பாரதப் பிரதமரின் அமெரிக்க விஜயம் நடைபெறப் போகிறது என்ற செய்தி காற்றில் பரவியதுமே லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாரிச் சுருட்டிக் கொண்டு அங்கே போய் உட்கார்ந்து, “மாநிலங்கள் எல்லாம் ஒன்று கூடி பாரதம் என்ற நாட்டை உருவாக்கியதாக” சற்றும் விவரமில்லாமல் விபரீதக் கதை விடுகிறார். தேசத்தின் அரசை குறிக்க நம்மூரில் மூன்று ஆண்டுகளாக “ஒன்றியம்” என்ற சொல்லை சிலர் பயன்படுத்துகிறார்களே, அதுதான் ஞாபகம் வருகிறது. இவர்கள் எல்லாரும் மறந்து போன வரலாற்று சத்தியம், பாரதம் தொன்று தொட்டு ஒரே நாடாக இருந்து வருகிறது என்பதுதான். “மத்திய அரசே எல்லா அதிகாரங்களையும் குவித்துக் கொண்டுவிட்டது, மாநிலங்கள் வெறும் முனிசிபாலிட்டி ஆகி விட்டன” என்று கூச்சலிட்ட மாநில சுயாட்சி கும்பலின் நிழல்தான் இவர்கள். மாநிலங்கள் பிரிந்து போகும் உரிமை உள்ளவை என்ற பிரமையில் இவர்கள் நடமாடுகிறார்கள்.
சுதந்திரம் அடைந்த கையோடு அரசியல் நிர்ணய சபை தேசத்திற்காக அரசியல் சாசனம் உருவாக்கியது. அதில் முக்கிய பங்கு வகித்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அந்த சபையில் பாரத அரசியல் சாசனத்தை சமர்ப்பித்து பேசுகையில்,
“சட்டமியற்றும் அதிகாரம், நிர்வாக அதிகாரம் இரண்டையும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே அரசியல் சாசனமே பிரித்துத் தந்து விட்டது” என்றார்.
மத்திய அரசுக்கு மாநில அரசுகளின் மீது “மேலதிகாரம்” செலுத்தும் உரிமை வழங்குகிறது நமது அரசியல் சாசனம் என்று ஒரு வாதம் பரப்புகிறார்கள்.
”மேலதிகாரத்தைப் பயன்படுத்துவது ஒரு நெருக்கடி ஏற்படும்போது மட்டும்தான். ஒரு நெருக்கடி ஏற்படும்போது கூடவா மத்திய அரசு மாநிலங்கள் மீதான தனது “மேலதிகாரத்தை” பயன்படுத்தக் கூடாது?” கேட்பவர் வேறு யாருமல்ல, டாக்டர் அம்பேத்கர்தான்.
மிக முக்கியமான ஒரு விஷயத்தை வெளிப்படையாகவே கூறி தெளிவுபடுத்துகிறார் அம்பேத்கர்.
“ஒரு நெருக்கடியான நேரத்தில் ஒரு பாரத குடிமகனின் கடைசிக் கட்ட விசுவாசம் எதன் மீது இருக்க வேண்டும்? மத்திய அரசின் மீதா அல்லது உறுப்பான மாநிலத்தின் மீதா? அதை மத்திக்கும் – மாநிலத்துக்குமாகப் பங்கு போட முடியாது. ஒரு நெருக்கடி ஏற்பட்டால் ஒரு இந்தியக் குடிமகனின் இறுதிக்கட்ட விசுவாசம் மத்திய அரசுக்குதானே தவிர அதன் “அங்கமான” மாநில அரசின் மீது அல்ல – இதுவே பெரும்பான்மையினரின் கருத்து!”
சிதைந்த சோவியத் யூனியனைப் போல “விரும்பினால் பிரிந்து செல்லும் உரிமை” என்று இங்கே தேசத்தின் உறுப்பு மாநிலங்களுக்கு கிடையாது. அப்படி “விரும்பினால் பிரிந்து செல்லும் உரிமையை” அளித்த சோவியத் யூனியன் இன்று என்ன கதி ஆயிற்று? சோவியத்தின் உறுப்பு மாநிலங்கள் எல்லாம் தனித்தனி நாடுகளாகச் சிதறுண்டு போய் இன்று உக்ரைனும் ரஷ்யாவுமே சிண்டுபிடி யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
அம்பேத்கர் பாரத நிலவரத்தை மேலும் விளக்க விளக்க, இந்த “ஒன்றியம்”… “திராவிட மாடல்” இதெல்லாம் அடிவாங்குவதை இதோ காணலாம்:
“மத்திய அரசுதான் ஒட்டுமொத்த தேசத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு இயங்கும். இங்குதான் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிகாரம் நியாயமாகிறது. ஒரு நெருக்கடியில் மாநில அரசு செய்ய வேண்டிய கடமைதான் என்ன? மத்திய அரசு சொல்வதை அமல்படுத்த வேண்டியதைத் தவிர வேறில்லை. தங்களின் மாநில உள்ளூர் நலன்களோடு ஒட்டுமொத்த தேசத்தின் நலன்களையும் உறுப்புகளான மாநில அரசுகள் கணக்கில் கொள்ள வேண்டும்!”
உள்ளூர பிரிவினைப் பித்து பிடித்தவர்கள் கூட்டாட்சித் தத்துவம் பேசித் திரிகிறார்கள். இவர்களுக்கெல்லாம் கூட தேசம் முன்னேற விவேகமான பாதை காட்டுகிறார் பிரதமர் மோடி:
“கூட்டாட்சி தானே, அது கூட்டுறவுக் கூட்டாட்சியாக இருக்கட்டும். அதோடு நிற்காமல் மாநிலங்கள் போட்டி போட்டு தேசத்தை முன்னேற்றும் கூட்டாட்சியாக இருக்கட்டும். உள்ளூர் அபிலாஷைகளை மதியாமல் ஆண்டாண்டுக் காலமாக மாநிலங்களை மத்திய அரசு பெரியண்ணன் தோரணையில் நடத்தும் போக்கு இருந்தது” (We need to leverage co-operative & competitive federalism to achieve all round growth. For a long time, we have seen a Big Brother relationship between the Centre & States, not taking into account the heterogeneity of different states and their local requirements”. — PM Modi in April 2024)”.
கண்மணிகளே, காலம் மாறிவிட்டது என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரதமர் உணர்த்திவிட்டார்.
(கட்டுரையாளர் புகழ்பெற்ற முகநூல் பதிவர்)