எல்லா விதங்களிலும், சமூகத்தின் எல்லா நிலைகளிலும் சீர்கேடுகளைக்கொண்டு வந்த கழக அரசுகள், கலவித்துறையையும் எப்போதோ சர்வ நாசம் செய்துவிட்டன என்பதை கற்றறிந்தவர் ஒப்புக்கொள்ளுவர்.
பள்ளிக்கூடப்பாடங்களில், ஆத்திச்சூடி , கொன்றை வேந்தன், போன்ற நன்னெறிப்பாடங்களை பல காலத்துக்கு முன்பே நீக்கி விட்டனர். திராவிட இயக்கத்தவர் செய்த ‘சமூக சீர்திருத்தங்களை’ பாடங்களாக படித்தாலே போதாதா ? இளைய தலைமுறை ‘ஒரு வழிக்கு’ வந்து விடாதா ?
தற்போது தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை ஒன்பதாம் வகுப்பிற்கு தயாரித்து தந்துள்ள தமிழ்ப்பாடத்தில், “பெரியாரின் சிந்தனைகள்” என்ற பாடத்தில், ” 27 -06 -1970 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் ” யுனெஸ்கோ”–(UNESCO ) தந்தை பெரியாரைத் ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது ( இயல் எட்டு– பக்கம் 213 ) என்று கூறியுள்ளது.
ஈ.வெ. ரா.வுக்கு எப்படி, எந்த அடிப்படையில் யுனெஸ்கோ விருது வழங்கியிருக்கும், என்று அறிந்து கொள்ள ஆராய்ந்தேன். இறுதியில், வழக்கம் போல, திராவிட இயக்கங்களின் ‘சித்து விளையாட்டு’ இதிலும் வெளிப்பட்டு விட்டது.
1970 -ம் ஆண்டு, யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பின் வாயிலாக ‘யுனெஸ்கோ’ விருது தந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இல்லவே இல்லாத ‘யுனெஸ்கோ மன்றம்’ என்ற அமைப்பின் மூலமாக ஈ.வெ. ரா.வுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பிற்கும் யுனெஸ்கோ ‘சர்வ தேச அமைப்பிற்கும் எந்த விதமான தொடர்பும் இருந்ததாக தகவல் இல்லை. “யுனெஸ்கோ” அமைப்பு, இத்தகைய ‘யுனெஸ்கோ மன்றத்தை’ அங்கீகரித்ததா என்பதும் தெரியவில்லை. இது கிட்டத்தட்ட சினிமா நடிகருக்கு ஏற்படுத்தப்படும் ரசிகர் மன்றம் போலத்தான்.
இந்த ‘யுனெஸ்கோ மன்றத்தின்’ பெயரால் வழங்கப்பட்டிருக்கும் விருது என்பது ஒரு டுபாக்கூர் விருது என்பது தெளிவு. இந்த விருதின் பொய்த்தன்மையை மறைத்து, சமீபத்தில், கி. வீரமணி, “யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்” (திராவிடர் கழக வெளியீடு, 2015) என்று ஒரு புத்தகமும் எழுதி வெளியிட்டுள்ளார். பொய்யின் அடித்தளத்தின் மேல் ஒரு பொய்க்கட்டிடம் வேறு.
யுனெஸ்கோ அமைப்பின் விருதை ஈ.வெ. ரா.வுக்கு தந்தது யாரென்று பார்த்தால், மறைந்த முன்னாள் தமிக முதல்வர் மு. கருணாநிதி. யுனெஸ்கோ விருதை வழங்கும் விழாவுக்கு அந்த சர்வ தேச அமைப்பிலிருந்து, ஒருவர் கூடவா வரவில்லை ? எங்கேயோ உதைக்கிறதே ! ஆனால், இந்த விருதைப்பற்றிய ‘யுனெஸ்கோ’ அமைப்பின் பதிவோ அல்லது முறையான அங்கீகாரமோ எதுவும் கிடையாது. ‘யுனெஸ்கோ’ அமைப்பின் அலுவலக இணையதளத்தைப் பார்த்தாலே இந்த விவரம் தெரிந்துவிடும். ஆனால், ” யுனெஸ்கோ’ மன்றம்’ என்று இல்லாத ஒரு டுபாக்கூர் அமைப்பு தந்த விருதை ‘ யுனெஸ்கோ’ அமைப்பே தந்து விட்டது என்றும். அதுவும் ‘ ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்று விருது தந்து விட்டது என்று திராவிடர் கழகம் இன்று வரை தமிழர்களின் காதுகளில் முழம் முழமாய் பூச்சுற்றிக்கொண்டிருக்கிறது. இது யாரை ஏமாற்ற ?
அந்த மரத்தாலான கேடயத்தைப்பார்த்தாலே தெரிந்து விடும், அது ஒரு போலியான விருது என்று. அந்த கேடயத்தில் என்ன வாசகங்கள் உள்ளன? ‘The Socrates of South East Asia.’ அதாவது, ‘தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்று சொல்லப்பட்டுள்ளது. “தென் கிழக்கு ஆசிய நாடுகள்” என்றால் இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், லாவோஸ், வியட்நாம், கிழக்கு திமோர், தாய்லாந்து ஆகிய நாடுகள் தானே தவிர, அதில் இந்தியா வராது.
நல்ல வேளை, ஈ.வெ. ரா.வுக்கு நோபல் பரிசு தரப்பட்டது. அதை, அந்நாளில் தந்தவர் , அந்நாளைய தமிழக முதல்வர் முத்தமிழ் வித்தகர் டாக்டர் கலைஞர் என்று திராவிடர் கழகம் ஒரு புதிய ரீல் சுற்றக்கூடும். அதையும், நமது பொன்னான தமிழ் நாட்டுப்பாடநூல் நிறுவனம் புத்தகத்தில் சேர்த்து, தமிழ் மாணவர்களுக்கு பாடமாக ஆக்கும்.
” தமிழன் என்றொரு இனம் உண்டு. தனியே அதற்கொரு குணம் உண்டு.”. அது இது தான். பொய்யையும், புரட்டையும் மாணாக்கருக்கு பாடமாக ஆக்கி, அவர்களை பித்துக்குளிகளாக்குவது தமிழனின் தனிக்குணம்…சபாஷ் தமிழ் நாட்டுக்கல்வித்துறை !!
இணையதள ஆதாரங்கள் :
https://www.youtube.com/watch?
https://www.youtube.com/watch?
https://www.youtube.com/watch?
https://www.quora.com/Do-
https://twitter.com/suryahsg/
http://tnschools.gov.in/media/
– ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்.
Excellent