சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், பிழைப்பு தேடியும், ஆக்கிரமிப்பாளர்களால் சொந்த பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களுமான நாடோடிகளை பற்றியது தான் இந்த கட்டுரை. அலைந்து கொண்டே இருக்கும் இந்த சமூகத்தினரின் மாநாட்டினை பற்றியது.
பாரதம் முழுவதும் வாழ்ந்து வரும் நாடோடிகள் (Nomadic Tribes – NT), குடியேறிய நாடோடிகள் (Semi-Nomadic Tribes – SNT) மற்றும் ஆங்கிலேய கிறிஸ்தவர்களினால் இயற்றப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்திலிருந்து விடுதலைப் பெற்ற சமூகங்கள் (Denotified Tribes – DNT) என 1526 ஜாதிகள் இருப்பதாக இடேட் கமிஷன் (Idate Commission) 2017ன் மூலமாக நாம் அறிகிறோம். ஜனத்தொகையில் இவர்கள் 10% இருக்க வாய்ப்புள்ளது. ஆம், இதுவரை இவர்களைப் பற்றிய சரியான ஆய்வுகள் இல்லை என்பதனால் வாய்ப்புள்ளது என்று பதிவிடுகிறோம்.
ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் முயற்சினால் துவங்கப்பெற்ற “பட்கே விமுக்த கல்யாண்காரி பரிஷத் (நாடோடிகள் நல மேம்பாட்டுப் பேரவை)” மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நாடோடிகள் மற்றும் ஆங்கிலேய கிறிஸ்தவர்களினால் இயற்றப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்திலிருந்து விடுதலைப் பெற்ற சமூகங்களின் மேம்பாட்டிற்கு பல பணிகளை செய்து வருகிறது. வஞ்சிக்கப்பட்ட இந்த சமூகங்களின் வளர்ச்சிப்பணியில், கல்வி, ஆரோக்கியம், திறன் வளர்ப்பு என பல்வேறு துறைகளிலும் இந்த தொண்டு நிறுவனம் பணியாற்றி வருகிறது.
நாடோடிகள் சங்கமம்
விராட் பரிஷத் -நாடோடிகளின் மாபெரும் மாநாடு
”முழு சமூகமும் நம்முடன் இணைத்தே முன்னேறுவதே நம் குறிக்கோள்”….., இந்த சங்கப் பாடலின் நடைமுறை வடிவத்தை பட்கே விமுக்த கல்யாண்காரி பரிஷத்தின் பணியினில் நாம் காணலாம். “சகோதரத்துவமே நமது மதம்” என்ற முழக்கத்தடன் மஹாராஷ்ட்ரத்தில் பல ஆண்டுகளாக இத்திருப்பணி நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிராவின் விதர்பாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை “விராட் பரிஷத்” என்ற நாடோடிகளது சங்கம நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு நாக்பூரில் உள்ள கிட்டி கதான் வளாகத்தில் 2025 பிப்ரவரி 20,21 தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏழாவது, விராட் பரிஷத் வளாகம் ராஜமாதா அஹில்யாதேவி ஹோல்கர் வளாகம் என்று பெயரிடப்பட்டது. பல மாவட்டங்களிலிருந்து இருபத்தொரு சமூக குழுக்களைச் சேர்ந்த ஆயிரத்து முந்நூற்று இருபத்தேழு சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் இணைந்தனர்.
நாடோடி சமூகங்களிலிருந்தும் ஏனைய சமூகங்களிலிருந்தும் உள்ள துறவிகள், சான்றோர்கள், மாணவர்கள், அதிகாரிகள், தொழில்முனைவோர், மருத்துவர்கள், பொறியாளர்கள், சமூக சேவையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் இந்த விராட் பரிஷத்தை காண வந்திருந்தனர்.
பட்கே விமுக்த கல்யாண்காரி பரிஷத்தின் சேவைப்பணிகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி அனைவரையும் ஈர்க்கும் விதமாக அமைந்தது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலத்தில், ஒழுக்கத்தையும் நாகரிகத்தையும் நன்றாகக் காணமுடிந்தது. கலாச்சார நிகழ்ச்சிகள் மனதிற்கு நிறைவினை அளித்தது.
இந்த இரண்டு நாள் விராட் பரிஷத்தில், மகாராஷ்டிரா அரசாங்கத்தின் பல்வேறு துறையைச் சார்ந்த அமைச்சர்கள், மாவட்ட நீதிபதிகள், ஆணையர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட சமூக உறுப்பினர்களுடன் நேரடியாக உரையாடினர். அவரது சிரமங்களைப் புரிந்துகொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அனைவருக்கும் சுகாதாரம் விழிப்பிணர்வு முகாமும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விராட் பரிஷத் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக்க சீறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பங்கேற்ற அனைத்து பிரதிநிதிகளுக்கும் ஒரு துணிப் பை, ஒரு ஸ்டீல் உணவுத் தட்டு மற்றும் தண்ணீர் கோப்பை வழங்கப்பட்டது. அனைவரும் தங்குவதற்கு அவரவர் சொந்த குடியுருப்புகளில் உள்ளது போலவே கூடாரங்கள் அமைக்கப்பட்டது. இனிமையான அனுபவங்களை தங்களுடன் சுமந்துகொண்டு அனைவரும் அவரவர் குடியிருப்புகளை நோக்கிப் புறப்பட்டனர். நமது உரிமைகளைப் பெறுவோம், நாமும் பொது சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் இணைவோம் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் இனிதே விடைபெற்றனர்.
நாடோடி சமூகத்தை மேம்படுத்த இதைப்போன்ற நிகழ்வுகள் பாராட்டுவதற்கு மட்டுமல்ல, நாமும் நம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்ளலாம். சங்க ஸ்வயம்சேவகர்களின் பங்களிப்பினால் இந்நிகழ்ச்சி நல்ல ரீதியில் அமைந்தது.
இந்த விராட் பரிஷத்தில், சமூக நல்லிணக்கம் காணப்பட்டது, குடும்ப நல விழிப்புணர்வு ஏற்பட்டது, சுற்றுச்சூழல் கவனிக்கப்பட்டது, சுதேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது மற்றும் நல்ல குடிமக்களின் கடமைகளும் பின்பற்றப்பட்டன. மனித நேயத்தின் சங்கமமான இந்த விராட் பரிஷத் பஞ்ச் பரிவர்த்தனின் (ஐந்து அமுதம்) தொடக்கமாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத இணை மக்கள் தொடர்பு பொறுப்பாளர் சுணில் தேஷ்பாண்டே, ஆர்.எஸ்.எஸ் அகில பாரத செயற்குழு உறுப்பினர் துர்காதாஸ் வியாஸ் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு வழிகாட்டினார்கள்.
ஹிந்தியில்: ஸ்ரீகாந்த் திஜாரே,பட்கே விமுக்த கல்யாண்காரி பரிஷத்
தமிழில்: எம்.சீதா, தலைவர்
நரிக்குறவர் கல்வி மற்றும் நல சங்கம் திருச்சி.