ஏதோ காங்கிரஸ் கட்சி புத்தெழுச்சி பெற்று தலைதூக்கி விட்டது போல சில நிருபர்களும் விமர்சகர்களும் அவ்வப்போது எழுதியும் பேசியும் வருகிறார்கள். குறிப்பாக மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அந்தக் கட்சி பெயரளவுக்கு வெற்றியை ருசித்தவுடன்! காங்கிரசாவது, தலை தூக்குவதாவது! காங்கிரஸ் தேசிய கட்சி என்ற உன்னத நிலை இழந்தது தேர்தல் வியூகத்துடன் தொடர்புடையது அல்ல. ‘தேசிய’ என்ற அடிப்படை சிந்தனையை அது நழுவ விட்டதால் தான். காங்கிரஸ் உள்ளூர ‘தேசிய’ தன்மையை இழந்தது தான் அதன் சரிவுக்கு நேர் காரணம் என்ற கருத்தை முன் வைக்கிறார் ஆர்.எஸ்.எஸ் சஹசர்கார்யவாஹ் டாக்டர் மன்மோகன் வைத்ய.
அப்போதுதான் 2019 லோக்சபா தேர்தல் முடிவடைந்திருந்தது. இடது சாய்வு கொண்ட ஒரு செய்தியாளர் “காங்கிரசின் சரிவுக்கு என்ன காரணம்?” என்று கேட்டார். அப்படி ஒரு கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு பதிலளிக்கும் விதத்தில் நான், “காங்கிரஸின் முழுப் பெயர் என்ன?” என்று ஒரு எதிர்வினா எழுப்பினேன். ஒரு கணம் யோசித்த அந்த செய்தியாளர் “இந்தியன் நேஷனல் காங்கிரஸ் -அல்லது இந்திய தேசிய காங்கிரஸ்” என்றார். “இந்திய என்ற சொல் இந்தியாவை அதாவது தேசத்தை குறிக்கிறது. அப்படி இருக்க அதை அடுத்துவரும் தேசிய என்ற சொல் எதைக் குறிக்க வேண்டும்?” என்று கேட்டேன். பதில் சொல்லத் தோன்றாமல் நின்ற அவரிடம் நான் சொன்னேன்: “இங்கே இந்திய என்பது தேசத்தின் நிலப்பரப்பைக் குறிக்கும் வார்த்தை. ’தேசிய’ என்ற சொல் பண்புகளை குறிப்பது”. இவ்வாறு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
பாரதிய சூழலில் தேசம் என்பது குறிப்பது மக்களை. பாரதிய சமுதாயத்தின் அலாதியான சில தன்மைகள் தேசத்தின் அடையாளம் ஆகிட பல்லாயிரம் ஆண்டுகள் பிடித்தது. தேசத்தின் அந்த அடையாளத்தைக் கட்டிக்காத்து வலுப்படுத்துவது ’தேசிய’த் தன்மை.
காங்கிரஸ் நிறுவப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பிறகு அது பிரிட்டிஷ் எதிர்ப்பு சுதந்திர போராட்ட இயக்கமாக மாறியது. அந்த சூழலில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே தேசத்தின் அலாதியான அடையாளம். குறித்து பெருமிதம் கொள்பவர்களாக, ’தேசிய’ சார்பு சிந்தனையோடு விளங்கினார்கள்.
பாரதிய சமுதாயத்தின் கரு ஆன்மிகம். பாரதத்திற்கு வித்தியாசமானதொரு உள்ளார்ந்த தன்மையை தருவது ஆன்மிகம். நம் தேசத்தின் பரந்த நிலப்பரப்பில் வசிக்கும் மக்கள், ஜாதிகள், சமயங்கள், மொழிகள் எல்லாவற்றையும் கடந்து பாரதத்தின் இந்த உள்ளார்ந்த தன்மையை சார்ந்து நிற்பவர்கள்.
பாரதத்தின் சுபாவத்தில் நான்கு அம்சங்கள் உண்டு:
முதல் அம்சம், “ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி” (பரம்பொருள் ஒன்றே அதை பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள், அதை விதவிதமான பாதைகள் வாயிலாக அடையலாம்). பாரதம் இந்த தத்துவத்தை வாழ்ந்துகாட்டி நிலைநாட்டியுள்ளது. சுவாமி விவேகானந்தர், “சகித்துக் கொள்வதையும் தாண்டி எல்லா வழிகளையும் சத்தியம் என்று ஏற்பவர்கள் நாம்” என்று புகழ்பெற்ற தமது சிகாகோ சொற்பொழிவில் கூறியதற்கு இதுதான் காரணம். “எக்ஸ்க்ளூஷன் — அதாவது ஒதுக்குதல், புறந்தள்ளல் — என்பதற்கு எனது தேசத்தின் மொழியாகிய சம்ஸ்கிருதத்தில் சொல் கிடையாது என்பது குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்” என்றும் அவர் சொன்னார்.
