பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு: கரோனா போன்ற பெருந்தொற்று ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் தொற்று மனிதர் களுக்கும் பரவ வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கரோனா போன்ற பெருந்தொற்று உலகில் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் அண்டார்டிக் பகுதியில் ஏராளமான பெங்குயின்கள் உயிரிழந்து கிடந்தன. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பண்ணைத் தொழிலாளி ஒருவர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவருக்கு எச்பிஏஐ ஏ (எச்5என்1) வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத்தான் மருத்துவ நிபுணர்கள் பறவைக் காய்ச்சல் தொற்று என்று தெரிவிக்கின்றனர்.
இந்த வகை பறவைக் காய்ச்சல், பால் தரும் பசுக்கள் மூலம் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 2020-ம் ஆண்டு முதல் பறவைக் காய்ச்சல், எச்5என்1 (H5N1) என்ற நோய்க்கிருமி வகை, உலகம் முழுவதும் பரவி வருகிறது. இவை பறவைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் (டிசம்பர் 2023 நிலவரப்படி) பறவைகளை பாதித்துள்ளது. மேலும் இந்த வைரஸால் கோழிப் பண்ணைகளில் லட்சக்கணக்கான கோழிகள், வான்கோழிகளும் உயிரிழந்தன.
பல வகையான காட்டுப் பறவைகள்மற்றும் கடற்பறவைகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தன. அண்மையில் அண்டார்டிகா பகுதியில் பெங்குயின்கள், அர்ஜெண்டினாவில் யானை கடற்பசுக்கள் என அழைக்கப்படும் சீல்கள் உயிரிழந்தன.
இந்த வகை எச்5என்1 வகை பறவைக்காய்ச்சல் மிகக் கொடியது என்றும், எளிதில் மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் இது கரோனா போன்ற பெருந்தொற்று நோயாகவும் மாற வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபருக்கு,தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் பல்வேறுமாகாணங்களில் உள்ள பசுக்களுக்கு இந்த பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
2022-ல் முதன்முதலாக அமெரிக்காவின் கொலராடோவில் ஒரு நபருக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டது. அதன் பின்பு தற்போதுதான் டெக்சாஸில் உள்ள இந்த நபருக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிட்ஸ்பர்க்கை சேர்ந்த பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளர் டாக்டர் சுரேஷ் குச்சிப்புடி கூறும்போது, “இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவும். இது ஒரு பெருந்தொற்று நோயாக மாற வாய்ப்புள்ளது. இது புதிதாக உருவாகி வரும் வைரஸ் அல்ல. இது ஏற்கெனவே உலகம் முழுவதும் உள்ளது’’ என்றார்.
இதுகுறித்து பயோநயாகரா மருந்து தயாரிப்புத் துறை ஆலோசகர் ஜான் ஃபுல்டன் கூறும்போது, “இந்த பறவைக் காய்ச்சல் கரோனா பெருந்தொற்றை விட 100 மடங்கு ஆபத்தானதாகவும், மோசமானதாகவும் இருக்கும். இந்த வைரஸ் உருமாற்றம் பெற்று பலரது உயிர்களை பலிவாங்கும்” என்றார்.