ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் அகில பாரத சேவா பிரமுக் சூர்யநாராயண ராவ் மறைந்தார் தென்பாரதத்தின் சங்க சிற்பி. அவர் வயது ஒரு நூற்றாண்டு ஆவதற்கு இன்னும் ஆறு ஆண்டுகளே உள்ள நிலையில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் முன்னாள் அகில பாரத சேவா பிரமுக் கி. சூர்யநாராயணராவ் நவம்பர் 18 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அவர் 1970 முதல் 1984 வரை தமிழகத்தின் மாநில அமைப்பாளராக ஆர்.எஸ்.எஸ். பணி வளர்த்தார். பின்னர் தென்பாரத ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பாளராக தென் மாநிலங்களில் சங்கப்பணிக்கு வழிகாட்டினார்.
என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்பட்ட அவர் பற்றி நினைவு கூர்கிறவர் ஒவ்வொருவரும் ஆர்.எஸ்.எஸ். பற்றி துக்ளக் பத்திரிகைக்கு 1979ல் அவர் அளித்த பேட்டி பற்றி குறிப்பிடத் தவறுவதில்லை. தமிகத்தின் பட்டிதொட்டிதோறும் ஆர்.எஸ்.எஸ். பற்றி அறிய விரும்புகிறவர்களை, சங்கத்தில் இணைத்தது அந்த பேட்டி. காரணம் அந்த பேட்டியின் இறுதியில் சூருஜியின் விருப்பப்படி ஆர்.எஸ்.எஸ் தமிழக தலைமையக முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் சூருஜியின் முக்கிய கவனம் ஹிந்து ஒருங்கிணைப்பு பணியில் தங்கள் வாழ்நாளை அர்ப்பணம் செய்யும் அணியணியான இளைஞர் பட்டாளத்தை, பண்பாளர்களை உருவாக்குவதிலேயே சென்றது. அதன் விளைவை தமிழகம் கண்கூடாகக் கண்டது. சங்க வளர்ச்சி கணிசமாக உயர்ந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துவிட்டது” என்று தமிழக அரசியல் பிரமுகர் ஒருவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதை சூருஜி சுட்டிக்காட்டத் தவறுவதில்லை.
அரசியல் பிரமுகர்கள் வேண்டுமானால் ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சி பற்றி ஆதங்கப்படலாம். ஆனால் நாத்திகம் பேயாட்டம் போட்ட சூழலில் ஹிந்து சமய அடிப்படையில் பள்ளி, கல்லூரிகள் நடத்தி சமுதாயத்திற்கு தெம்பு தந்த சுவாமி சித்பவானந்தர் போன்ற பெரியோர்கள் ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சி பற்றி ஆனந்தம் அடைந்தார்கள். அதற்கு அறிகுறியாக தங்கள் கல்வி நிறுவனங்களை சங்கத்தின் பயிற்சிக்காக மனமுவந்து அளித்தார்கள்.
காரணம், தமிழகத்தின் அறிவார்ந்த பெருமக்கள் தேசியத்தின் பக்கம் தமிழகம் திரும்பவேண்டும் என்ற தவிப்புடன் இருந்த காலகட்டம் அது. சூருஜி போன்ற பெரியோர்களின் அயராத உழைப்பினால் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தபோது மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது என்பதில் மிகை இல்லை.
ஹிந்து ஒற்றுமைப்பணி ஒன்றே தாரகமாக வாழ்ந்து வந்த சூருஜியும் முஸ்லிம் லீகின் அப்துல் சமதுவும் சந்திக்கவேண்டும் என்று பிரபல பத்திரிகையாளர் சோ ராமசாமி விரும்பினார். சந்திப்பு நடந்தது. சத்தியத்தை நேரே சந்தித்த சமது, ‘எங்கள் முன்னோர்களும் ஹிந்துக்களே’ என்று மனம் திறந்து காட்டிய சம்பவம் நடந்தது.
