தேசதுரோகிகளுக்கு பாடம் புகட்டுங்கள்

முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஷிவமொகாவில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஷிவமொகா கவல்துறையினர் சிறப்பாக கடைமையாற்றி பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர். இந்த பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். பி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ போன்றவை தேசதுரோக அமைப்புகள். முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில் முஸ்லிம் சமுதாய மூத்த தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேசதுரோகிகளுக்கு அவர்கள் பாடம் புகட்ட வேண்டும். தேசபக்தி கொண்ட முஸ்லிம்கள், தங்களின் பிள்ளைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்து சிறை செல்ல நேரிடும். வேலையில்லாத காரணத்தால் இளைஞர்கள் குற்றங்களில் ஈடுபடுவதாக காங்கிரஸ் தலைவர் நல்பாட் கூறியுள்ளார். இவரே சிறைக்கு சென்று வந்தவர்தான். இவரை கட்சியில் வைத்திருப்பது குறித்து காங்கிரஸ் மீண்டும் ஆலோசிப்பது நல்லது. மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் சர்வாதிகாரி போன்று நடந்து கொள்கிறார். காங்கிரஸ் பிரிவினைக்கு, சித்தராமோற்சவம் காரணமானது. இந்த கட்சியினர் இவ்வளவு கீழ்த்தரமான அரசியலில் இறங்குவார்கள் என நினைக்கவில்லை. ஒரு முதல்வரை பற்றி ‘பே சிஎம்’ என விமர்சிப்பது சரியல்ல. அரசியல் செய்ய காங்கிரசார் தகுதியானவர்கள் இல்லை. இத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர்கள் கூறியிருக்க வேண்டும். முதல்வர் பதவியை காங்கிரசார் அவமதித்துள்ளனர். ஒப்பந்ததாரர் சங்க தலைவர், காங்கிரசின் ஜால்ரா என்பது அனைவருக்கும் தெரியும். அவரது குற்றச்சாட்டு உறுதியாகவில்லை. ஒப்பந்ததாரர் சங்கத் தலைவர் கெம்பண்ணா, சிவகுமார், சித்தராமையா அதற்கான ஆவணங்களை வெளியிடட்டும். அதை விட்டு விட்டு 40 சதவீதம் கமிஷன் என கூறித் திரிவது சரியல்ல” என கூறினார்.