ரீல் ரீலாக தலைவலி

தமிழனுக்கு ஏன் இப்படி ஒரு தலைவிதி?

இங்கே சினிமாக்காரன் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறான்.

இது ஒன்றும் தமிழனுக்குப் புதிதில்லையே? எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா… எல்லோரையும்தான் பார்த்து விட்டோமே? பார்த்து விட்டோமல்லவா, போதுமே? அதெப்படி போதும்? அரசியலில் கூத்தாடிகள் வந்தார்கள்; சூதாடி சொத்து குவித்தார்கள். நாளை மறுபடியும் அரைத்த ஊழல் மாவையே அரைக்கணும் என்பதுதான் தமிழன் தலைவிதியா?

பக்கத்து மாநிலம் ஆந்திரா. என்.டி, ராமாராவ் சினிமாக்காரர். அரசியலுக்கு வந்தார். முதலமைச்சரானார். போனார். அதற்கு அப்புறம் தெலுங்கர்கள் தலையில் எந்த ஒரு கூத்தாடியும் வந்து ஆட்சி செய்கிறேன் என்று என்ன ஆச்சு தமிழனுக்கு?

இன்னொரு பக்கத்து மாநிலம் கேரளா. மம்முட்டியும் மோகன்லாலும் எம்.எல்.ஏ ஆகக்கூட ஆசைப்பட்டதாகத் தெரியவில்லையே? தமிழ=னுக்குத் தான் தரை டிக்கெட் எடுத்து திரை ஹீரோக்களை ஆட்சி தர்பாரிலும் வைத்து அழகு பார்க்கும் மீளா அவலம்.

இன்னொரு பக்கத்து மாநிலம் கர்நாடகா. அங்கே நடிகர் அம்பரீஷ் காங்கிரசில் சேர்ந்து மத்திய அமைச்சராகி பிறகு அரசியலுக்கு விடுதலை கொடுத்து விட்டார். கன்னடர்கள் பிழைத்தார்கள்.

பாரத தேசத்தின் அத்தனை மாநிலங்களையும் தான் பார்க்கிறோமே, எங்கேயாவது ஒரு அமிதாப்பச்சனோ, ஆமிர்கானோ ‘மாண்பு மிகு’ ஆவதற்கு ஆசைப்பட்டதாகக் கேட்டதுண்டா? ஆசைப்பட்டாலும் அவர்களால் முடிந்திருக்குமோ?

உலகம் சுற்றி வந்தோமானால் அமெரிக்கா குறுக்கே வருகிறது. பயங்கரமான ஜனநாயக நாடு. அங்கே கூட திருஷ்டிப் போல ஒரே ஒரு ரீகன்தான் ‘நாடாண்ட நடிகர்’. அதோடு அரசியலுக்கு ஹாலிவுட்டின் ஏற்றுமதி முடிந்தது. அமெரிக்கர்கள் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். தமிழனுக்குத்தான் அந்தக் ‘குடுப்பினை’ இல்லையே? கமலா, ரஜினியா, விஷாலா என்று அல்லவா இன்றும் நாளையும் அல்லாட வேண்டியிருக்கிறது?

தமிழனின் தலைவிதி எப்படியோ, போகட்டும். சத்தீஸ்கர்காரர்கள் தான் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்! ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டர் ஆள்கிறார். அத்தனை சாதனைகளையும் அள்ளுகிறார். ரமண் சிங்தான். வேறு யார்? கோவாக்காரர்கள் என்ன குறைச்சலா? ஒரு ஐஐடி கோல்டு  மெடலிஸ்ட் ஆள்கிறார். பெட்ரோல் விலை விஷயத்தில் பாரிக்கருக்கு அப்படி ஒரு அப்ளாஸ்.

தமிழன் தன்னை நொந்து கொள்வதற்கு பதில் ஒரு பாரிக்கரோ, ஒரு ரமண் சிங்கோ நமக்கு வாய்க்க மாட்டாரா என்று கனவாவது காணட்டும். பகலில் வரும் கனவு பலிக்குமாம். ஆனால் கோடம்பாக்கத்துக் காற்று வீசும் வேகத்தைப் பார்த்தால் அது பகற்கனவு ஆகிவிடுமோ என்றுகூட பயம் ஏற்படுகிறது.

‘தமிழா, தெய்வத்தை நம்பு’ என்றான் பாரதி. தமிழனுக்கு இன்றைய தேதியில் வேறு வழி இல்லை.