இரண்டாவது அம்சம், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அனுபவ பூர்வமாக உணர்தல். “வேற்றுமையில் ஒற்றுமையை கண்டுணர்ந்து விதவிதமான வேற்றுமைகளின் ஊடே ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவது பாரதத்தின் அடிப்படை தர்மம்” என்று இது குறித்து ரவீந்திரநாத் தாகூர் கூறுகிறார். பாரதம்
வேற்றுமைகளை ‘வேறுபாடு’களாகவோ அன்னியர்களை விரோதிகளாகவோ பார்ப்பதில்லை. எனவே
ஒரு புது சமூகம் தலைதூக்கினால் நாம் மிரண்டு விடுவதில்லை. எந்த ஒரு சமூகத்தையும் அதன் அலாதித்தன்மையைக் கட்டிக் காப்பாற்றியவாறே தன்வயப்படுத்திக் கொள்ளும் அற்புதமான ஆற்றல் பாரதத்திற்கு உண்டு.
மூன்றாவது அம்சம், இது: ஆணும் பெண்ணும், ஒவ்வொரு ஆன்மாவும், உள்ளார்ந்த ரீதியில் தெய்வீகத்தன்மை கொண்டது.
உள்ளும் புறமும் இயற்கையை கட்டுப்படுத்தி அந்த தெய்வீக தன்மையை கண்டுணர்வது தான் மானுட வாழ்வின் லட்சியம் என்பது பாரதத்தின் ஆழ்ந்த நம்பிக்கை. இதை செய்கையால், வழி பாட்டால், தியானத்தால், மன ஒருமைப் பாட்டால் – அல்லது இவை நான்கினாலுமோ சாதித்து விடுதலை அடைய வேண்டும் என்பது தேசத்தின் நோக்கம். எனவே பாரதத்தில் அறம், பொருள், இன்பம், வீடு (தர்ம, அர்த்த, காம, மோக்ஷ) என்ற கருத்து உருவாக்கப்பட்டு வாழ்வில் கடைப் பிடிக்கப்படுகிறது. பொருளும் இன்பமும் ஒதுக்கப் படுவதில்லை. தர்மத்தைக் கடைப் பிடித்தபடியே இந்த நான்கையும் அடைவதுதான் முழுமையும் அர்த்தமும் பொதிந்த வாழ்க்கை என்பது பாரதிய கண்ணோட்டம்.
நாலாவது அம்சம்: இறுதியாக விடுதலை பெற தனக்கு எந்தப் பாதை பொருந்தும் என்று தேர்வு செய்துகொள்ள ஒவ்வொருவருக்கும் சுதந்திரம், உரிமை உண்டு என்பது பாரதிய கருத்து. அவரவர் நாட்டம், சக்தி, இயல்பு ஆகியவற்றுக்கு இசைவான விதத்தில் அந்தப் பாதை, கர்ம நெறி, பக்தி நெறி, ஞான நெறி, தியானநெறி — இவற்றின் கலவையாக இருக்கலாம். எனவேதான் பாரதத்தில் ஆன்மிக ஜனநாயகம் உள்ளது என்று நாம் கூறுகிறோம்.
