பங்களாதேஷ் அரசியல் மாற்றத்தால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பாதிப்பு

பங்களாதேஷில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அண்டை நாடான நம் பாரதத்துக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும். இதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும். பங்களாதேஷிலிருந்து ஷேக் ஹசீனா விரட்டியடிக்கப் பட்டுள்ளார். அவர் பாரதத்தில் தங்கியுள்ளார்.

ஜமாத்தும், பங்களாதேஷ் தேசிய கட்சியும் ஆட்சியை கைப்பற்றி விட்டன. மாணவர்கள் போராட்டத்துக்கு பின்னணியாக செயல்பட்ட ஜமாத்தும், பங்களாதேஷ் தேசிய கட்சியும் பாரதத்தை எப்படி பார்க்கின்றன என்பதன் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நகர்வுகள் அமையும். ஷேக் ஹசீனா பங்களாதேஷின் ஆட்சியை நடத்தி வந்தவரை, பாரதத்துக்கு எதிரான செயல்பாடுகள் அந்த தேசத்தில் தலைதூக்காமல் பார்த்துக் கொண்டார்.

முன்பெல்லாம் வடகிழக்கு பாரதத்தைச் சேர்ந்த பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் பங்களாதேஷில் ஊடுருவி அங்கேயே மையம் கொண்டிருந்தன. ஆனால் ஷேக் ஹசீனா இதை முற்றிலுமாக ஒழித்துக் கட்டினார். பாரதத்தின் நம்பிக்கைக்கு உரியவராக ஷேக் ஹசீனா செயல்பட்டதைப் போல இப்போதைய பங்களாதேஷ் ஆட்சியாளர்கள் செயல்படுவார்களா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

2015ம் ஆண்டு நவம்பர் மாதம் பங்களாதேஷிலிருந்து பாரதத்துக்கு உல்பா அமைப்பின் பொதுச் செயலாளர் அனுப்சேத்தியா அனுப்பி வைக்கப்பட்டார். போராளியாக செயல்பட்டு வந்த அவர், பிரதான அரசியல் நீரோட்டத்தில் சங்கமித்தார். இதனால் அஸ்ஸாமில் அமைதி முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இதைப்போல பல உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும். பாரதத்துக்கும் பங்களாதேஷுக்கும் இடையே 4,096 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட நெடிய எல்லைப் பகுதி உள்ளது. பாரதம் மற்ற தேசங்களான சீனா, மியான்மர், பூடான் ஆகியவற்றுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். பாரதத்துக்கும், அண்டை நாட்டுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ஊடுருவல்காரர்களை தடுத்து நிறுத்துவது சாத்தியமாகி விடும். இதனால் பயங்கரவாதிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அனுசரணையாக செயல்பட்டு வரும் வடகிழக்கு மாநில அரசுகள் சில இந்த தடுப்பு வேலிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தடுப்பு வேலி அமைத்தால் நமக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே உள்ள பாரம்பரிய தொடர்பு முற்றிலுமாக சீர்குலைந்து விடும். எனவே தடுப்பு வேலி அமைப்பதை ஆதரிக்க முடியாது. தங்கு தடையற்ற தொடர்பு இப்போது உள்ளதைப் போல தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று இந்த மாநில அரசுகள் வற்புறுத்தி வருகின்றன. மிசோரம் சட்டசபையில், பாரதத்துக்கும், மியான்மருக்கும் இடையே தடுப்பு வேலி அமைப்பதை ஏற்க முடியாது என இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாகாலந்து அரசும் தடுப்பு வேலி அமைக்கும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மாநில அரசுகளுக்குப் பின்னணியில் சர்ச்சுகளைச் சேர்ந்த பாதிரிகள் உள்ளனர் என்ற உண்மையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்திலும், மணிப்பூரிலும் உள்ள பாஜக அரசுகள் தடுப்பு வேலிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. குறிப்பாக மணிப்பூர் முதல்வர் என்.பிரேன்சிங், மாநிலத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, நாடுதழுவிய இறையாண்மை ஆகியவற்றுக்கு குந்தகம் ஏற்பட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார். அன்னியர்களின் ஊடுருவலை முறியடிப்போம். பாரத மக்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் சரணாலயமாக மீண்டும் பங்களாதேஷ் உருவெடுத்து வருகிறது என்பதற்கான அறிகுறிகள் புலப்படுகின்றன. இங்கிருந்து பங்களாதேஷுக்கு பயங்கரவாதிகள் செல்வதும், பங்களாதேஷில் இருந்து பயங்கரவாதிகள் இங்கு வருவதும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளின் அத்துமீறலும் அட்டூழியமும் வடகிழக்கு மாநிலங்களுடன் முடிவடைந்து விடாது. வடகிழக்கு மாநிலங்களை பாரதத்துக்குள் புகுவதற்கான நுழைவு வாயிலாக பங்களாதேஷை பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து பாரதத்தின் எல்லா பிராந்தியங்களுக்கும் அவர்கள் செல்கிறார்கள். அவர்களுக்கு இங்குள்ள சிலரும் உடந்தையாக உள்ளனர். இந்த ஊடுருவலையும், பயங்கரவாதிகள் பல்வேறு மாநிலங்களுக்கு பரவுவதையும் தடுக்க உறுதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இதில் அசிரத்தையாக இருந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். பல மாநிலங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் எண்ணிக்கை வெகுவேகமாக உயர்ந்துள்ளதற்கு இந்த ஊடுருவலும், பரவலும்தான் பிரதான காரணம்.

அகர்தலாவுக்கும், நியூ அலிப்பூர் ரயில்வே நிலையத்துக்குமிடையே இந்த ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை 44 பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட இந்திய ஏஜெண்ட்டும் கைது செய்யப்பட்டார். ஊடுருவலை வேரறுக்கவும், பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கவும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கினால் மட்டுமே அசம்பாவிதங்களை அருக வைக்க முடியும்.

கட்டுரையாளர்: செய்தியாளர்

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி