கடைக்குப் போகிறோம், குளியல் சோப்பு, பற்பசை வாங்க. வழக்கமான பிராண்ட்தானா என்று பார்த்து நம்பி வாங்குகிறோம். வீட்டுக்கு வந்து விடுகிறோம். இந்த சோப்பையோ பற்பசையையோ இயற்கை வளங்களை பயன்படுத்தி தயாரிக்கிறார்களா என்று எப்போதாவது நாம் யோசித்ததுண்டா?
இந்த சோப்பு, பற்பசை தயாரிப்பினால் சுற்றுச்சூழலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என்று நாம் யோசித்ததுண்டா?
உற்பத்தி செய்யும்போது உருவாகும் கழிவுகளால் எந்த அளவுக்கு என்ன விளைவு ஏற்பட்டிருக்கும் என்று நாம் யோசித்ததுண்டா?
சோப்பு, பற்பசை பேக்கேஜிங்கை அகற்றுகிறோம். அது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறதா என்று நாம் யோசித்ததுண்டா?
உற்பத்தியின்போது உருவாகும் கழிவுகள் காற்றில், நீரில், மண்ணில் என்ன விளைவு ஏற்படுத்தும் என்று நாம் யோசித்ததுண்டா?
மறுசுழற்சிக்கு ஏற்ற கழிவுகளா என்று நாம் யோசித்ததுண்டா?
நாம் யோசித்ததில்லை என்றாலும் மத்திய அரசு நமக்காக (சுற்றுச் சூழலுக்காக) யோசிக்கிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ‘ஈகோ மார்க்’ (Eco mark) என்ற திட்டத்தை சென்ற வாரம் அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.
நாம் வாங்கும் பொருள்களில் பற்பசையும் சோப்பும் ஒரு உதாரணத்திற்காக இங்கே குறிப்பிடப்பட்டது. பின்வரும் பொருள்கள் உள்பட எத்தனையோ தயாரிப்புகளுக்கு
(ஐ.எஸ்.ஐ அடையாளம் போல) ஈகோ மார்க் அவசியம் என்பது மத்திய அரசின் எதிர்பார்ப்பு:
வண்ணப்பூச்சுகள், காகிதம், பிளாஸ்டிக், அழகுசாதனப் பொருட்கள், ஜவுளி, பேட்டரி, சோப்பு. தேநீர், காபி, மரச் சாமான்கள், எரிபொருள்கள், வனஸ்பதி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள். எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக் பொருட்கள், பேக்கிங் / பேக்கேஜிங் பொருட்கள், லூப்ரிகேட்டிங்/ எண்ணெய், மருந்துகள், உணவு சேர்மானங்கள், பூச்சிகொல்லிகள், தோல்.
ஈகோ மார்க் (Ecomark) என்பது இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) மூலம் சுற்றுச்சூழலில் குறைந்தபட்ச தாக்கத்தை நோக்கமாகக் கொண்ட தரநிலைகளின் தொகுப்பிற்கு இணங்கக்கூடிய தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ் முத்திரை.
ஈகோ மார்க் திட்டம் நாடு முழுவதுக்கும் பொருந்தும். சந்தையில் சூழல் நட்பு தயாரிப்புகளை அடையாளம் காண ஈகோ மார்க் உதவுகிறது. ஈகோ மார்க் சான்றிதழுக்கு தகுதியான அனைத்து பொருட்களும் பாதுகாப்பு, தரம், செயல்திறன் ஆகியவற்றுக்கான (ஐ.எஸ்.ஐ) முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும்.
தயாரிப்புகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஈகோ மார்க அடையாளம் தாங்க அனுமதிக்கப்படுகின்றன, பின்னர் மதிப்பாய்வு செய்யப்படும்.
ஈகோ மார்க் கொண்ட எந்தவொரு பண்டத்தையும் பகுப்பாய்வு செய்ய பாரத தர நிர்ணய அமைப்பு (BIS) மாதிரிகளை சேகரிக்கிறது. இந்த புதிய திட்டத்தின்படி சான்றிதழுக்காக இருக்கும் பொருட்களின் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் விளைவுகள் மதிப்பிடப்படும்.