தொலைவுகளைத் தொலைத்த உறவுகள்

இயற்கை மீது அளவற்ற அன்பு செலுத்த வேண்டும் என்பது ரிஷி, முனிவர்களது அறிவுரை. “பாரதிய கலாச்சாரத்தை இரண்டே சொற்களில் விவரிக்கலாம்; அவை அன்பு, நன்றி உணர்வு” என்றார் அப்துல் கலாம். “கடவுள் எதிரில் வந்தால் என்ன கேட்க வேண்டும்?” என்ற கேள்விக்கு, ஸ்ரீமத் பாகவதம் எழுதிய வியாசர், “உன் பாத கமல சேவையும், உன் பாத சேவை செய்யும் பாகவதர்களிடம் (பக்தர்களிடம்) நட்பும், உயிரினங்களிடம் அளவற்ற பரிவும் வேண்டும்” என்கிறார்.

நம் பண்டிகை ஒவ்வொன்றிலும் இந்தப் பண்புகள் பளிச்சிடும். பண்டிகையில் பங்கு பெறுவதற்காக எங்கெங்கோ இருக்கும் உறவினர்களும், நண்பர்களும் ஓரிடத்தில் கூடி, பூஜை செய்வதும், அனைவரும் சேர்ந்து உண்பதும் ஹிந்து கலாச்சாரம் ஊட்டும் பண்பாடு. ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சமுதாயப் பயனும், குடும்ப நலனும் ஒருசேர உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு, சொந்தங்களை அழைக்க அச்சிட்ட அஞ்சல் அட்டைகளை விற்கும் மளிகை கடைகளை மதுரையில் இன்றும் கூட காணலாம். தெய்வ சாட்சியாக குடும்ப உறவை வலுப்படுத்தும் உத்தி இது.

ஹிந்து குடும்பங்கள் சமுதாயப் பண்பாட்டையும், குடும்ப உறவுகளையும் காப்பாற்ற தொலைவை பொருட்படுத்துவதில்லை. ஊர் சுற்றிப் பார்ப்பதற்கோ, சுற்றுலா செல்வதற்கோ, கோயில் தரிசனம், தல யாத்திரை, நதி ஸ்நானம், புஷ்கரணி, மகாமகம், கும்பமேளா போன்றவற்றுக்கோ வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்புவார்கள். இவர்கள் செல்லும் ஊர்களில் இருக்கும் உறவினர்கள் இவர்களை வரவேற்று தரிசனம் செய்வித்தும், ஊர் சுற்றிக் காட்டியும் தம் வேலையைப் புறம் தள்ளி விட்டு உறவைப் பேணுவார்கள்.

கோடை விடுமுறை வந்தால் போதும், குழந்தைகளோடு சென்று கிராமங்களில் தாத்தா பாட்டி வீட்டில் நாட்களைக் கழிப்பது தனி ஆனந்தம். வசதியான நகரத்திலிருந்து குழந்தைகள் வருகிறார்கள் என்று கிராமத்திலும், அவர்களுக்காக வீட்டை சுத்தம் செய்வது, பட்சணம், பண்டம், பலகாரம் செய்வது, ஊறுகாய்கள் போட்டுக் கொடுப்பதுமாக வயதானவர்கள் எப்போதும் இல்லாதபடி சுறுசுறுப்பாக வளைய வருவார்கள். பலவித உடல் உபாதைகளோடு இருந்தாலும் தம் மக்கள் வருகிறார்கள், உறவினர்கள் வருகிறார்கள் என்ற உடனே, என்றும் இல்லாத சுறுசுறுப்பும், உற்சாகமும் உடல் வலிமையும் முதியவர்களுக்கு வந்து விடும். வீட்டுத் தலைவனும், தலைவியும் பிள்ளைகள் விளையாடுவதையும், உரையாடுவதையும் பார்த்து மகிழ்வார்கள். இது நேற்று வரை நாம் கண்ட காட்சி. இன்று தாத்தா, பாட்டிகள், பேரன், பேத்திகளைப் பார்த்து மகிழ அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்குப் பறக்கிறார்கள். உறவின் ஈர்ப்பு அப்படியே உள்ளது.; மாறவே இல்லை!

தலைதீபாவளிக்கு மாமியார் வீடு வரும் மாப்பிள்ளை, பண்டிகைக்கும் ஒளியூட்டுவார். மாப்பிள்ளை விருந்து தடபுடலாக நடக்கும். மாப்பிள்ளையை நன்கு உபசரிப்பது ஹிந்து மரபு, நம் குடும்பப் பழக்கம். வெளிநாடுகளில் உணவு பெற்றவர் நன்றி கூறுவார். ஆனால் ஹிந்து சூழலில் உணவை ஏற்பவருக்கு நன்றி கூறுகிறோம்.

மத்தியான சூரியனைப் போன்று அனுபவத்தில் மூத்தவர்களும், உதய பாஸ்கரனைப் போன்ற இளைய தலைமுறையும், ஒன்றாகச் சேர்ந்து வாழும் இயற்கையான வளாகம் பாரதிய குடும்பம். ஹிந்து சமுதாயத்தில் யாருக்கு எந்த கடமை என்று ஒரு வெளிநாட்டு நிருபர் காந்திஜியை கேட்டார். “ஹிந்து சமுதாயத்தில் ஒவ்வொருவரின் கடமையும் பிறருக்கு உதவுவதை மையமாகக் கொண்டது. முதியோருக்கு சேவை செய்வதில் ஈடுபடும் சிறியவர்கள் தம் தனிப்பட்ட சுகங்களைப் பொருட்படுத்த மாட்டார்கள். சிரவண குமாரன் தன் பெற்றோரைக் காவடியில் சுமந்து புண்ணிய க்ஷேத்திரங்களை தரிசனம் செய்வித்தான் அல்லவா?” என்று காந்திஜி விவரித்தார்.


