நம் தேசத்தில் ஆர்.எஸ்.எஸ் என அழைக்கப்படும் ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் தங்கள் சேவைப் பணி, தேசபக்தி, ஒழுக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக நன்கு அறியப்பட்டவர்கள். அதிகம் அறியப்படாமலேயே தினசரி இவர்கள் பல்வேறு தேசப்பணிகளையும் சமூகப் பணிகளையும் செய்து வருகின்றனர்.
தேசத்தில் எந்தப் பேரிடர் ஏற்பட்டாலும் மக்களுக்கு உதவ முதலில் வருபவர்கள் இவர்கள்தான். அவர்கள் உடனடியாக செயலில் இறங்கி மக்களுக்கும் ஏழைகளுக்கும் உதவுகிறார்கள். கடுமையான வெயில், கனமழை, வெள்ளம், உறைபனி, கரடுமுரடான ஆபத்தான நிலப்பரப்பு, கொடூரமான வன விலங்குகள் என எதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் உதவிக்கரம் நீட்டிய சம்பவங்கள் ஏராளம். தினசரி ஷாகாவில் அவர்கள் பெறும் நன்கு திட்டமிடப்பட்ட உடல் மற்றும் மனப் பயிற்சிகள் இவ்வகையான அனைத்து சிரமங்களையும் சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது.
அதனால்தான் ஸ்வயம்சேவகர்கள் தங்கள் தினசரி ஷாகாவிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறார்கள். கொரோனா பொதுமுடக்கக் காலத்திலும், தேசம் முழுவதும் மெய்நிகர் ஷாகாக்கள் நடத்தப்பட்டன. இந்த விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் அவர்களை தனித்துவமாக்குகிறது என்றால் அது மிகை அல்ல.
அதில் ஒரு சுவைமிகு சம்பவம்: சமீபத்தில் ஆந்திரா ஒரிசா எல்லைக்கு அருகே ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கொத்தபாலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்களான சில மீனவர்கள், அதிகாலை 3 மணியளவில் வழக்கம் போல் கடலுக்குள் சென்றனர். அவர்கள் கடலில் இருந்தபோது சூரியன் உதித்து காலை 8:00 ஆகிவிட்டது.
இவர்கள் தினமும் காலை 7 மணிக்குள் ஷாகாவில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 8 மணிக்கு ஆர்.எஸ்.எஸ் பிரார்த்தனையை பாடுவார்கள். அன்று அவர்கள் கடலில் இருந்ததால் ஷகாவில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை. ஆனால், அதைத் தவிர்க்கவும் அவர்கள் தயாராக இல்லை. எனவே, ஒரு படகின் ஒரு முனையில் காவிக்கொடியை ஏற்றி, வரிசையாக நின்று, வணக்கம் செலுத்தி, ‘நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே’ என்று ஆர்.எஸ்.எஸ் பிரார்த்தனையை பாடினர்.
அருகில் இருந்த மற்றொரு படகில் இருந்து இதனை பார்த்துக்கொண்டிருந்த சக மீனவர்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் அலைபேசியில் இதனை பதிவு செய்து இணையத்தில் பரப்பினர். இதுகுறித்து ஷாகாவை நடத்திய மீனவர்களிடம் கேட்டபோது, ஷகா நேரத்தில் அவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறும் போதெல்லாம், படகில் ஷாகா நடத்துவதை தெரிவித்தனர்.