* ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்து, அது நிராகரிக்கப்பட்டவுடன், நடிகர் விஷால் ஆடிய ஆட்டம், போட்ட வேடங்கள், டிவிக்களில், சீரியல் தொடர்களை மிஞ்சிய பரபரப்பு. இப்போது தேர்தல் முடிந்து இந்நேரம் ரிசல்ட் வந்திருக்கலாம்! விஷால் எங்கே? அதுதான் நடிப்பு. அதுதான் சினிமா!
* கமல்ஹாசன் நடித்த பிரபல டிவி ஷோ ‘பிக்பாஸ்’ – அதன் தொடக்கமே அரசியல் ‘பூஞ்சை’யோடு ஆரம்பமானது. விறுவிறுப்பு குறைந்தபோதெல்லாம் கமல் அன்றைய அரசியலை அவிழ்த்து விட்டு ‘பிக்பாஸ்’ டிஆர்பி-ஐ தக்கவைப்பார். அடுத்த சி.எம். கனவில் இருந்த அவர் தன் ‘ரோலை’ காண்பிக்க வேண்டிய முக்கியமான நேரத்தில் ஆர்.கே. நகர் தேர்தலில் காண்பிக்கவே இல்லை! திடீரென வந்து போவதற்கு அரசியல் ‘பிக்பாஸோ’ சினிமாவோ இல்லை!
இந்த இரண்டு உதாரணங்களையும் இங்கே எழுதியதற்கு காரணம் இன்று தமிழ்நாட்டு அரசியலுக்குள் பிரவேசிக்க முதல்வர் கனவோடு பல சினிமா நடிகர்கள் அலைகிறார்கள். ரஜினி கூட வருவார் வருவார் என ஆசைகாட்டி, தனது புதிய பட ரிலீஸ்களுக்கு, தன் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்க திருவாய் மலர்ந்து அருளிவிட்டு, தியானம் செய்ய இமயமலைக்கு சென்றுவிடுகிறார்!
முதலில் இப்படி சினிமா நடிகர்கள் அரசியலை நோக்கி படையெடுக்க காரணம் என்ன? இரண்டாவது, நடிகர்கள் நாடாளக் கூடாதா என்ற கேள்விகள் நம்முன் எழுகிறது.
ஒரு தெருவில் ஒரு மருந்துக் கடை, ஜூஸ் கடை, பானி பூரி ஸ்டால் நன்றாக நடைபெற்றுள் கொண்டு ‘ஓஹோ’ என ஓடிக் கொண்டிருந்தால் நம் மக்களுக்கு அது பொறுக்காது. வெகுவிரைவில் இன்னொரு கடை கொண்டு போட்டு முதல் கடை வியாபாரத்தில் மண்ணள்ளிப்போட்டு, தான் தலையிலும் அதை அள்ளிப்போட்டுக் கொள்ளும் மகானுபாவர்கள் நாம்!
கோவை, திருப்பூர், சிவகாசி போன்ற தொழில் நகரங்களில், ஒரு இன்ஜினியரிங், ஒரு பம்ப், ஒரு பட்டாசு, ஒரு பேப்பர் ஹோல் சேல் கடை ஆரம்பித்து நன்றாக நடந்தால் 3 மாதத்தில் பக்கத்தில் ஒரு கடை போட்டுவிடுவார்கள்!
சினிமாவில் கூட ‘கிழக்கே போகும் ரயில்’ வெற்றி பெற்றால் அடுத்த தலைப்புகள் ‘கிழக்கில்’ தான் ஆரம்பிக்கும்! ‘சின்னத்தம்பி’ வெற்றி பெற்றால் அதே மாதிரி கதைகள் படையெடுத்து தோல்வி அடைந்து படச்சுருள் பெட்டிக்குள் போய் படுத்துக்கொள்ளும்.
எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றதால் அரசியலில் அவருக்கு போட்டியாக சிவாஜியை உசுப்பேற்றி களமிறக்கினார்கள். பாவம் சிவாஜி கணேசன். தானுண்டு, தன் பிள்ளைகுட்டிகள் உண்டு என்றிருந்தவர், பெரிய பண இழப்பையும் தோல்வியையும், அவமானங்களையும் தான் சந்தித்தார்.
அவருக்குப் பின், பல சினிமாக் கலைஞர்கள், எம்.பி., எம்.எல்.ஏ. என்ற அளவில் ஆனார்கள். ராமராஜன், நெப்போலியன், சந்திரசேகர், ரோஜா, ஹேமமாலினி, ஜெயப்ரதா, எஸ்.எஸ். ராஜேந்திரன், அமிதாப்பச்சன் என இன்னும் பலர் நட்சத்திரங்களாக மின்னினார்கள். அரசியல்வாதியாக தோற்றுப் போனார்கள்.
இதில் ஒரு வித்தியாசமான உதாரணம், விஜயகாந்த் மட்டுமே! ஜெயிக்கிற மாதிரி வந்து தோற்றுப் போனார். காரணம் சினிமா ‘இமேஜ்’ அவர்களை தொடர்ந்து காப்பாற்றும் என நம்பி அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்ததுதான். இன்றைக்கு ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு துருவங்களால் முழுவதுமாக நிறைக்கப்பட்டிருந்த தமிழக அரசியல் களம் பெரிய வெற்றிடமாக இருப்பது உண்மைதான்! இந்த இடத்திற்கான ஆசைதான் கமல், ரஜினி போன்ற நடிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆசை காசாகுமா? செயல்படுத்த முடியுமா? மக்கள் ஏற்பார்களா என்பதெல்லாம் ஆராய்ச்சிக்கான கேள்விகள்!
சரி! அவர்கள் ஆசைப்படுகிறார்கள். போட்டியிடுகிறார்கள். வெற்றி / தோல்வி பெறுகிறார்கள்.
அவர்களிடம் பணம் இருக்கிறது. பவுசு இருக்கிறது. பாப்புலாரிட்டி இருக்கிறது. உங்களுக்கென்ன பொறாமை! நடிகர் நாடாளக் கூடாதா? அரசியல் என்பது மன்னர்களுக்கும், ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமே சொந்தமா? இது மக்களாட்சி! இங்கு யார் வேண்டுமானாலும் போட்டி போடலாம்! இந்திய அரசியல் சாசனம் அத்தனை குடிமகன்களுக்கும் சம உரிமை கொடுத்திருக்கிறது! உங்களுக்கு ஏன் நடிகர்கள் மீது காழ்ப்புணர்வு என நீங்கள் கேட்பதும் என் காதில் விழாமல் இல்லை!
எந்த தொழில் செய்வதற்கும் அரசியல் சாசனம் முழு உரிமை கொடுத்திருப்பது என்பது உண்மைதான்! ஆனால்,
ஒரு டாக்டராக வேண்டுமானால் +2 படித்து ‘நீட்’ தேர்வு வெற்றிபெற்று 5லீ ஆண்டு காலம் படித்து பின்பே வைத்தியம் பார்க்க முடியும்.
ஒரு இன்ஜினியர் ஆக வேண்டுமென்றால் 4 ஆண்டு காலம் கல்லூரியில் படித்து பின்பு ஓராண்டு காலம் பயிற்சி பெற்றே பணிபுரிய முடியும்.
