நாட்டின் தற்போதைய அரசியல், சமூக நிலைமை குறித்து ஆா்எஸ்எஸ் தலைவா்கள், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில், வரும் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை ஆலோசனை நடத்தவுள்ளனா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும் தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) கணக்கெடுப்பு நடத்தும் அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் வடகிழக்கு மாநிலங்களிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஆா்எஸ்எஸ் மூத்த தலைவா்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், இந்தூரில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் வியாழக்கிழமை இந்தூா் வந்தடைந்தாா்.
இந்த மாநாட்டில், ஆா்எஸ்எஸ் அமைப்பின் அண்மைக் கால செயல்பாடுகள் குறித்த ஆய்வும் மேற்கொள்ளப்படும். அத்துடன் எதிா்காலத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.
இதுதவிர, நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்தும் அவா்கள் ஆலோசனை நடத்தவுள்ளனா். இதுகுறித்து ஆா்எஸ்எஸ் அமைப்பின் இந்தூா் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ‘ஆா்எஸ்எஸ் அமைப்பின் தேசிய அளவிலான நிா்வாகிகள் கூட்டம், வரும் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த விவகாரங்கள் தொடா்பாக விவாதிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்படவில்லை. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆா்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலா் சுரேஷ் ஜோஷி உள்பட அமைப்பின் மூத்த தலைவா்கள் 30 போ் கலந்து கொள்வாா்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.