தீபாவளிக்கு முன்னர் வருமான வரி உச்சவரம்பை 20 சதவீத வரியில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்க , உயர் வருவாய் பிரிவினருக்கு 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பது என மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது .
மத்திய தர வர்க்கத்தினரிடையே நுகர்வை அதிகரிக்கச் செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் வருமான வரி விதிப்பு அடுக்குகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக அரசு அதிகாரகள் தெரிவித்தனர்.
வருமான வரி சட்டங்களை எளிமைப்படுத்துவது, வருமான வரி விகிதங்களை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. வருமான வரி செலுத்துபவர்களுக்கு குறைந்தது 5 சதவீதம் அளவுக்கு பயனளிக்கும் வகையில் மாற்றங்கள் இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது 2.5 லட்ச ரூபாய் வரை உள்ள வருமானத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை.
5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத வரி அடுக்கை கொண்டுவருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பிரிவுக்கு 20 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், அதை 10 சதவீதமாகக் குறைப்பதுதான் திட்டம்.
உயர் வருவாய் பிரிவினருக்கு வருமான வரி அடுக்கை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைப்பது, மேல்வரி, கூடுதல் வரிகளை நீக்குவது போன்ற திட்டங்களையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தீபாவளிக்கு முன்னரே, வருமான வரி விதிப்பில் மாற்றங்களை மத்திய அரசு அறிவிக்கும் என வல்லுநர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வருமான வரி விகிதத்தை குறைப்பதால், வரி செலுத்துபவர்களின் கையில் கூடுதல் பணம் நிற்கும் என்றும், இது உடனடியாக தேவையையும் நுகர்வையும் அதிகரிக்கச் செய்யும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வருமான வரி உச்சவரம்பை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பது முக்கியமான நடவடிக்கையாக கை கொடுக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.