தமிழகத்தில் பாவை வழிபாடு சைவம் வைணவம் இரு பிரிவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சைவர்கள் சிவனை துதிக்கும் பாடல் திருவெம்பாவை என்றும் வைணவத்தில் திருமாலை போற்றிப்பாடும் பாடல்கள் திருப்பாவை. இந்த பாடல்களை மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து கோயில்களுக்குச் சென்று அனைவரும் பாடும் வழக்கம் உள்ளது. திருப்பாவையில் ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய்’ எனத் தொடங்கும் முப்பது பாடல்களை ஆண்டாள் நாச்சியார் இறைவனை கணவனாக அடையும் பாவனையோடு சிறப்பாக பாடியுள்ளார். இப்பாடல்களை இளம்பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து பக்தியோடு கோயிகளில் சென்று பாடுவது வழக்கமாக இருக்கிறது. இதன்மூலம் தங்களுக்கு நல்ல கணவர்கள் கிடைப்பதோடு இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவனை வேண்டும் விதமாக அமைந்துள்ளது. திருவெம்பாவையில் மாணிக்கவாசக சுவாமிகள் சிவபெருமானின் அருளை வேண்டி உள்ளம் உருக ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்’ எனத் தொடங்கும் இருபது பாடல்களோடு அதிகாலை சிவனை தட்டியெழுப்புகின்ற வகையில் ‘போற்றிஎன் வாழ்முதல் ஆகிய பொருளே’ எனத் தொடங்கும் பத்து பாடல்கள் அடங்கிய திருப்பள்ளியெழுச்சியையும் தந்துள்ளார். இது சைவ வைணவ சமய ஒற்றுமையை உரைக்கும் விதமாக எல்லா பகுதிகளிலும் பாடப்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பாவையில் ‘சிற்றம் சிறுகாலே’ எனத் தொடங்கும் பாடலை அதிகாலை வேளையிலும் திருவெம்பாவையில் ‘பாதாளம் ஏழினுங்கீழ்’ எனத் தொடங்கும் பாடலை இரவு படுக்கைக்குச் செல்லும்முன்பும் ஓதி வந்தால் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் இகபர சுகங்களை பெற்று இன்புறுவார்கள்.