கடந்த பிப்ரவரி 9-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான பிஜாப்பூரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 31 நக்சல்கள் கொல்லப்பட்டார்கள். பீஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்காவுக்கு உட்பட்ட வனப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையின் போது நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் இரண்டு சம்பவங்கள் உள்ளிட்ட துப்பாக்கி சண்டையில் மட்டும் 81 நக்சல்கள் அழிக்கப் பட்டுள்ளார்கள்.
ஜனவரி 31 ஆம் தேதி மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு ஈடுபட்டிருந்தபோது, எட்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டார்கள். வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில், மாவட்ட ரிசர்வ் காவல்படை மற்றும் மாநில காவல்துறையின் சிறப்புப் படையினருடன், மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) மற்றும் அதன் உயர் பிரிவு கோப்ரா உள்ளிட்ட சிறப்பு படைகள் ஈடுபட்டன.
இதன் மூலம் பாதுகாப்புப் படையினர் கடந்த ஒரு வருடத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுள்ளனர். 270க்கும் மேற்பட்ட போராளிகளை அழித்துள்ளனர். குறிப்பிட்ட உளவுத்துறை மற்றும் மேம்பட்ட தொழில் நுட்பத்தின் பயன்பாட்டின் அடிப்படையில் 2024–ல் பஸ்தரில் 217 இடங்களிலும், 2025ல் 56 இடங்களிலும் கடும் நடவடிக்கைகள் மூலம் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மாவோயிஸ்ட்கள், தங்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில், அரசின் வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டார்கள். அந்த பகுதிகளில் தனி அரசாங்கத்தையே நடத்தி வந்தார்கள். வரி வசூல் செய்வது கூட மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்திலிருந்தது. கனிமவளத்தை பயன்படுத்தி, ஒப்பந்ததாரர்களிடம் நிறைய நிதியை வசூலித்தார்கள். வசூலித்த நிதியை கொண்டு சீனாவிடமிருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்து நாட்டிற்கு எதிராக செயல்பட துவங்கினர்.
மாவோயிஸ்ட்களின் வன்முறைகள் தற்போது கணிசமான குறைப்பு ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 2013ல் 10 மாநிலங்களில் 126 மாவட்டங்களாக இருந்தது, 2024ல் 38 மாவட்டங்களாக குறைந்துள்ளது. நக்சல்களின் வன்முறை சம்பவங்கள் 2010ல் உச்சத்தில் இருந்து 73 சதவீதம் குறைந்துள்ளது. பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களின் இறப்புகள் 86 சதவீதம் குறைந்துள்ளன. இது மத்தியில் ஆளும் அரசு தேச பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருவதை பறைசாற்றுகிறது.