இது ஏதோ புராண காலத்தில் மட்டுமே சாத்தியம் என்று எண்ண வேண்டாம். உறவின் ஈர்ப்பு என்றும் பசுமையாக / சனாதனமாக உள்ளது. அண்மையில் உத்தராகண்டில் ‘சார் தாம்’ யாத்திரைக்குத் முதிய தாயை இரு சகோதரர்கள் தோளில் சுமந்து வந்த காட்சியை செய்தியில் கண்டோம். இப்படிப்பட்ட காட்சிகளை அண்மையில் நடந்து முடிந்த மஹாகும்பமேளாவிலும் நூற்றுக்கணக்கில் பார்த்தோம். தம் பெற்றோரையும், குலத்தில் மூத்தவர்களையும் அழைத்து வந்து கங்கா ஸ்நானம் செய்வித்த பிள்ளைகளை நிறையவே பார்க்க முடிந்தது.

காசியிலிருந்து கங்கை நீரை எடுத்துச் சென்று ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்துவிட்டு, அங்கிருந்து சமுத்திர மணலை எடுத்துச் சென்று காசி கங்கையில் கரைக்க வேண்டும் என்று சம்பிரதாயம் கூறுகிறது. எல்லா புண்ணியத் தலங்களையும் தரிசிக்க வேண்டும் என்று இப்படி சூட்சமமாக சுட்டிக்காட்டப்படுகிறது. திருப்பதி, காசி போன்ற திவ்ய க்ஷேத்திரங்களில் வசிப்பவர்கள் பிற திருத்தலங்களையும் தரிசிக்க வேண்டும் என்று சாஸ்திரம் ஏன் கூறுகிறது என்று புரிகிறதல்லவா?

வீட்டாருக்காக வேண்டுதல் நிறைவேற்றும் விதமாக தல யாத்திரை செய்வது ஹிந்துக்களின் தனித்துவம். குடும்பத்தில் ஏற்படும் சிறியதும், பெரியதுமான கவலைகள் தீர்வதற்காக குறிப்பிட்ட கோயிலுக்கு / குலதெய்வக் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து கொள்கிறேன் என்றோ, அபிஷேகம், அர்ச்சனை செய்கிறேன் என்றோ பிரார்த்தனை செய்து கொண்டு ஒரு நாணயத்தை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து சுவாமி அலமாரியில் வைப்பதை ஹிந்து குடும்பங்கள் அனைத்திலும் காணலாம். அந்தக் கஷ்டமான காலம் கடவுள் அருளால் விலகிய பின், குடும்பத்தோடு திருத்தலங்களுக்குச் சென்று, வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். அது நம்பிக்கையையும் நன்றி உணர்வையும் அடிப்படையாகக் கொண்டது. காலம் காலமாக இதை வீட்டுப் பெரியவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு வாழ்ந்துக் காட்டுகிறார்கள்.

திருமணமாகி குடும்பத்தில் மருமகள் பிரவேசிக்கும் போது, தம் குல தெய்வத்தை அறிமுகம் செய்வதற்குச் செல்லும் யாத்திரை உன்னதம். விவாகத்திற்குப் பிறகு செய்யும் குலதெய்வ வழிபாடு தான் குடும்பத்தின் பாரம்பரியத்தைக் கற்றுக் கொள்ளும் அடித்தளம். அதன் பிறகுதான் தேனிலவு, சுற்றுலா, மகிழ்வுலா எல்லாமே. மணமகளே, நீ இல்லத்தரசி ஆகுக (ராக்ஞீ பவ) என்பது வேதம் அறிந்தவர் சொல்லும் ஆசியுரை. குணவதியான மருமகள் பாலில் சர்க்கரையாக, புகுந்த வீட்டோடு சங்கமிக்கிறாள். அலுவலகம் செல்லும் மருமகள் வீட்டில் முதியவர்களுக்கு சேவை செய்து கொண்டு, குடும்பத்தினரின் ஆசிகளையும் பாராட்டுகளையும் பெற்று மகிழும் காட்சி அடியோடு மறைந்து போய்விடவில்லை.

குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் நல்லுறவோடு சேர்ந்து வாழ்வது ஹிந்துத்துவ கலாச்சாரத்தின் தனிப்பண்பு. குடும்பங்களில் எழும் சின்னச் சின்ன பிரச்சினைகளைக் குடும்பப் பெரியவர்கள் சமரசமாக தீர்த்து வைப்பததைப் பார்க்க முடிகிறது. தற்போது இவற்றில் சில சவால்களை எதிர்கொள்கிறோம். அவை தற்காலிகமானவை என்று நம்புவோம்.
ரத்னச் சுருக்கமாக சொல்வது என்றால், இன்னல்களில் சிக்கிய இன்றைய உலகிற்கு பாரத கலாச்சாரம் தரும் தீர்வு குடும்பம். ‘உலகமே ஒருகுடும்பம்’ (வசுதைவ குடும்பகம்) என்ற சொல்லாடல், எவ்வளவோ ஆழ்ந்த பொருள் கொண்டது.