இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஆமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து சபர்மதி ஆசிரமத்திற்கு பிரதமர் மோடியுடன் சென்று பார்வையிட்ட டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தை திறந்து வைத்தனர். ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சிக்காக மைதானத்திற்குள் பிரதமர் மோடியும் டிரம்ப்பும் வந்த போது மக்கள் ஆரவாரம் எழுப்பினர். பிறகு இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. அரங்கம் நிறைந்த பார்வையாளர்களை பார்த்து மோடியும், டிரம்ப்பும் உற்சாகமாக கையசைத்தனர்.
நமஸ்தே என கூறி டிரம்ப் பேசத்தொடங்கினார். அவர் பேசியதாவது:
அமெரிக்கா, இந்தியாவை மதிக்கிறது. இந்திய மக்களின் நெருங்கிய நண்பனாக அமெரிக்கா என்றும் இருக்கும். இதுபோன்ற சாலை நெடுகிலுமான வரவேற்பை நான் எப்போதும் பார்த்ததில்லை. இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டாக உள்ளது. டீ விற்பனையாளராக இருந்தவர் நாட்டின் தலைவராகியுள்ளார். இவர் இரவு பகலாக உழைக்கிறார். மோடியை அவ்வளவு சீக்கிரம் கணிக்க முடியாது. அவர் கடினமானவர்.
பயங்கரவாத முகாம்கள்
இந்தியா மிகவும் செழுமையான நாடாக திகழ்கிறது. இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச வந்துள்ளேன். இந்தியாவின் பாதுகாப்பிற்கு நவீன ஆயுதங்களை தர தயாராக உள்ளோம். மிகச்சிறப்பான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக இருக்கிறது. அத்துடன் சேர்த்து சுமார் 20 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகிறது. பாக்., எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தனிச்சிறப்பு வாய்ந்த ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்க உள்ளோம். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதத்தை அழித்து வருகிறோம். அதன் தலைவன் பாக்தாத்தை அமெரிக்க அழித்துவிட்டது. பாதுகாப்பு காரணமாகவே அமெரிக்கா வருவதற்கு கடும் கட்டுபாடுகள் இருக்கின்றன. இருநாட்டுக்கு இடையிலான வர்த்தகம் 40 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்கு சென்று வந்ததை பெருமையாக கருதுகிறேன். ஒளிமயமான எதிர்காலத்திற்கு மக்கள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.