நீலம்பேரூர் படையணி திருவிழா

கேரளாவில் நீலம்பேரூரில் சுமார் 1,850 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதாக நம்பப்படும் ‘நீலம்பேரூர் படையணி’  திருவிழா அங்குள்ள பள்ளி பகவதி கோயிலில் நடைபெறுகிறது. இந்த படையணி திருவிழா மலையாள கேரள ஆண்டு சிங்கம் மாதத்தில் (ஆகஸ்ட் அல்லது செப்டம்பர்) வருகிறது. ‘திருவோணம்’ நட்சத்திரத்திற்குப் பிறகு, அவிட்டம் நாளில் தொடங்கும் படையணி கொண்டாட்டங்கள், பகவதி பிறந்த நாளைக் குறிக்கும் பூரம் நட்சத்திரம் வரை தொடர்கிறது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேவிகள், அன்னம் உள்ளிட்ட அழகிய உருவங்களை அணிவகுப்பு, சிறப்பம்சங்கள் ‘கெட்டுகழ்சா’ (சம்பிரதாயப்படி ‘விரதம்’ எடுக்கப்பட்டவர்களின் தெய்வீக நடனம் போன்றவை இடம்பெறும். இந்த கொண்டாட்டங்கள் இரவு தொடங்கி விடியற்காலைவரை நடைபெறும். இக்சோரா மலர்கள், தாமரை இலைகள், தேங்காய் பனை இலைகள், வாழைத்தண்டு போன்ற இயற்கை பொருட்களால் அனைத்து உருவங்களும் அலங்கரிக்கப்படும் மிகவும் இயற்கையான திருவிழா இது. இவ்விழாவில், இந்த ஆண்டு பூரம் படையணி ஏற்பாட்டாளர்கள், பாரத மாதாவின் உருவத்தை ‘பாரதாம்பா’ என்ற அழகிய கோலமாக கொண்டு வந்தனர். சமீபத்திய ஆண்டுகளில் சுதந்திரத்திற்குப் பிறகு பாரதம் மீண்டும் எழுவதை நினைவுகூரும் வகையிலும் சுதந்திர அமிர்த மகோத்சவத்தை முன்னிட்டும் பாரதாம்பா அலங்காரம் இவற்றில் சேர்க்கப்பட்டது. இது தேசப்பற்றையூட்டும் மிகவும் கவர்ச்சிகரமான நிகழ்வாக அமைந்தது. தெய்வ உருவங்களை தயாரிக்கும் அதே பாரம்பரிய முறையில் பாரதாம்பா உருவம் தயாரிக்கப்பட்டது. மேலும், வழிபாடுகள், சம்பிரதாயங்கள் அனைத்தும் அதே பாரம்பரிய முறையில் மேற்கொள்ளப்பட்டது. 2,000 ஆண்டுகள் பழமையான நீலம்பேரூர் படையணி கலாச்சாரத்தில் இந்த ஆண்டு முதல்முரையாக நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவுகள் இடம் பெறுவது அங்குள்ள ஹிந்துக்கள் மகிழ்ச்சியளித்துள்ளது.