நத்தம் புறம்போக்கு நிலத்தில் சர்ச் கட்டுமானம்

ஈரோடு மாவட்டம் இளையாம்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘மொடக்குறிச்சி தாலுகா பூந்துறை சேமூர் கிராமத்தில் நத்தம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சி.எஸ்.ஐ மற்றும் எஸ்.டி.ஏ என்ற பெயர்களில் சர்ச் கட்டி உள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புறம்போக்கு நிலத்தை மத ரீதியான காரணங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என 2006ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில அரசின் அரசாணையும் உச்ச நீதிமன்ற உத்தரவும் மீறப்பட்டுள்ளது. வருவாய் துறை அதிகாரிகளிடம் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி நிலம் தங்கள் அனுபவத்தில் இருப்பதாக ஆவணங்களில் பதிவிட்டுள்ளனர். கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கு எவ்வித திட்ட அனுமதியும் பெறாமல் கட்டுமானப்பணியை மேற்கொண்டுள்ளனர். மனு மீது உத்தரவு பிறப்பிக்க ஈரோடு வருவாய் கோட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். பூந்துறை சேமூரில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் உட்பிரிவு ஏற்படுத்தி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கட்டுமானப் பணியை தடுத்து  நிறுத்த வேண்டும்” என அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஈரோடுஆட்சியர் இதற்கு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 13க்கு தள்ளி வைத்துள்ளது.