படிப்படியாகப் படிந்த பண்பாடு!

நவராத்திரி! துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியர் முறையே வீரம், செல்வம், கல்வியை நமக்குக் குறைவின்றி அருள்பவர்கள். அன்னையர் மூவரை வேண்டித் துதித்து வரம் பல பெறுவதே நவராத்திரி.

கோயில்களிலும் வழிபாட்டு மன்றங்களிலும் சஹஸ்ரநாம பாராயணம், சண்டி ஹோமம், சுவாசினி பூஜை போன்ற வைபவங்கள் நடப்பதால் ஊரெங்கும் ஆன்மிக அதிர்வுகளால் நிரம்பியிருக்கும். இல்லங்களில் கேட்கவே வேண்டாம், கொலு வைத்து பொம்மைகளில் தெய்வ சக்தியை ஆவாஹனம் செய்து வழிபடுவதால் வீடே கோயிலாக மாறும்.

நவ சக்திகளையும் தன்னுள்ளே ஒன்றிணைத்த அம்பிகை, விஜயதசமியன்று மஹிஷாசுர வதம் செய்து தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய புராண சம்பவங்கள் ஒரு பக்கமிருந்தாலும் நவராத்திரி ஒன்பது நாளும் பொம்மை கொலு வைத்துக் கொண்டாடுவது தனி ஆனந்தம் தான்.

வருடத்தில் 355 நாட்கள் நம்மை பொம்மையாக்கி விளையாடுகிறானே இறைவன், இந்த பத்து நாட்கள் நாம் அவனை பொம்மையாக்கி விளையாடுகிறோம் என்றும் சொல்லலாமே!

பெரியவர்கள் குழந்தையாய் மாறி பொம்மை வைத்து ரசிக்க குழந்தைகள், பெரியவர் போல் வேடமிட்டு  ஒவ்வொரு வீடாகச் சென்று  ‘எங்கள் வீட்டு கொலுவுக்கு வாங்கோ’ என்று அழைப்பது சுவாரசிய முரண்.

ஆம்! ராதை – கண்ணன் வேஷம், மடிசார் புடவை,  பாவாடை தாவணி  என்று விதவிதமாக உடையணிந்து எல்.கே.ஜி, யு.கே.ஜிகள் நம் வீட்டுப் படியேறி வருவது அழகோ அழகு.

இப்போது அரிதாகி விட்ட காட்சி
யென்றாலும் மலரும் நினைவுகளில் மனம் மகிழ்கிறது.  இந்த மழலைகளை சில வீடுகளில் பாடச் சொல்வர், ஆடச் சொல்வர்.

சிறு வயதில் ஒரு முறை என் தோழியும் நானும் ஒரு கொலுவில் ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ பாடலுக்கு நடனமாடினோம். அந்த “ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்” வரிகளுக்கு  நாங்கள் பள்ளிகொண்ட  பெருமாள் போல அபிநயிக்க அங்கிருந்த மாமியொருவர் “ரங்கநாதா… ரங்கநாதா” என்று எங்களைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ள, நாங்கள் பயந்துபோய் திருதிருவென முழிக்க, அந்த கோலாகலத்தை இப்போதும் மறக்க முடியாது.

தினம் ஒரு பட்டுச் சேலை, தினம் ஒரு சுண்டல், தினந்தினம் நண்பர்கள் உறவினர் வருகை;  நாமும் செல்லுதல் என  மதியம் தாண்டினாலே பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. சொல்லப்போனால் கொலு பரபரப்பு ஒரு மாதம் முன்னதாகவே தொடங்கிவிடுமே.

புதிய பொம்மைகள் சேகரித்தல், பழைய பொம்மைகளைத் துடைத்தல், தாம்பூலப் பரிசுப் பொருட்கள் தயார் செய்தல் என…. அப்பப்பா!

பழையன கழிதலும் புதியன புகுதலும் இங்கு வாய்ப்பில்லை..  பழைய பொம்மைகள் கூடவே புதியன புகுந்துகொண்டே இருக்கும். அவற்றை படிகளில் அழகுற சமாளித்து அடுக்குவது தான் சர்க்கஸ். அஷ்ட லக்ஷ்மி செட்டில் சில சமயம் நான்கு பேர் ஒரு படியிலும் மீதி பேர் அடுத்த படியிலும் அமர்வதுண்டு. இடப் பற்றாக்குறை தான். கொலு பார்க்க வருபவர்கள் முதலில் கேட்பதே ‘இந்த வருடம் புது பொம்மை என்ன?’ என்று தான்.

