வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
ஆண்டாள் கூறுகிறாள்: ” அன்புத்தோழியரே! அந்த பரந்தா மனையே நம் துணைவனாக அடைய மார்க்கம் மிகு பாவைநோன்பு விரத முறையை இப்போது கூறப்போகிறேன். கேளுங்கள். இத்தகைய உயரிய விரதத்தின்போது உணவில் நெய் சேர்க்க கூடாது. பால் அருந்தகூடாது. கதிரவன் தனது கிரணங்களைக் கிளை பரப்பும் உதய நேரத்துக்கு நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம் ). தீய செயல்களை மனதால் நினைக்கக்கூடாது. தீய சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் வேண்டிய அளவு தர்மம் செய்ய வேண்டும்”. ” நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே வைகுண்டம் ஆகிற திருப்பதியை (108ஆவது) அடைய முடியும். முதல் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடலாம்” என்று முதல் பாடலில் ஆண்டாள் கூறியதை நினைவிற்கொள்க.
மனம் கட்டுப்பட வேண்டுமானால் வாயைக் கட்டிப் போடவேண்டும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணெதிரே தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.