நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.3% ஆக இருக்கும்: ஐஎம்எப்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி நடப்பு 2023-24 நிதியாண்டில் 6.1 சதவீதமாகவும் அடுத்த நிதியாண்டில் 6.3% ஆகவும் இருக்கும் என ஐஎப்எப் ஏற்கெனவே கணித்திருந்தது. வளரும் நாடுகளிலேயே அதிக ஜிடிபி வளர்ச்சியைக் கொண்டதாக இந்தியா விளங்குகிறது என்றும் கடந்த ஏப்ரல் மாதம் ஐஎம்எப் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஐஎம்எப் அமைப்பின் வருடாந்திர கூட்டம் மொராக்கோ நாட்டின் மரக்கேஷ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஐஎம்எப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா பெருந்தொற்று மற்றும் பிற சர்வதேச பிரச்சினைகள் காரணமாக உலக பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து பின்னடைவு காணப்படுகிறது. ஜிடிபி வளர்ச்சி மெதுவாகவும், சீரற்றதாகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 3% ஆகவும் அடுத்த நிதியாண்டில் 2.9% ஆகவும் இருக்கும். அதேநேரம், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.3% ஆக இருக்கும். கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் எதிர்பார்த்ததைவிட நுகர்வு அதிகரித்ததால், முந்தைய கணிப்பான 6.1%-ஐவிட ஜிடிபி வளர்ச்சி 0.2% அதிகரிக்கும். அடுத்த நிதியாண்டில் இது 6.3% ஆக இருக்கும்.

சீனா பொருளாதாரம் குறையும்: சீனாவைப் பொருத்தவரை நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5% ஆக இருக்கும். இது முந்தைய கணிப்பைவிட 0.2% குறைவு. இதுபோல அடுத்த நிதியாண்டில் இது 4.2% ஆக இருக்கும். இது முந்தைய கணிப்பைவிட 0.3% குறைவு. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.5% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.