ஆங்கிலேயர்கள் நம்மை வீழ்த்தி அடிமை செய்யக் கையிலெடுத்த மிக வலுவான யுக்தி வணிகம். அந்த ஆயுதத்துக்கு அதே வலுவோடு எதிர்க்க “சுதேசியம்” என்ற கொள்கைதான் என்பதை மிகத் தெளிவாக அன்றே கணித்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.
பிரதமர் “vocal for local” அதாவது, “உள்ளூர் மக்களுக்கு குரல் கொடுங்கள்” என்ற மந்திரத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி, மக்கள் விழிப்புணர்வுள்ள நுகர்வோராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சென்ற வாரம் உள்ளூர் தயாரிப்புகளை ஆதரிக்க ஒரு தேசிய இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தார் பிரதமர். அப்போது அவர் இது மோடி சொல்வது மட்டுமல்ல, ஒவ்வொருவரும் இதை சொல்ல வேண்டும் என்றார். நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற வேண்டும் என்றால், ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒவ்வொரு தலைவரும், தங்கள் தயக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் நலனுக்காக பாடுபட வேண்டும். மக்களிடையே சுதேசி உணர்வை எழுப்ப வேண்டும் என்றார்.
அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் பொருட்களைக் கூட கவனமாக தேர்ந்தெடுத்து ஒவ்வொருவரும் வாங்கும் பொழுது நம் நாட்டின் தயாரிப்பு மேலும் அடுத்த நிலைக்கு செல்லக்கூடும். அது நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவு உதவும். ஒவ்வொருவரும் முதலாளியாகவும் மாறுவதற்கு பல வாய்ப்புகளை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அதில் பயன் பெற்றோர் ஏராளம்.
மேலும் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். சொந்த நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்தும் போது தயாரிப்புகளில் தரம் உயரும். அதிகமாக வாங்கும் போது நிறுவனங்கள் மதிப்புமிக்கதாக மாறும். இதன் விளைவாக வெளிநாட்டினரும் அவற்றை வாங்க தொடங்குவார்கள். இதன் விளைவாக உரிமையாளர்களுக்கு கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுவார்கள். இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
நம் நாட்டில் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து பொருட்களை வாங்கும் போது நம் அரசாங்கம் பயனடைகிறது. அப்படி இருந்தும், பெரும்பாலான லாபம் நாம் எந்த பொருட்களை வாங்குகிறோமோ, அந்த நாட்டிற்கு செல்கிறது. அதன் விளைவாக அது அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு உதவுகிறது.
தற்போது கொண்டாடப்படும் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளில், சுதேசிப் பொருட்களை வாங்கி, நாமும் பயன் பெற்று நம் நாட்டையும் முன்னேற்றுவதற்கு பாடுபடுவோம் என்று உறுதி ஏற்போம்.
சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, தேசபக்தி மற்றும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மேலும் பொருட்களை வாங்குவதன் மூலம் கைவினைப் பொருட்களை உருவாக்க அயராது மற்றும் ஆர்வத்துடன் உழைக்கும் மக்களை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.
சமையல் எண்ணெய், உணவு, மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனங்கள், சுகாதாரம் சம்பந்தமான பொருட்கள், பற்பசைகள், சோப்புகள் ஷாம்புகள், குளிர்பானங்கள், நாட்டு நெய், பருப்பு வகைகள் மற்றும் பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட மாவு மற்றும் மசாலா பொருட்கள் இவற்றை தேர்வு செய்யலாம்.
அன்றாடம் வீட்டில் உபயோகிக்கப்படும் ஒவ்வொரு பொருட்களும் நம் நாட்டுப் பொருட்களாக இருக்க நாம் ஆர்வமாக இருப்போம், தேர்வு செய்வோம், பயனடைவோம், நம் நாட்டையும் முன்னேற்றுவோம். இது ஒவ்வொரு குடிமகனின் கடமையாக கருதுவோம்.