தீயது தீது மகான்களின் வாழ்வில்

காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவா கலவையில் ஒருநாள் தஞ்சையிலிருந்து ஒரு வழக்கறிஞர் தரிசிக்க வந்திருந்தார். அவருடைய நடை, உடையில் பணக்கார மிடுக்கு தெரிந்தது. ஒரு பெரிய தட்டில் பழங்கள், புஷ்பம், ஒரு கவரில் ரூபாய் நோட்டுக்கள் வைத்து பெரியவா முன்பு சமர்ப்பித்தார்.

அது என்ன கவர்?” மஹா பெரியவா மெதுவாகக் கேட்டார். ஏதோ கொஞ்சம் பணம்” என்றார் வழக்கறிஞர். கொஞ்சம்னா பத்து ரூபாயா, பதினோரு ரூபாயா?”

தனது அந்தஸ்து தெரியாமல் பெரியவா இப்படி கேட்டு விட்டாரே என மனதுக்குள் நினைத்து, பதினைந்தாயிரம் ரூபாய்” என்றார்.

ஸ்ரீ மஹா பெரியவா சற்று மௌனம் சாதித்து, நீ  எதிலே வந்திருக்கே?” என்றார்.

காரில் வந்திருக்கேன்”

அந்தக் கவரை எடுத்துண்டு போய் காரில் பத்திரமாக வச்சுட்டு வா… நீ கொண்டு வந்த பழம், புஷ்பம் போதும்”.

பெரியவா கூறியதைக் கேட்டு வழக்கறிஞர் வெலவெலத்துப் போனார். அவரது பணக்கார கர்வமெல்லாம் அடங்கிவிட்டது.

அந்தக் கவரை காரில் வைத்துவிட்டு திரும்பி வந்த வழக்கறிஞரிடம் சாந்தமாக பேசி, பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினார்.

மடம் பணம் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும்போது வந்த பணத்தை வேண்டாம் என்று திருப்பி அனுப்பியதற்கான காரணம் அங்குள்ள நிர்வாகிகளுக்கு புரியவில்லை.

இதனை உணர்ந்த பெரியவா, இவர் ஒரு கிரிமினல் வழக்கறிஞர். ஒரு பொய் வழக்கில் வாதாடி ஜெயித்ததுக்காக கிடைத்த பணத்தில் ஒரு பகுதி. அதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன்” என்றார்.

மஹா பெரியவா எப்படி வாழவேண்டும் என்று உபதேசிக்கவில்லை.

வாழ்ந்து காட்டினார்.

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்