நல்ல பண்புகளே: அந்த ராம சேவகனின் வெற்றி ரகசியம்

சொல்லுக்கு ஹனுமான் என்ற வழக்கு உண்டு. சுக்ரீவனின் மந்திரியான ஹனுமான் முதலில் ராம, லட்சுமணனை சந்திக்கும்போது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதும் மிக உயர்வான பண்பட்ட உரையாடல். ஹனுமான், லட்சுமணன் இருவரும் வியாகரண பண்டிதர்கள். இருவரையும் பேச வைத்து ஸ்ரீராமர் ரசித்துக் கேட்கிறார்.

வாலி வதம் நடக்கின்றது. பிறகு சுக்ரீவன் கிஷ்கிந்தைக்கு அரசன் ஆகிறான். அரசன் ஆன பிறகு குறித்த நேரத்தில் ராமனை சந்திக்கச் செல்லவில்லை. அதனால் கோபமடைந்த ராமன் லட்சுமணனை அனுப்பினார். லட்சுமணன் கோபமாக வருவதை உணர்ந்த ஹனுமான் சமயோஜிதமாக சுக்ரீவனுக்குப் பதில் தாரையை முதலில் லட்சுமணனைச் சந்திக்க வைக்கிறார். தாரை சிறந்த அறிவாளி. அவளைப் பார்த்ததும் லட்சுமணன் கோபம் சற்று குறைகிறது. அவள் லட்மணனிடம், நீங்கள் பண்பட்ட மனிதர். நாங்களோ குரங்கினம். விலங்கு. சிறியவர்கள் செய்யும் தவறைப் பெரியவர்கள் மன்னிப்பது வழக்கம். பல மகான்களே பொன்னுக்கும் பொருளுக்கும் அடிமையாகும் போது சுக்ரீவனைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? அவன் தன் வாக்குறுதியை மறந்ததில் எந்தவித வியப்பும் இல்லை. தயவு கூர்ந்து அவனை மன்னித்து விடுங்கள்” என்று கேட்டாள். லட்சுமணன் கோபம் முற்றிலும் தணிந்தது. ஹனுமான் கடல் தாண்டி இலங்கை செல்லும்போது மூன்று இடையூறுகள் வந்தது. பொது வேலை செய்பவர்களுக்கும் இதேபோன்ற நிலை வருவதுண்டு. அன்புத்தொல்லை, சில சங்கடங்கள், சோதனைகள். மைனாகம் என்ற மலை, வெகுதூரம் பயணம் செய்யும். ஹனுமான் தன்மீது சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுக்கக் கூறியது. அப்போது ஹனுமான் ராம காரியம் முடியும்வரை எனக்கு ஊண், உறக்கம் கிடையாது என்றான். எடுத்துக் கொண்டுள்ள வேலையில் முனைப்பு தேவை என்பதை ஹனுமான் பதில் நமக்கு உணர்த்துகிறது.

சுரஸா என்ற நாக கன்னிகை ஹனுமானிடம் இந்த வழியாகச் செல்லும் எந்தப் பிராணியும் என் வாயில் புகுந்து தான் வெளியேற வேண்டும் என்று கூறி ஹனுமானைத் தடுத்தாள். எனது பெரிய சரீரம் உனது வாயில் எப்படிப் போகும் என்று கேட்க, சுரஸா முடிந்த வரை வாயை அகலத் திறந்தாள். பிரச்சினை மேலும் வளராமல் இருக்க ஹனுமான் சிறிய உருவம் எடுத்து சாதுர்யமாக வெளியே வந்ததில் இடையூறுகளை சமாளித்து முன்னேறுவது முக்கியம் என்ற பாடம் நமக்கு லாபம்.

மூன்றாவது சிம்ஹிகை என்ற அரக்கி ஹனுமானை நிழலை வைத்தே தன் பக்கம் பிடித்து இழுத்தாள். சினம் கொண்ட ஹனுமான் அவளது வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தார். ஹனுமானின் அசாத்தியமான திறமை இதன் மூலம் தெரிகின்றது. சோதனைகளைச் சாதகமாக மாற்றும் ஆற்றல் படைத்தவர் ஹனுமான்.

இலங்கை நகருக்குள் சென்ற ஹனுமான் அசோகவனத்தில் சீதையைப் பார்த்து அவளுக்கு ஆறுதல் கூறித் தன்னம்பிக்கையை ஊட்டினான். ராமர் வானரப் படைகளுடன் எப்படி இலங்கையை அடையமுடியும் என்று நம்பிக்கை இழந்தவளாகக் கேள்வி கேட்டாள் சீதை. அப்போது ஹனுமான் சீதையிடம் அங்குள்ள வானரங்களில் மிகவும் திறமை குறைந்த வானரம் நான் தான். நானே இங்கு வந்ததால் மற்றவர்களுக்கு கஷ்டம் இல்லை என்று கூறி சீதைக்கு நம்பிக்கையூட்டினான். இந்தப் பணிவு ஹனுமானின் பண்புகளில் ஒன்று.  இலங்கையிலிருந்து கிளம்பிய ஹனுமான் கடல் தாண்டி சீதையைப் பார்த்த விஷயத்தை ராமனிடம் சொன்ன முறை உண்மையில் அவன் சொல்லின் செல்வன் என்று நிரூபித்தது. கண்டேன் சீதையை” என்று தான் முதல் வாக்கியம் பேசினான்.

ராம – ராவண யுத்தம் நடந்தது. இந்திரஜித் பிரம்மாஸ்திரம் ஏவியதால் பலத்த சேதம் ஏற்பட்டது. லட்சுமணன் இறந்தது போல் மயங்கி விழுந்துவிட்டான். ராமன் வேதனை அடைந்தார். பல வானரங்கள் இறந்தன. அப்போது அங்குள்ள வைத்தியர் அறிவுரையின் படி ஹனுமான் தான் சஞ்சீவினி மூலிகை எடுக்க இமயமலை சென்றான். மூலிகை எது என்று சரியாகத் தெரியாதலால் மூலிகை மலையையே பெயர்த்துக் கொண்டு வந்தான் ஹனுமான். யாராலும் செய்ய முடியாத வேலையை  செய்து முடிப்பது தான் ஹனுமானின் விசேஷம். அதனால் தான் ஹனுமானைக் குறிப்பிடும் போது ‘அஸாத்தியம் ஸாதக ஸ்வாமி’ என்கிறோம்.

ராமர் பட்டாபிஷேகம் நடக்கும் போது ஹனுமான் அரியணையைத் தாங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ராமர் சொர்க்கம் செல்லும் போது ஹனுமான் அவருடன் செல்லாமல் இந்தப் பூவுலகில் இருந்து கொண்டு ராமர் கதை நடக்கும் இடங்களில் அமர்ந்து ராம பக்தியில் திளைக்கப் போகிறேன் என்று கூறினார் ஹனுமான்.