ஒரு ஆடிட்டர், டீச்சர், கார்பெண்டர், எலக்ட்ரீஷியன், சிலை வடிப்போர், படம் வரைவோர் என அத்தனை வேலைக்கும் படிப்பு, அதன் பயிற்சி உள்ளது. ஆனால் அரசியலுக்கு மட்டும் அது ஏன் இதுவரை வலியுறுத்தப்படவில்லை! பணமும் பவுசும், பாப்புலாரிட்டியும் போதும் என்பது எப்போது வந்தது? ஏன் வந்தது? இவைகள் மட்டுமே இருந்தவர்களால் ‘நல்லாட்சி’ தரமுடிந்ததா? என்பதையெல்லாம் பார்த்து, அனுபவித்து தெரிந்து கொண்டபின்பும் ‘நடிகர்கள் நாடாளக் கூடாதா?’ என்று கேட்பது பொருத்தமாக இருக்குமா?
அப்படியானால் இப்போது நேரடியாக, நடிகரல்லாத அரசியல் வாரிசுகளில் பலர், வக்கீல், டாக்டர், என பல தொழில் செய்வோர் இருக்கின்றனர். இவர்களெல்லாம் பல்வேறு அரசியல் கட்சிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? கட்சிகள் இவர்களுக்கு ஆட்சி நிர்வாகம் பற்றி பயிற்சி கொடுத்துள்ளதா? இவர்களின் பணிகள் எடைபோடப்படுகிறதா? கட்சிகளில் கண்காணிப்பு குழுக்கள் போன்றவை இருக்கிறதா? தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்களா என்ற கேள்விகளும் மாற்றுத் தரப்பினால் வைக்கப்படாமல் இல்லை! அப்படிப்பார்த்தால் பாஜகவிலும் இடதுசாரி கட்சிகளிலும் தவிர எந்த கட்சியிலும், ‘அரசியல் பயிற்சி வகுப்புகள்’ இல்லை. பாஜகவில் மட்டும், கொள்கை, சித்தாந்தம், இவற்றோடு பண்புப் பயிற்சி வகுப்புகள் அத்தனை உறுப்பினர்களுக்கும் நடத்தப்படுகிறது. இவை தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸில் கற்று கொண்டதன் தொடர்ச்சி ஆகும்!
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆட்சி நிர்வாகம், நாடாளுமன்ற நடைமுறைகள், விதிகள் பற்றி பயிற்சி முகாம்களும் பாஜகவில் நடத்தப்படுகிறது. மற்ற எந்த கட்சியிலும் இந்த மாதிரி ஏற்பாடுகள் இருப்பதாக தெரியவில்லை! எனவே, மற்ற தொழில்களுக்கு கல்லூரி படிப்பும் அதற்கு பிறகு செய்முறையும் இருப்பதுபோல அரசியலுக்கும் இருக்குமேயானால், அதை நடிகர் உட்பட மற்ற எவரும் கற்றுக்கொள்வார்களேயானால், எவரும் அரசியலுக்கு வரலாம்!
ஆனால் அரசியலில் மக்களாட்சி மலர்ந்தது, குடும்ப அரசியலை ஒழிக்கவே! அது தற்போது வந்துவிட்டது! மன்னராட்சியில் இளவரசர்களுக்கு சகல பயிற்சியுமுண்டு. அது இங்கு இல்லை! எனவே அரசியல் பதவி, பட்டம், பவுசு, பணம் என்பதற்கு மட்டும் என்ற தீயதை போக்க லட்சியம், தியாகம், கொள்கை நேர்மை இவற்றோடு பயிற்சி உள்ளவரே வரவேண்டும் என்பதை மக்கள் உணர வேண்டும். வெறும் நடிகராக மட்டும் இருப்பதே நாடாளத் தகுதி அல்ல. அதை நாம் வரவேற்கக் கூடாது.
*************************************************************************************************************************************************
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் பேட்டி ஒன்றில் கமலஹாசன், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” என்ற கேள்விக்கு நான் அரசியலுக்கு வந்தால் தவறு செய்பவர்களை இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன்; எனவே அரசியலுக்கு வரமாட்டேன்” என்று கூறியிருந்தார். (பிபிசி கட்டுரை ஒன்றிலிருந்து)
தகவல்: என். ஹேமந்த் குமார்
*************************************************************************************************************************************************