சொல்ல மறந்துவிட்டேனே, இந்த வருடப் புதுவரவு நம்ம அயோத்தி ராம் லல்லா தான். பல வீடுகளில் இடம்பிடித்திருந்தார். இருக்கும் சொற்ப இடத்தில் அவருக்கும் இட ஒதுக்கீடு உண்டு. சென்னை வியாசர்பாடி கிராமத்தில் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி பரமசிவம் என்ற ஸ்வயம்சேவகர் தேசிய தலைவர்கள் பொம்மை செய்து வழங்கி வந்தார்.

அட! படியில் பொம்மை  அடுக்குவதிருக்கட்டும். படிகளை அடுக்குவதே தனி கலை தான். இப்போது போல ரெடிமேட் படிகள் கிடைக்காத காலத்தில் பாத்திரங்கள் வைக்கும் மரப்பலகைகள், பிஸ்கட்   டின்கள், மரப் பெட்டிகள், செங்கல், பழைய புத்தகங்கள் (பள்ளிப் புத்தகம், நோட் புக் கூட) என கையில் கிடைத்தவற்றையெல்லாம் வைத்து கொலுப் படிகள் செய்த இன்டீரியர் டெகொரேட்டர்கள் வீட்டுக்கு வீடு உண்டு.

படிகளில் பொம்மைகளை வைத்து பூஜையைத் துவங்கும் போது நம்முள் ஏற்படும் பரவசம் வர்ணிக்க முடியாதது.

அடுத்த பத்து நாட்களுக்கு அவை பொம்மைகளல்ல, – கடவுள்!

பொம்மை வடிவில் பல்வேறு இறை ஸ்வரூபங்கள், மஹான்கள், தேசத்தலைவர்கள், சங்கீத மும்மூர்த்திகள், பிறகு மிருகங்கள், பறவைகள் மரம் செடி கொடிகள் என  எல்லாவற்றையும் இறைவனாக பாவித்து வணங்கும் உன்னத தத்துவம் நமது சனாதனம்.

‘சிறுமியரெல்லாம் தேவி
யின் வடிவம்’ என்று பாடுவது பொய்யல்ல. அக்கம்
பக்கத்திலுள்ள பாலா  பெண் குழந்தைகளுக்கு பாதத்தில்  நலங்கு வைத்து, பூஜை செய்து, புத்தாடையோ அணிகலன்களோ பரிசாகத் தந்து மகிழ்வித்து மகிழ்கிறோமே இது தான் `கல் தோன்றி மண் தோன்றா’ தொன்மை கொண்ட ஹிந்து கலாச்சாரம்.

செய்யும் தொழிலே தெய்வமென்று கார்பரேட்கள் முதல் பெட்டிக் கடைகள் வரை ஆயுத பூஜை போட்டு விஜயதசமியன்று  வெற்றிப் படியில் ஏறுவது வரை கொண்டாட்டம் தான். துர்கா பந்தல் அமைத்தாலென்ன, கொலு வைத்தாலென்ன; கோலாட்ட மடித்தாலென்ன, கர்பா, தாண்டியா ஆடினாலென்ன, நவராத்திரி நம் அனைவருக்கும் பொதுவான கொண்டாட்டம், நம் வாழ்வியலோடு இணைந்த சனாதன கொண்டாட்டம்.

அடுத்த நவராத்திரியை ஆவலோடு எதிர்பார்ப்போம்…

=======

நல்ல  செய்தியே தலைப்புச் செய்தி!

வீட்டில் தெய்வங்கள் கொலு வீற்றிருக்கும் ஒன்பது நாளும் டி.விப்பெட்டி, போர்வை போர்த்திக் கொள்கிற வீடுகள் அதிகரித்து வருகின்றன.

கொலு பார்க்க நம் வீட்டுக்கு வரவேண்டியவர்களை அழைக்க, கொலு பார்க்க நாம் செல்ல வேண்டியவர்களிடம் தகவல் சொல்ல… அத்தோடு மொபைல்கள் மூலைக்குப் போய்விடுகிற வீடுகளும் அதிகரிக்கின்றன.

நம் குடும்பத்துக்கு சேவைகளை அன்றாடம் வழங்கும் தூய்மைப் பணியாளர், தலைச்சுமையாக காய்கறி, பழம் கொண்டு வரும் மூதாட்டி என பலரையும் அழைத்து உபசரிக்கும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன.

ரிட்டர்ன் கிஃப்ட்டில் பிளாஸ்டிக்கை குறைக்கும் குடும்பங்கள் அதிகமாகி வருகின்றன.