நீதிபதிகளின் கருத்தை திரும்பப்பெற வேண்டும்

பா.ஜ.கவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜே.பி பர்திவாலா தலைமையிலான அமர்வு, முகமது நபியைப் பற்றிய தனது கருத்துக்களால் கொடூரமான உதய்பூர் கொலைகளுக்கு அவரே பொறுப்பு. அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் நாடு முழுவதும் மத உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டதால் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கு அந்தப் பெண்மணியே பொறுப்பு என்றும் கூறியது. இது நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிபதிகள் கூறிய இக்கருத்துக்கு எதிராக பொதுமக்கள் கொதிப்படைந்து வரும் நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இதுகுறித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கௌ மகாசபா தலைவரும் சமூக ஆர்வலருமான அஜய் கௌதம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நூபுர் சர்மாவுக்கு எதிரான நீதிபதிகளின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும். நீதிபதிகளின் வாய்வழி கருத்துகளுக்குப் பிறகு நுபுர் சர்மாவுக்கு நியாயமான விசாரணை மறுக்கப்படலாம். நீதிமன்றத்தின் இந்த கருத்துகள் தேவையற்றவை, எந்தத் தகுதியும் இல்லாதவை எனவே அவை திரும்பப் பெறப்பட வேண்டியவை” என கோரிக்கை விடுத்ததுடன் “விசாரணை அல்லது மேல்முறையீடு அல்லது எந்த நீதிமன்றத்தின் தீர்ப்பும் இல்லாமல் நீதிமன்றம் அத்தகைய அறிக்கைகளை வழங்க முடியுமா? இத்தகைய கருத்து வழக்கு மற்றும் விசாரணையின் தன்மையை பாதிக்குமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து டைம்ஸ் நவ்விடம் பேசிய அஜய் கௌதம், “நுபுர் ஷர்மா குற்றவாளியா இல்லையா என்பதை எந்த விசாரணையும் அல்லது எந்த நீதிமன்றமும் முடிவு செய்யாத நிலையில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தது அதிர்ச்சியளிக்கிறது. நீதிபதிகள் உட்பட அனைவரும் சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்ற வேண்டும். இதுபோன்ற கருத்துகளை சட்டத்தின் ஆட்சி அனுமதிக்காது. மற்றவர்கள் செய்த வன்முறைக்கு நுபுர் ஷர்மாவை குற்றம் சாட்டுவது தவறானது. நீதிபதிகளின் கருத்து கன்னையா லால் கொடூரமாக தலை துண்டித்து கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதாகவும் கொலையாளிகளின் கருத்தை நியாயப்படுத்தி அவர்களை குற்றமற்றவர்கள் என கூறுவதை போலவும் உள்ளது” என கூறினார்.