திருத்திய வக்பு சட்டம் வில்லங்கத்திலிருந்து விடுதலை

டாக்டர் வ.நாராயணன் ஏற்புரை

விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் டாக்டர் வ.நாராயணன் ஏற்புரை நிகழ்த்திய உரையிலிருந்து: “ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்திய அளவில்  ஒரு சர்வே எடுத்தார்கள். அரசுத்துறைகளில் எந்த துறை பணி புரிவதற்கு சிறந்த துறை என்பது அந்த சர்வேயின் மையப்பொருள். அரசுத்துறைகளில் இந்திய விண்வெளித் துறையே பணி செய்யச் சிறந்த துறை என்று அந்த சர்வேயின் முடிவு சொன்னது.

விக்ரம் சாராபாய் வழிநடத்திய இந்திய விண்வெளி ஆய்வுத் துறை

இந்திய விண்வெளி துறையை வழி நடத்தியவர்கள் யார் யார் என்று பார்த்தால் 1962 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை இந்திய விண்வெளித்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாய் அவர்கள் வழி நடத்தினார்கள். விக்ரம் சாராபாய் மாமனிதர்; பெரும் செல்வந்தர்; தொழிலதிபர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர். பாரதம் சுதந்திரம் அடைந்த அந்தக் காலகட்டங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்தவர்கள் பல கோடி பேர். அந்த காலகட்டத்தில் முன்னேறிய தொழில்நுட்பம் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று சொன்னவர் விக்ரம் சாராபாய். அவரது ஆசிரியர் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன்.

1962ம் ஆண்டு கால கட்டத்தில் இந்திய விண்வெளித் துறைக்கு அரசு 3 கோடி ரூபாய் நிதி அளித்தது. அப்போது, “சோற்றுக்கே வழியில்லாத நிலையில் இந்தத் துறைக்கு இத்தனை கோடி ரூபாய் கொடுக்க வேண்டுமா? ஏன் காசை வீணாக்குகிறீர்கள்?” என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். அப்போது விக்ரம் சாராபாய் அவர்கள், “நானே இவ்வாண்டு 3 கோடி ரூபாய் வருமான வரி கட்டியுள்ளேன். என்னுடைய பணம் தான் இந்த பணம்!” என்று கூறினார். அந்தக் காலத்திலேயே ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய் வருமான வரி கட்டக்கூடிய அளவுக்கு இருந்த மிகப்பெரிய தொழிலதிபர் அவர். அரசு பணத்தில் ஒரு டீ காபி கூட குடிக்காத ஒரு மகத்தான மனிதர்!  முதல் பத்து ஆண்டுகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை வழி நடத்தி கட்டமைத்துக் கொடுத்தார். அவருக்குப் பிறகு எம்.ஜி.கே மேனன் தலைவர் ஆனார்.

பேராசிரியர் சதீஷ் தவான்
அமர்ந்த நாற்காலி

அதன் பிறகு பேராசிரியர் சதீஷ் தவான் இஸ்ரோவை வழி நடத்தினார். நான் இஸ்ரோவில் இணைந்த போது அவரே இஸ்ரோ தலைவராக இருந்தார். அவர் எப்படிப்பட்ட மாமனிதர் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். அப்துல் கலாம்  முதன் முதலாக ப்ராஜெக்ட் டைரக்டராக தலைமை தாங்கி நடத்திய எஸ்.எல்.வி 3 ராக்கெட் தோல்வி அடைந்த போது பத்திரிகையாளர் சந்திப்புக்கு அப்துல் கலாமை அனுப்பாமல் பேராசிரியர் சதீஷ் தவான் தானே சென்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். 1980 ராக்கெட் ஏவுதல் வெற்றி அடைந்தபோது, அப்துல் கலாமை கூப்பிட்டு,”நீ உன்னுடைய குழுவினரோடு சென்று பத்திரிகையாளரை சந்தித்து பேட்டி கொடு!” என்றார். அப்படிப்பட்ட அற்புதமான மனிதர் பேராசிரியர் சதீஷ் தவான்.

என்னுடைய இல்லத்தரசி இறைவன் கொடுத்த வரம். ஒரு முறை ஒரு  ஜி.எஸ்.எல்.வி  ஏவுதலுக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் தங்கி இருந்தேன். தாமதமாகிக் கொண்டே வந்தது. எழுபது நாட்களுக்குப் பிறகு குடும்பத்தைப் பார்த்து விட்டு வரலாமென்று வீட்டுக்கு வந்தேன்.”சக்சஸ் ஆகாமல் ஏன் வந்தீர்கள்? சக்சஸ் ஆக்கிவிட்டு வாருங்கள்! திரும்பி போங்கள்” என்று சொன்ன ஒரு கேரக்டர் என் மனைவி.