பாரதத்தின் உள்ளார்ந்த இயல்பு தர்மம். தர்மம் என்றால் மதமும் சடங்குகளும் வழிபாடும் தானமும் அல்ல. ’நான்’ என்ற எண்ணத்தை மறந்து ’நாம்’ ஆகும்வரை நமது வட்டத்தை. விஸ்தரித்துக் கொண்டே போக முடியும் — நான் என்பதில் தொடங்கி குடும்பம், உறவினர், ஊர், மாவட்டம், மாநிலம், தேசம், மனிதகுலம், படைப்பில் உள்ள ஜீவராசிகள், ஜடப் பொருள்கள் … என படிப்படியாக வளர்த்துக் கொள்ள முடியும். இது எனக்கு சொந்தம், இவர் எனது உறவு என்ற கருத்தை விஸ்தரித்துக் கொண்டே போய் அவர்களுக்கெல்லாம் நன்மை செய்து வருவதே தர்மம். கோயிலுக்குப் போவது, விரதம் அனுஷ்டிப்பது, சடங்குகள் செய்வது தர்மம் அல்ல; தர்மப் பாதையில் நாம் நடைபோட இவையெல்லாம் உறுதுணை புரிபவை. சமுதாயத்திற்கு நன்றிக்கடன் செலுத்துவது தான் தர்மம். அதுதான் “சமுதாய முதலீட்டை” செழுமைப்படுத்தும். எனவே வழிபாடும் மதமும் தர்மத்திற்காக உள்ளதுதானே தவிர அதுவே தர்மம் அல்ல. தர்மம் என்ற கோட்பாடு முற்றிலும் பாரதிய கருத்து. தொன்று தொட்டு தர்மம் என்பதை வரையறுத்து விவாதித்து வருகிறோம். அது உயர்நிலை சித்தாந்த பரிமாற்றமாக இருக்கலாம்; நாடோடி இலக்கியமாக இருக்கலாம்; எந்த மொழியிலோ, பேச்சுவழக்கிலோ இருக்கலாம் … விவாதம், கருத்துப்பரிமாற்றம், தொடர்கிறது.
பாரதத்திற்கு வெளியே எந்த மொழியிலும் ’தர்மம்’ என்பதற்கு சொல் கிடையாது. பாரதத்திலோ, ஞான நாட்டம் உள்ளவருக்கு ஞானம் வழங்குவது தர்மம். தவித்த வாய்க்கு தண்ணீர் தருவது தர்மம். பசித்தவருக்கு சோறிடுவது தர்மம். வீடற்றவருக்கு தங்க நிழல் தருவது தர்மம். எனவேதான் நம் தேசத்தில் சத்திரத்தை ‘தர்மசாலை’ என்கிறோம். இலவச மருத்துவமனையை ‘தர்மாஸ்பத்திரி’ என்கிறோம். ஊரில் குளம் வெட்டுவது, சாலையோரம் மரக்கன்று நடுவது, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது இதெல்லாம் தன் கடமை என்ற உணர்வுடன் செய்யப்படும் போது தர்மச் செயல் ஆகிறது. தர்மச் செயலால் சமூக முதலீடு அதாவது சுபிட்சம் வளர்ச்சி காண்கிறது. பாரபட்சமின்றி அனைவருக்கும் பலன் கிடைக்கிறது.
ரவீந்திரநாத தாகூர் சேமநல அரசு என்ற கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை. பாரதிய கருத்துக்கு அது உகந்தது அல்ல என்பார் அவர். ’ஸ்வதேசி சமாஜ்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு எந்த சமுதாயம் அரசின் கையை எதிர்பார்க்காமல் வாழ்கிறதோ அது ஸ்வதேசி சமாஜ் என்று அவர் பதிவு செய்கிறார். சமுதாயம் தானாக முன் முயற்சி செய்வதும் சமுதாய ஒத்துழைப்பும் அவசியம். அனைவரையும் ஒன்று படுத்தி பராமரிப்பது எதுவோ அது தர்மம் (தாரணாத் தர்மம்; தர்மோ தாரயதே ப்ரஜாஹா) என்ற நமது தொன்மையான வரையறை காரணமாக சமுதாயத்துக்கு அஸ்திவாரம் தர்மம். இதுதான் என்றென்றும் நமது பாரம்பரியம்.
நமது அரசியல் சாஸனத்தை வகுத்தளித்த பெரியோர் தர்மத்தின் அருமை தெரிந்தவர்கள் என்பதால் உச்சநீதிமன்றத்தின் முத்திரை வாசகமாக “யதோ தர்மஹ ததோ ஜெயஹ” (தர்மத்தின் பக்கமே வெற்றி) என்ற சாஸ்திர வாக்கியம் அமைந்துள்ளது. லோக்சபா சுவற்றில் “தர்ம சக்ர ப்ரவத்தனாய” (தர்மமாகிய சக்கரம் சுழன்று கொடேயிருக்க) என்றும் ராஜ்ய சபா சுவற்றில் “ஸத்யம் வத தர்மம் சர” (சத்தியம் பேசு தர்ம நெறியில் நட) என்றும் பொறித்திருக்கிறார்கள். சின்னஞ் சிறு உதவிகள் செய்து வருவதன் மூலம்தான் தர்மசக்கரம் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கச் செய்ய முடிகிறது. திருப்பூர் சக்ஷம் நிகழ்ச்சியின் போது சாமானியர்கள் எவ்வளவு நல்ல மனம் படைத்தவர்கள் என்பதை விளக்கும் சம்பவங்கள் நடந்ததே இதற்குச் சான்று.