ஹிந்து சமுதாயத்திற்குள்ளேயே ஹரிஜன மக்கள் பாரபட்சத்துக்கு இரையாகி குமுறுவது சூருஜியின் உள்ளத்தை உருக்கியது. 1969ல் உடுப்பியில் ஹிந்து சமய ஆன்றோர் அனைவரையும் ஒரே மாநாட்டு மேடையில் கொணர்ந்து ‘ஹிந்து சமுதாயத்தில் நுழைந்துள்ள தீண்டாமைத் தீமைக்கு ஹிந்து மதத்தில் இடம் கிடையாது’ என்று அவர்கள் அனைவரையும் ஒருமித்த குரலில் அறிவிக்கச் செய்தார், மாநாட்டு ஏற்பாட்டாளராக செயல்பட்ட சூருஜி.
தேசப்பிரிவினையின் சோக வரலாறு நிகழ்ந்த தருணத்தில் தேசம் விடுதலை அடைந்தது. சுதந்திர பாரதத்தில் சங்கத்தின் வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட அன்றைய மத்திய அரசு பொய்க் காரணம் காட்டி தடை செய்தது. அந்த தடை காலத்திலும் சரி, 1975-77ல் நெருக்கடி நிலவர சர்வாதிகாரத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்திலும் சரி, ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு சூருஜியின் திறன் மிக்க வழிகாட்டல் கிடைத்தது.
அவர் சம்ஸ்கிருத பாரதி அமைப்பின் அகில பாரத தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார். அவர் தலைவராக இருந்தபோதுதான் சம்ஸ்கிருத பாரதி அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது. பதிவு ஆவணம் சம்ஸ்கிருத மொழியில் அமைய வேண்டும் என்ற சூருஜியின் விருப்பம் நிறைவேறியதால், வரலாற்றில் முதல் முறையாக அரசு ஆவணம் ஒன்று பாரதத்தின் தொன்மையான மொழிகளில் ஒன்றில் எழுதப்பட்டது என்ற பெருமை சேர்ந்தது.
சங்க ஸ்வயம்சேவகர்களின் வீட்டில் சூருஜி போன்ற சங்க பிரச்சாரகர்கள் உணவு அருந்துவது சங்கப்பணியின் ஒரு அம்சமே. காரணம் அது சங்க குடும்பங்களில் பண்புப் பதிவுகளை ஆழமாக ஏற்படுத்துகிறது. இப்படித்தான் 70களில் சென்னையில் ஒரு ஸ்வயம்சேவகர் வீட்டில் உணவருந்தியதும் சூருஜி அந்த ஸ்வயம்சேவகரின் தாயாரை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்துவிட்டு தனது கம்பீரமான உடலை சுட்டிக்காட்டி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உங்கள் போன்ற அன்பான தாய்மார்களின் கரங்களால் சாப்பிட்ட சாப்பாட்டால் உருவானதுதான் இந்த சரீரம்” என்று சொன்னது நிறைய சேதிகள் சொன்னது.
அந்த ஆஜானுபாகுவான சரீரம் தான், பாரத மாதாவின் பணியிலேயே முற்றிலும் கரைந்து தேய்ந்தது. நவம்பர் 18 அன்று ஆன்மா விண்ணில் கலந்தது.
அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று மறைந்தவர் பற்றி பொதுவாழ்வில் சொல்லப்படுவது உண்டு. ஆனால் தனது வாழ்நாள் பணிக்கு தன்னைப் போன்றே அர்ப்பணமான எத்தனையோ பேரை அவர் உருவாக்கிச் சென்றிருப்பதால் அந்த வகை இரங்கல் சூருஜிக்குப் பொருந்தாது. ஏன், சங்கம் தந்த எந்த ஒரு ஸ்வயம்சேவகருக்கும் பொருந்தாது. காரணம் என்றும் அன்பின் அடிப்படையிலான சங்கப்பணி, மக்களை இணைக்கும் பணி.