வானொலியில் நேற்று ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தமிழகத்தின் கோவையில் வசிப்பவர் லோகநாதன். ஏழை குழந்தைகள் கிழிந்த ஆடைகளை அணிந்திருப்பது சிறு வயதிலேயே இவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்பிறகு, இதுபோன்ற குழந்தைகளுக்கு உதவுவதாக சபதம் எடுத்த லோகநாதன், தன்வருமானத்தில் ஒரு பகுதியை அவர்களுக்கு தானமாக அளிக்கத் தொடங்கினார். பணப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, கழிப்பறைகளைகூட சுத்தம் செய்துள்ளார். இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்துள்ளார். இத்தகைய முயற்சிக்காக அவரை பாராட்டுகிறேன். நாடு முழுவதும் இதுபோன்ற பல முயற்சிகள் நமக்கு ஊக்கம் அளிப்பதுடன், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகிறது” என்றார்.
கோவை சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டிபுதூரில் வசிக்கும் ஆ.லோகநாதன் (59), வெல்டிங் வேலை செய்கிறார். கடந்த 22 ஆண்டுகளாக ஏழை குழந்தைகளுக்கும், ஏழை மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக, கழிப்பறைகளை சுத்தம் செய்ததன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டும் உதவி செய்துள்ளார். பயன்படுத்தப்பட்ட ஆடைகளை பல்வேறு பகுதிகளில் இருந்து பெற்று, ஏழை குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார்.
பிரதமரின் பாராட்டு குறித்து லோகநாதன் கூறும்போது, “எனது சேவை குறித்து பிரதமர் பேசியது இத்தனை ஆண்டுகளாக நான் செய்த சேவைக்கான மிகப் பெரிய அங்கீகாரம். நாட்டின் ஏதோ ஒரு மூலையில், சேவை செய்யும் என்னை உலகம் முழுக்க தெரியும் வகையில் அறிமுகம்செய்த பிரதமருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இந்த பாராட்டு மேலும் பல சேவைகள் செய்ய என்னை ஊக்குவித்துள்ளது” என்றார்.