தேசத்தின் ஆன்மா போன்ற சுபாவத்தால் தேசத்தில் தோன்றி பரவிய தத்துவத்தை உலக மக்கள் ஹிந்துத்துவம் என்று அழைக்கிறார்கள். பாரத தேசத்திற்கும் பாரத சமுதாயத்திற்கும் தேசிய அடையாளம் ஹிந்துத்துவம். தேச மக்களுக்கும் தேசத்திற்கும் அடைமொழி ஹிந்து என்பது தான். எனவே பாரத மக்கள் ஹிந்து தேசிய அடையாளம் கொண்டவர்களாக விளங்குவதை ஹிந்து ராஷ்டிரம் என்று குறிப்பிடுகிறோம். பாரபட்சங்கள் நீக்கி அனைவரையும் இணைத்து ஒருங்கிணைப்பது தான் ஹிந்துத்துவம். ஆக,
தேசியவாதி என்றால், பாரத தேசத்தின் தனிப்பட்டோர், குடும்பம், தொழில்கள், சமூகம் அனைத்திலும் பிரகாசிக்கும் ஹிந்துத்துவ அடையாளத்தை ஏற்பவர்.
தேசியவாதி என்றால், மகான்களாக ரிஷி முனிவர்களாக வாழ்ந்து ஆக்கிரமிப்பு படையெடுப்பு இவற்றை எதிர்கொள்ள தூண்டி தேசத்தின் தன்மை பழுது படாமல் காப்பாற்றிய நமது மூதாதையரை மதித்துப் போற்றுபவர்.
தேசியவாதி என்றால், இந்த மகத்தான தத்துவம் முளைவிட்டு வேர் கொண்ட இந்த தாய்த்திரு நாட்டை, கலாச்சாரம் நாகரீகம் தழைத்தோங்கும் பாரத மண்ணை ஆராதிப்பவர்.
இந்த தேசிய அடையாளத்தில் மக்கள் அனைவரும் சங்கமிக்கச் செய்யும் பணி அவசியமான, ஆதாரமான பணி. அதை எந்த ஒரு அரசியல் சக்தியோ ஆட்சி அதிகாரமோ சாதித்து விட முடியாது. மக்கள் தாங்களாக முனைந்தால் தான் சாத்தியமாகும். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இந்த அரும் பணியில் முனைந்துள்ளது. சங்கத்தின் குறிக்கோளும் லட்சியமும் இதுதான்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே இப்படிப்பட்ட தேசிய உள்ளம் கொண்டவர்களாக விளங்கினார்கள். காங்கிரசில் கம்யூனிஸ்ட்கள் ஊடுருவிய பின் தேசிய எண்ணம் கொண்டவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். 1969ல் காங்கிரஸ் இரண்டாக உடைந்த பிறகு ஓரங்கட்டப்படுவது முழுமை ஆயிற்று. அடியோடு கம்யூனிஸ்டு செல்வாக்கிற்கு அடிபணிந்தது காங்கிரஸ். எப்படியாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது ஒன்றே அதன் லட்சியம் ஆயிற்று.
அதே நேரத்தில், ஆர்.எஸ்.எஸ் செய்த அரும் பணியாலும் சான்றோர்கள் சமுதாயப் பெரியோர்கள் முனைந்ததாலும் தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன் விளைவை நாடு முழுதும் இன்று நாம் காண்கிறோம். சாதி, சமய, மாநில உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு தேசிய விழிப்புணர்வு ஏற்பட்ட அதே வேளையில் காங்கிரசின் பதவி வெறி காரணமாக சாதி, மத, வட்டார, மொழி வெறியை தூண்டிவிட்ட காங்கிரஸ் அந்த வலையில் சிக்கிக் கொண்டது. இதைக் கண்டு கொண்ட மக்கள் முன்பு தேசியத்தை ஒதுக்கிய காங்கிரசை ஒதுக்கித் தள்ள ஆரம்பித்தார்கள். இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில், ’காங்கிரஸ் இவ்வளவு தூரம் வீழ்ச்சி கண்டது ஏன்?’ என்று கேட்ட அந்த செய்தியாளரின் கேள்விக்கு இது தான் பதில்.