டெல்லியில் உள்ள கார்கி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் இடையே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை மாற்ற முடியாது என மக்கள் நினைத்தார்கள். அப்போது இருந்த அரசியல் அவ்வாறு நினைக்க வைத்தது. ஆனால், தற்போது நாம் அதை மாற்றிய பிறகு, காஷ்மீரின் ஒட்டுமொத்த நிலவரமும் மாறிவிட்டது.
அதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் மீண்டும் இந்தியாவிடம் வரவேண்டும் என்பது அனைத்து கட்சிகளின் உறுதிப்பாடு. இது நமது தேசிய உறுதிப்பாடு. காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவை நீக்கிய பிறகுதான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் நமக்கு முக்கியம் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஏதாவது ஒன்று நடக்க வேண்டும் என்றால், அது பற்றிய எண்ணம் நமது சிந்தனையில் இருக்க வேண்டும்.
அப்படி ஏற்பட்டு விட்டால், மற்றதெல்லாம் நிச்சயம் ஏதாவது ஒரு சமயத்தில் நடந்துவிடும். 370-வது பிரிவை ரத்து செய்தது சரியான முடிவு. அதனால் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் நம் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பொருளாதார நிலை மிகவும் சீரழிந்த நிலையில் உள்ளது. இது தொடர்பாக முசாபர்பாத்தில் நாளை தர்ணாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.