உத்தரகண்டில் பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள கோவில்கள், கடும் பனிப்பொழிவு இருக்கும் குளிர் காலத்தில் மூடப்பட்டு, கோடை காலத்தில் திறக்கப்படுவது வழக்கம்.
இந்த நான்கு கோவில்களுக்கும் பக்தர்கள் செல்லும் யாத்திரை, ‘சார்தாம்’ யாத்திரை எனப்படுகிறது. இந்நிலையில் அட்சய திருதியையொட்டி, கடந்த 10ம் தேதி கேதார்நாத், யமுனோத்ரி கோவில்கள் திறக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து அன்றைய தினமே கங்கோத்ரி கோவில் திறக்கப்பட்டது.
இந்நிலையில், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில், வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க நேற்று காலை 6:00 மணிக்கு திறக்கப்பட்டது. இதையொட்டி கோவில் முழுதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
பத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்ய கடந்த 11ம் தேதி மாலை 4:00 மணி வரை 7,37,885 பேர் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். பத்ரிநாத் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து, ‘சார்தாம்’ யாத்திரை துவங்கியது.