பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மற்றும் அரசு அலுவலர்களைத் தாக்கிய வழக்கில் கைதான அனைவருக்கும் ஜாமீன் வழங்கி பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த அக். 30-ம் தேதி கல் குவாரி ஏலத்துக்கு விண்ணப்பிக்க வந்த பாஜகவினர் மற்றும் அரசு அலுவலர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநர் ஜெயபால் புகார் அளித்தார். அதன்பேரில், அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் குன்னம் ராஜேந்திரனின் மகன் ரமேஷ் மற்றும் செல்வம், அன்பழகன், விஜயகாந்த், தர்மா உள்ளிட்ட திமுகவினர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து, ஒகளூர் ஊராட்சித் தலைவர் கே.அன்பழகன், திமுக இளைஞரணி வேப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் ஆர்.அன்புசெல்வன் உட்பட திமுக நிர்வாகிகள் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைதான 13 பேரும் ஜாமீன் கோரி பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.பல்கீஸ், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் எண்-1 நீதிமன்றத்தில் தினமும் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் 13 பேருக்கும் ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
6 பேருக்கு முன்ஜாமீன்: மேலும், இதே வழக்கில் கைதாகாமல் தலைமறைவாக இருந்த அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், திமுக தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளர் ரமேஷ், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் உள்ளிட்ட 6 பேர் முன்ஜாமீன் கேட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களும் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் எண்-1 நீதிமன்றத்தில் தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி முதன்மை நீதிபதி ஏ.பல்கீஸ் உத்தரவிட்டார். இந்நிலையில், இதே சம்பவம் தொடர்பாக மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்ததிமுக தொழிலாளர் அணி மாவட்ட துணைஅமைப்பாளர் ஆர்.ரமேஷ் அளித்த புகாரின்பேரில், பாஜக தொழில் பிரிவு மாவட்டத் தலைவர் பி.முருகேசன், துணைத் தலைவர் செ.கலைச்செல்வன், செ.முருகேசன் ஆகியோர் மீது பெரம்பலூர் போலீஸார் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.