பருவநிலை மாற்றம் குறித்து கேள்வி; எங்களுக்கு பாடம் எடுக்க அதிகாரம் அளித்தது யார்? – பிபிசி செய்தியாளரை கண்டித்த கயானா அதிபர்

பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட சூழலியல் பிரச்சினைகள் இன்று உலகம்எதிர்கொள்ளும் மிகப்பெரும் சிக்கலாக கருதப்படுகிறது. இதனால், நிலையான வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்த பல நாடுகள் முயற் சித்து வருகின்றன.
இந்நிலையில், பிபிசி தொலைக்காட்சி செய்தியாளர் கயானா நாட்டுஅதிபர் இர்ஃபான் அலியை நேற்று பேட்டி கண்டார். அப்போது அந்த செய்தியாளர், கயானா நாட்டின் கடற்கரை பகுதிகளில் எண்ணெய், வாயு உள்ளிட்ட எரிபொருட்கள் எடுக்க திட்டமிடப்பட்டிருப்பதால் கார்பன் வெளியீடு 2 பில்லியன் டன் அளவுக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டி கேள்விஎழுப்பினார். இதனால் கோபம் அடைந்த கயானா அதிபர் கூறிய தாவது: இங்கிலாந்தையும் ஸ்காட்லாந்தையும் சேர்த்தால் வரக்கூடிய பரப்பளவுக்கு இணையான வனப்பகுதி கயானாவில் உள்ளதை நீங்கள் அறிவீர்களா? 19.5 கிகாடன்கள் கார்பனை தனக்குள் சேமித்து வைத்திருக்கும் காடு எங்களுடையது. இன்று உலகம் அனுபவிக்கும் சுகத்தில் கயானாவின் பெரும்பங்குள்ளது. அதற்கு அவர்கள் எங்களிடம் கட்டணம் செலுத்துவதில்லை, எங்களது முக்கியத்துவத்தை மதிப்பதுமில்லை. உலகிலேயே மிகக்குறைந்த அளவில் காடழிப்பு நிகழ்வது எங்கள் தேசத்தில்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நாங்கள் எவ்வளவு அதிகமாக எண்ணெய், வாயு வளங்களை நிலத்திலிருந்து உறிஞ்சி எடுத்தாலும் சுற்றுச்சூழல் சீர்கேடு எங்களால் நிகழாது. நெட் பூஜ்ஜியமாகத்தான் அது இருக்கும். கடந்த 50 ஆண்டுகளில் உலகின் பல்லுயிர் பெருக்கத்தில் 65 சதவீதத்தைக் கபளீகரம் செய்தவர்கள் இன்று கபடநாடகம் ஆடுகிறார்கள். பருவநிலை மாற்றம் பற்றி எங்களுக்குப் பாடமெடுக்க உங்களுக்கு அதிகாரமளித்தது யார்? தொழிற்புரட்சி காலகட்டத்தில் இயற்கையை சூறையாடியவர்களின் சட்டைப்பைக்குள் பதுங்கி இருந்தவர்களெல்லாம் இன்று எங்களுக்கு பாடமெடுக்கிறீர்கள். இவ்வாறு கயானா அதிபர் காட்டமாக பேசினார்.