காங்கிரஸ் அரசு என்றைக்குமே எளியவர்கள், வலியவர்கள், விளிம்பு நிலையில் உள்ளவர்கள் மற்றும் தேச அபிமானிகளுக்கு ஆதரவானதல்ல. வாக்குகளுக்காக சிறுபான்மையினரை தாஜா செய்வது, தேச நலனை விட்டுக்கொடுப்பது, நாட்டை பலவீனப்படுத்துவது என்பதெல்லாம் இவர்களின் குணங்கள். மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு விட்டவர்கள், தப்பித்தவறி ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் கூட திருந்தியதாக இல்லை.
உதாரணத்துக்கு கர்நாடகாவில் சீத்தாராமையா தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை 80 சதவீதம் வரை, அதாவது 54 கோடியில் இருந்து (2023–-24ம் ஆண்டு) 10 கோடியாக (2024-–25ம் ஆண்டு) குறைத்துள்ளது. இலவச வாக்குறுதிகளை அள்ளித்தெளித்து ஆட்சிக்கு வந்தவர்களால், அதை நிறைவேற்ற 52,000 கோடி வரை செலவு செய்ய முடிந்தவர்களால், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக 50 கோடியை கூட ஒதுக்க முடியவில்லை.
இந்த நிதியானது பார்வையற்ற மாணவர்களுக்கான மடிக்கணினிகள், பிரெய்ல் கருவிகள், மூன்று சக்கர மோட்டார் பைக்குகள், பேட்டரி சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு உயிர்காக்கும் கருவிகள் அத்தியாவசிய தேவைகளுக்கானது. அவர்களது சுக வாழ்வுக்கானதல்ல.
சரி தேச பற்றாளர்களுக்காவது கெளரவம் செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 2014ம் ஆண்டில் ஆசிய கபடி போட்டியில் தங்கமும், 2015ம் ஆண்டில் வெள்ளியும் வென்ற பூஜா தாக்கூருக்கு, விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடுகளின் கீழ் உரிய அரசு பணிகளை வழங்காமல் காலம் தாழ்த்தியதற்காக அம்மாநில காங்கிரஸ் அரசை, உச்சநீதிமன்றம் சமீபத்தில் கண்டித்துள்ளது.
நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்களை நீங்கள் நடத்தும் விதம் இதுதானா? என்று கேள்வியும் எழுப்பியுள்ளது.
சரி அப்படியே தமிழகம் வருவோம் கூட்டணி கட்சியான திமுகவோ எல்லாவற்றிலும் இரட்டை நிலைப்பாடு. அவர்கள் விரும்பினால் சட்டம் விஸ்வரூபம் எடுக்கும். உதாரணத்துக்கு மகாவிஷ்ணு என்பவர் மாற்றுத்திறனாளிகள் பிறப்பு என்பது பூர்வ ஜென்ம பாவம் என்று கூறியதற்காக வேக வேகமாக பாய்ந்த சட்டம், சமீபத்தில் ஒரு பிரபல தமிழ் நடிகரின் மாற்றுத்திறனாளி மகனுக்கு (தனுஷ்), ஹிந்து கலாச்சாரத்தின் படி நடைபெற்ற திருமணத்தை, சமூக ஊடகங்களில் எதிர்மறையாக விமர்சித்தவர்கள் மீது பாய மறுக்கிறது.
ஒட்டுமொத்தமாக மாற்றுத்திறனாளிகளின் திருமணத்தை, அவர்களை விரும்பும் பெண்களை, குடும்பத்தை எல்லை மீறி பேசியவர்கள் மீது தமிழக அரசே தானாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். யாரும் கண்டு கொள்ளாத நிலையில் பட்டுக்கோட்டையில் அடியேன் தொடுத்த வழக்கு ஆமை வேகத்தில் கூட நகர மறுக்கிறது.