வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிர் லால்சௌக் அருகே உள்ள அபி குசார் என்ற இடத்தில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட பழமையான சிவன் கோயிலை ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திறந்து வைத்தார். 2014ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது சிவன் கோயில் அழிவைச் சந்தித்தது. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம், ஸ்ரீநகர் ஸ்மார்ட் சிட்டியின் கீழ் இந்த திட்டத்தை மேற்கொண்டது. ஜம்மு காஷ்மீரில் ஜி 20 உச்சி மாநாடு நடக்கவுள்ள சூழலில், அதற்கு முன்னதாக, மனோஜ் சின்ஹா ஸ்ரீநகர் ஸ்மார்ட் சிட்டியின் மூன்று திட்டங்கள், 11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 16 மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 9 திடக்கழிவு மேலாண்மை வசதிகள் உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தார். ரூ. 3,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் கீழ் ஸ்ரீநகர் நகரம் மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் நகர்ப்புற உள்கட்டமைப்பை கணிசமாக உயர்த்துவதுடன், எளிதாக வாழ்வதற்கு உத்வேகத்தை அளிக்கும். இதைத்தவிர, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சமீபத்தில் நிறைவடைந்த ‘போலோ வியூ ஹை ஸ்ட்ரீட்’டையும் அவர் திறந்து வைத்தார். போலோ வியூ சந்தையை நவீனமாக மாற்றியதற்காக ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு அப்பகுதி கடைக்காரர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். இதைப் பற்றி மனோஜ் சின்ஹா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஸ்ரீநகரின் மையத்தில் உள்ள போலோ வியூ பாதசாரிகள் சார்ந்த நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது, இது அதிக மக்களை ஈர்க்கும், சில்லறை விற்பனையை அதிகரிக்கும், பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும், மேலும் இது அந்த பகுதியை மேலும் வாழக்கூடியதாக மாற்றும்” என தெரிவித்துள்ளார்.