பா.ஜ.,வுக்கு புதுச்சேரி தொகுதி: முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த வாரம் புதுச்சேரி வந்த பா.ஜ., மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பா.ஜ., அமைச்சர்களுடன் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது, புதுச்சேரி தொகுதியை பா.ஜ.,வுக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு, ரங்கசாமியும் ஒப்புதல் அளித்தார். ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு என்.ஆர்.காங்., கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் என்.ஆர்.காங்., வேட்பாளர் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதுகுறித்த முடிவை, கட்சி ஆண்டு விழாவில் அறிவிப்பதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

நேற்று நடந்த என்.ஆர்.காங்., கட்சியின் ஆண்டு விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: இந்த தேர்தலில் கூட்டணி கட்சியான பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற செய்ய வேண்டியது மிக அவசியம் மற்றும் அது நம் கடமை. கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு நாம் உழைக்க வேண்டும். கட்சியை பலப்படுத்த ஐந்து பேர் கொண்ட உயர்மட்ட குழுவும், 10 பேர் கொண்ட ஆலோசனை குழுவும் அமைக்கப்படும் என, தெரிவித்தார். முதல்வரின் பேச்சில் இருந்து, புதுச்சேரி தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.