பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் முஸ்லிம் பயங்கரவாத (ஐ.எஸ்) அமைப்பைச் சேர்ந்தவர்கள் நவம்பர் 13ம் தேதி பல இடங்களில் நடத்திய தாக்குதல்களில் 129 பேர் பலியானார்கள். சுமார் 300 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த தாக்குதலை பிரான்ஸ் அரசும், எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும், ஊடகங்களும் எதிர்கொண்ட விதம் பாராட்டத்தக்கது. உடனடியாக அமைச்சரவை கூடி 3 மாத நெருக்கடி நிலையை அரசு அறிவித்தது. பயங்கரவாதம் சம்மந்தமாக 26 சட்ட திருத்தங்களை அரசு செய்தது. சதிகாரர்களைத் தேடும் வேட்டையில் 30,000 போலீஸார் களமிறங்கினர். சதித் திட்டத்தை தீட்டிய, அரங்கேற்றிய முக்கியமான 4 பேரைப் பிடித்து அவர்களை சுட்டுக் கொன்றனர். சதிகாரர்களிடமிருந்து 160 ஆயுதங்களைக் கைப்பற்றினர். இத்தகைய நடவடிக்கைகளில் ஒரு போலீஸ்காரர் கூட பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அங்குள்ள எதிர்க்கட்சிகளையும் பாராட்ட வேண்டும். எதிர்க்கட்சிகள் அரசைக் குற்றம் கூறி அரசியல் ஆதாயம் தேடவில்லை. தேச நலன் என்று வரும்போது ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஒரே குரலாக ஒலித்தன.
பொதுமக்கள் உள்பட அனைவரும் பொறுப்புணர்வுடன் சம்பவத்தை எதிர் கொண்டனர். பலியான குடும்பங்களுக்கு நிவாரண உதவி கேட்டு குடும்பங்களோ அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் எதிர்க்கட்சிகளோ அறிக்கைகள் விடவில்லை. பலியான குடும்ப உறவினர்கள் பெரிய களேபரம், கூக்குரல், அழுகை என ஒப்பாரி வைக்கவில்லை.
ஊடகங்கள் இறந்தவர்களின் சடலங்களையும் படம் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தவில்லை. தொலைக்காட்சிகளில், பாதுகாப்பில் குளறுபடிகள் என அரசை விமர்சித்து விவாதங்கள் நடைபெறவில்லை. பகை நாடுகளால் நமக்கு ஒரு ஆபத்து வரும்போது அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நம்மூரில் இத்தகைய வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றால் பாபர் மசூதிக்கான பதிலடி என்று கொஞ்சமும் கூசாமல் பலர் வாதிடுவர். முஸ்லிம் பயங்கரவாதம் என்று சொல்லக்கூடத் தயங்குவார்கள். பயங்கரவாதத்திற்கு மதமில்லை என்று பல்லவி பாடுவர்.
இன்றைய சூழலில் முஸ்லிம் பயங்கரவாதம் என்பது உலகளாவியது. அதை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டியது அனைத்து நாடுகளின் கூட்டுப் பொறுப்பு.