும்

ஹிந்துவாக வாழ்ந்திடாது இழிவு தேடினோம்

மாறுபட்டதிந்த நிலை, கேடு கெட்ட முந்தைநிலை

வீறு கொண்டெழுந்ததின்று ஹிந்து சக்தியே

(இந்த நாடு ஹிந்து நாடு)

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையிலும் இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலும் கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்
பட்டதாக பாலிமர் டிவியில் செய்தி வாசிப்பவர் சொல்லும்போது எந்த ஸ்வயம்சேவகருக்குத்தான் இந்த வரி நினைவில்  எட்டிப்பார்க்காமல்  இருக்கும்?

பண்பின் பதாகை ஏந்தி

புவியெங்கும் விஜயம் செய்வோம்

(எம் ஜன்ம பூமி தாயே)

ஆரிய திராவிட இன வாதம், சாதிக்காழ்ப்பு இரண்டும் பிளவு நஞ்சு. ஒரே நாடு என்பது அமுதம். அமுதத்தில் ஒரு துளி சுவைத்த  கல்லூரி மாணவரான ஸ்வயம்சேவகரின் உற்சாகத் துள்ளல் பாடலாகப் பரிணமிக்கிறது:

அங்கக்கிங்க பேதமில்ல,

ஊரு மொத்தம் ஒரே சனம்

நல்லாச் சொல்லு நாலு தரம்,

நாடு மொத்தம் ஒரே இனம்

ஊருமொத்தம் ஒரே சனம்,

நாடு மொத்தம் ஒரே இனம்

(ஒண்ணுதான்)

ஒரு பல்கலைக்கழகத்தில் ராமபிரானின் மேன்மையை ஆராய்ச்சி  மாணவரிடம் பேராசிரியர் விளக்கிக் கொண்டிருந்தார்: “ராமபிரான் உறுதியில் இமயம். ஞானத்தின் ஆழத்தில் சமுத்திரம்”. கேட்டுக் கொண்டிருந்த ஆராய்ச்சி மாணவருக்கு   ஏதோ ஞாபகம் வந்துவிட்டது. சில வரிகளை மெல்ல பாட ஆரம்பித்தார். சத்தமாக பாடு என்றார் பேராசிரியர். ஸ்வயம்சேவகரான அந்த ஆராய்ச்சி மாணவர் பாடிய வரிகள்:

இமயம் முடியாய் குமரியும் அடியாய் நிற்கும் எம் தேவி

மாகாளி நீ பராசக்தி நீ  உலகோர் குலதெய்வம்

(எங்கள் ஆருயிர் தாய்நாடே)

வட்டாரப் பித்து ஊதிப் பெரிதாக்கப்படும் சூழலில், தன் மனதில் அகில பாரத கண்ணோட்டம் இவ்வளவு ஆழமாக பதிந்தது எப்படி என்று தனக்கே புதிர் போட்டுக்கொள்ளும் புதிய ஸ்வயம்சேவகருக்கு, அவர் மனப்பாடம் செய்த பாரத மாதாவைப் போற்றும் இந்த பாடல் வரிகள் விடை சொல்கின்றன:

வியாசன் படைத்த மாபாரதமும்

வள்ளுவன் தீட்டிய முப்பால் நூலும்

வையம் முழுவதும் போற்றி வணங்கும் இலக்கியம் கண்டவளாம்

(பாரத மண்ணில் பிறந்தது)

தீண்டாமையும் சாதி மோதலும் மறைந்து கோயில் திருவிழாவை அனைத்து சமூகத்தினரும் தோளோடு தோள் நின்று நடத்தியதை பார்க்கும் மூத்த சங்க  கார்யகர்த்தாவுக்கு சூட்சுமம் புரிகிறது. இந்த வரிகளை ஹம் செய்தபடி தனது ஜில்லாவின் புதிய தலைமுறை ஸ்வயம்சேவகர்களை மனதுக்குள் பாராட்டியபடி புன்னகைக்கிறார்:

உந்தன் முயற்சியெனும் பெரும் பலத்தால்

மண்ணுலகை விண்ணுலகாய் மாற்றிடுவாயே

(மனிதா நீ மகத்தானவன்)

பிள்ளையார் சன்னிதி. உரத்த குரலில் அர்ச்சகர், சங்கல்பம் பண்ணிக்கோங்கோ என்று சொல்ல, மே மாதம்தான் சங்க சிக்ஷா வர்க (பண்புப் பயிற்சி வகுப்பு) முடித்த அந்த ஸ்வயம்சேவகர் நினைத்துப் பார்க்காமலே இந்த வரிகள் அவர் மனத்திரையில் ஸ்கிரால் செய்தி போல நகர்கின்றன:

தேசம் அழைத்திடின் பாசம் களைந்திடும் தெய்வீக நல்லருள் வேண்டுவனே,

நீசத்தனம் நீங்கி நீதி துலங்கிட நித்தம் தொண்டாற்றிட வேண்டுவனே!

