பரதன் பதில்கள்

பரதனாரே….  உயர்ந்த  பிரார்த்தனை  எது?    

– பஞ்ச தர்மா, வெள்ளாளப்பட்டி, சேலம் 

இறைவா! எனக்கு யாரிடமும் குற்றம் குறை பார்க்காத மனதைக் கொடு” – என்று அன்னை சாரதா தேவிகேட்ட பிரார்த்தனைதான். அடுத்தவர்களுடைய குறைகளையே சதா பார்த்துக் கொண்டிருந்தால் நம் மனசும் கெட்டுப் போய்விடும்.

 

கோயில்களில் பணம் கொடுத்தால் கர்ப்பகிரஹம் அருகில் வரை சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது சரிதானா?   

– கே. மாரிச்சாமி, கோவளம்

கோயில்களில் கட்டண தரிசனமே கூடாது என்கிறது ஹிந்து முன்னணி. இது ஒருபக்கம் இருக்கட்டும். சன்னிதானம் அருகில் சென்று தரிசிப்பதால் மட்டும் கடவுளை நெருங்கிவிட முடியாது. நீங்கள் சாமிக்கு எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, உங்கள் மனதில் பக்தி எப்படியிருக்கிறது என்பதுதான் முக்கியம்.

 

சுதந்திரம் பெற்றவுடன் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவுக்குப் பதிலாக சர்தார் படேல் பிரதமராகியிருக்க வேண்டும் என்ற கருத்து பற்றி? 

– வி. வேல்நாகராஜன், காவேரிபாக்கம்

இதெல்லாம் முடிந்துபோன கதை. பேசி என்ன லாபம்? படேல் பிரதமராகியிருந்தால் காஷ்மீர் பிரச்சனை என்றோ தீர்ந்திருக்கும். என்ன செய்வது? மகாத்மா காந்திஜிக்கு நேருஜி செல்லப்பிள்ளையாச்சே!

 

இந்தியாவில் ஹஜ் யாத்திரைக்கு மாணியம் வழங்குவது பற்றி?   

– கலைச் செல்வி, வந்தவாசி

தாராளமாக வழங்கட்டும். அதுபோல ஹிந்துக்கள் கைலாஷ், காசி யாத்திரை செல்ல மானியம் வழங்கலாமே! ஒரு ஆச்சரியமான செய்தி… உலகில் சுமார் 52 முஸ்லிம் நாடுகள் உள்ளன. எந்த நாட்டிலும் ஹஜ் யாத்திரை செல்ல மானியம் வழங்கவில்லை.

 

ராணுவ அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டிருப்பது பற்றி?   

– பெ. சகாதேவன், தூத்துக்குடி

தகுதி, நேர்மை என்ற ஒரே அடிப்படையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்களும் சாதனை படைப்பார்கள் என்று மோடி நம்புகிறார். மதுரை தான் இவருக்கு சொந்த ஊர். தமிழர் என்பதால் நமக்கு இரட்டிப்பு சந்தோஷம்தானே!

 

நீட் தேர்வுக்கு எதிராக போராடுவதற்காகவே  தனது அரசு பள்ளி ஆசிரியர் வேலையை  ராஜினாமா   செய்துள்ளாரே?      

– சந்தியா ராஜேஷ், சென்னை

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சபரிமாலா ஆசிரியர் மட்டுமல்ல; வேந்தர் டி.வி.யில் பட்டிமன்ற நடுவரும் கூட. முழுநேரமாக டி.வி. மற்றும் அரசியலில் இறங்க முடிவெடுத்துவிட்டார். அடுத்த தேர்தல் வந்தால் தி.மு.க. வேட்பாளரானாலும் ஆச்சரியமில்லை. ஆனால் பத்திரிகையாளர் பேட்டியில் அன்று நேதாஜி தனது ஐ.சி.எஸ். பட்டத்தை துறந்ததுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியதுதான் வெட்கக்கேடு!

 

எடப்பாடி அரசு கவிழ்ந்து தமிழகத்தில் இடைத்தேர்தல் வருமா?  

– ந. புவன்ராஜ்குமார், கருவஞ்சேரி

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தி.மு.க. எதிர்பார்க்கிறபடி உடனே தேர்தல் வர வாய்ப்பில்லை. ஜனாதிபதி ஆட்சி தொடரும். அதற்குள் ஸ்பெக்ட்ரம் ஊழல், தயாநிதி மாறன் ஊழல் தீர்ப்புகள் வரலாம். அதிமுக ஊழல் கட்சி என்றால் தி.மு.க. வும் ஊழல் கட்சிதானே…!