(எத்தனை ஜன்மம் எடுத்தாலும்)

சங்க பண்பு பயிற்சி வகுப்பின் போது கலந்துரையாடலிலும் சொற்பொழிவுகளிலும் பல முறை இப்படி ஒரு அறைகூவல் கேட்டுக்கேட்டு அந்த ஸ்வயம்சேவகர் பிள்ளையாரிடம் அப்படி வரம் கேட்டார் போலிருக்கிறது.:

தன்னலத்தை தள்ளி வைத்தே

தாயகத்தின் நலன் விழைவோர்

பதவி மோகம் சிறிதுமற்ற

பண்பினர் அணிதிரள வேண்டும்

(புதிய பாரதம் தலையெடுக்க)

எல்லை மாநிலமான பஞ்சாப் ஒரு புறம், இன்னொரு எல்லை மாநிலமான வங்காளம் மறுபுறம், தேசத்துக்கு ஆதரவான செய்தி வந்து வெகுநாள் ஆச்சே என்று வருந்திய நாளிதழ் துணையாசிரியரான மூத்த ஸ்வயம்சேவகர் ‘அந்த பழைய பாட்டை மறுபடியும் பாட வேண்டியிருக்குமோ?’ என்று நினைத்தபடி தலையை சொறிந்து கொண்டே, முதல் வரியைப் பாடினார். ‘ஜீ தொடர்ந்து   பாடுங்க’ என்று நிருபர் நேயர் விருப்பம் அறிவித்தார். அலுவலக டிவி திரையில் பலூச் மக்கள் போராட்டமும் மமதை தர்பாரை எதிர்க்கும் டாக்டர்கள் போராட்டமும் வலுத்து வருவதாக அடுத்தடுத்து செய்திச் சேனல் கதறியது. இப்போது அடுத்த வரியை புது தெம்புடன் கர்ஜித்தார் நம்மவர்:

வங்கம் எங்கே? சிந்துவும் எங்கே?

வஞ்சகர் சூழ்ச்சியும் வென்றிடுமோ!

வானம் வாழ்த்திட வையம் வியந்திட

வங்கமும் சிந்துவும் பெற்றிடுவோம்

(ஏகுவோம் நாம் வீறுடன்)

எழுபதாயிரம் ஷாகாக்கள் நடக்கின்றன. ஒரு லட்சம் ஆக்கணும் என்று சங்க பெரியவர்கள் தெரிவிப்பதை அறிந்துகொள்ளும் ஒரு சங்க அன்பர், தான் செய்யவேண்டிய வேலை என்ன என்று புரிந்து கொள்கிறார். காலை ஷாகாவில் பாடிய பாடல் வரி மனதில் ரீங்காரமிடுகிறது:

கிராமங்கள் தோறும் ஷாகா பரவணும் கிரமமாய் அதுவும் நடக்கணும்

(ஒரே சிந்தனை)

ஒரு ஷாகாவின் ஆண்டு விழா. நடத்துபவர்கள் பள்ளி மாணவர்களான ஸ்வயம்சேவகர்கள். வருபவர்கள் செருப்புகளை வரிசையாக விடுகிறார்கள். தாய்மார்களுக்கு அமரும் இடம், குடிதண்ணீர் வசதி, துவஜ மண்டல அலங்காரம், புத்தக விற்பனை ஏற்பாடு எல்லாம் கச்சிதம். அந்த பெரியவர்கள் ஆச்சரியப்பட்டு கேட்டார்கள்: இதெல்லாம் எப்படி…? விழாவின்போது பாடப்பட்ட இந்த தனிப்பாடலில்  அவர்களுக்கு  விடை  கிடைக்கிறது:

நாள்தொறும் ஷாகா பயிற்சியாலே

நெறிமுறை கட்டுப்பாடுகள் கற்போம்

(ஒன்றே தர்மம்)

விழாவுக்கு வந்த பால ஸ்வயம்சேவகரின் அப்பா அம்மாவுக்கு, இப்போதெல்லாம் மகன் “ஷாகா இஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜி” என்ற ஒரு புதிய கோஷம் போட்டபடி சாக்லெட்டுக்கு கல்தா கொடுத்துவிட்டு கடலை மிட்டாயை விரும்புவதன் சீக்ரெட் தெரிந்து கொள்ள முடிந்தது என்றால் இந்த கூட்டுப்பாட்டை விழாவில் கேட்ட பின் தான்:

கபடி, கபடி ஆடிடுவோம்

சக்தியை நாளும் வளர்த்திடுவோம்

(கபடி, கபடி)

ஆர்.எஸ்.எஸ்காரர்களை காவிப்படை என்கிறார்களே, அது ஏன்? இந்த கேள்வி, செய்தித்தாள் படித்தபடி நடந்து சென்ற ஒருவர் மனதில் எழுந்தது. பக்கத்தில் ஒரு அரங்கத்திலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் ஆனந்தமாக பாடிய சேர்ந்திசை, அவர் கேள்விக்கு விடையாக அமைந்தது:

காவிக்கொடியே எம் குருதேவா

காணிக்கை ஆனோம் உன் தாளில்

(காவிக்கொடியே)

“உங்க சங்கத்தால் எத்தனையோ வேலைகள் நடக்கின்றன. தமிழகத்துக்கு மிகவும் தேவைப்படும் முக்கியமான வேலை என்றால் எது?” சங்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்பட்ட தமிழாசிரியர், வீடு திரும்பும் போது தனக்குப் பிரியமான ஒரு மாணவனிடம் கேட்ட கேள்வி இது. அந்த மாணவன் சங்க ஸ்வயம்சேவக். பதில் தேடிக் கொண்டிருக்கும் அந்த ஸ்வயம்
சேவக்கிற்கு நாம் உதவலாம் என்கிறேன். நீங்களோ  தமிழகத்திற்கு இதோ இதை விட முக்கியமான வேலை வேறு எதுவாக இருக்க முடியும் என்கிறீர்கள். ஒப்புக்கொள்கிறேன்.

பிளவு நஞ்சு பரவும் நாட்டில்

ஒருமை அமுதம் பாய்ச்சுவோம்

(புது யுகத்தை நிறுவ)

(இந்தக் கட்டுரைக்கு ஆதாரம் ‘பாமாலை’)

–தொடரும்.