மனைவி சுட்டிக்காட்டிய விஷயம்

சந்திரயான் 2 வெற்றியடையாமல் போனபோது, அது பற்றிய அறிக்கை தயார் செய்ய நாங்கள் 10 பேர் 30 நாட்கள் வேலை செய்தோம். அப்போது வீட்டுக்கு போன் செய்யக் கூட நேரமிருக்காது. வீட்டில் இருந்து கூப்பிட்டாலும், “HOW ARE YOU?” என்று கேட்டுவிட்டு  போனை வைத்து விடுவேன்.

ஒரு நாள் இரவு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கிறேன். மறுநாள்  ரிப்போர்ட்  கொடுக்க வேண்டியது என் வேலை. அப்போது அங்கு வந்து “தோல்வி அடைய என்ன காரணமாக இருக்கும்?” என்று கேட்கிறாள். “நான் சொன்னால் உனக்கு ஏதாவது புரியுமா? எதற்காக என்னை தொந்தரவு செய்கிறாய்?” என்று கேட்க மனதில் நினைத்துக் கொள்கிறேன். பதில் சொல்லவில்லை. அதன் பிறகு இரவு கொஞ்ச நேரம் படுத்துறங்கி, காலை இரண்டரை மணிக்கு எழுந்து, புத்தகங்களை எடுத்துக் கொண்டு முதல் தளத்துக்கு வருகிறேன்.

அங்கே உட்கார்ந்து புத்தகத்தைத் திறந்தபோது, என் காபினுக்கு வருகிறாள். நான் எரிச்சலடைகிறேன். அதிகாலையில் ஏதாவது திட்டி சண்டை போட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? ஏதோ சொல்ல வருகிறாள் என்று புரிகிறது. ஆனால் எதையும் கேட்கும் மனோநிலையில் நான் இல்லை. புரிந்துகொண்டு ஒன்றும் பேசாமல் நகர்ந்து விடுகிறாள். நான் தொடர்ந்து படிக்கிறேன்.

காலையில் ஆபீஸ் செல்ல கார் வந்து நிற்கிறது. நான் கிளம்புகிறேன். அப்போது வந்து, “ஹைட்ரஜன் பியூரிட்டி எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.” என்றாள். அப்போதும் அதிகப்பிரசங்கியாக ஏதோ சொல்கிறாள் என்றே எண்ணினேன். அன்று இரவு 9 மணி வரை டிஸ்கஷன் செய்தும் சரியான காரணம் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு திரும்பும்போது காலையில் ஏதோ ஒன்றை சொன்னாளே என்று நினைவு வந்தது. கடைசியில் அவள் சுட்டிக்காட்டிய அம்சம் தான் காரணமாக இருந்தது. அப்படி ஒரு கேரக்டர்.

நான் இஸ்ரோ பணியில் சேர்ந்து 41 ஆண்டுகளை நிறைவு செய்த பிறகு பிரதமரால் இந்த பொறுப்பு கிடைத்துள்ளது. இதுவரை எல்லோரும் கடினமாக உழைத்து உள்ளோம். இனி எந்த வேலையும் ஸ்மார்ட் ஒர்க்காக இருக்க வேண்டும். எல்லோரையும் அரவணைத்து டீம் ஒர்க்காக செய்ய வேண்டும். (இந்த விழா எனக்காக நடத்தப்படுகிற விழா என்று நான் நினைக்கவில்லை. இந்திய விண்வெளி துறையை வழிநடத்தும்  அனைவரையும் ஊக்கப்படுத்தும் ஒரு விழா. என்னை உருவாக்கிய அனைவருக்கும் நன்றியை காணிக்கையாக்கும் ஒரு விழா).

பேரிடர் மேலாண்மை (DISASTER MANAGEMENT) அப்ளிகேஷன் உள்ளது. விலைமதிப்பில்லாத மனித உயிர்களை இதன் மூலம் காப்பாற்ற முடிகிறது. மேலும் கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்களுக்கு எங்கே அதிக மீன்கள் கிடைக்கும் என்று செயற்கைக்கோள் மூலம் புகைப்படம் எடுத்து சொல்லுகிறோம்.அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. கிரையோஜெனிக் இன்ஜின் உள்ள ஆறு நாடுகளில் ஒன்று நம் நாடு.

நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்த சந்திரயான் 1

நாம் அனுப்பிய சந்திரயான் 1 தான் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை முதன்முதலாகக் கண்டுபிடித்தது. சந்திரயான் 2 சரியாக லேண்டிங் ஆக முடியவில்லை. ஆனாலும் அதனுடைய ஆர்பிட்டர் இன்னமும் சந்திரனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது.  தினமும் ஆயிரக்கணக்கான படங்களை அனுப்பி கொண்டிருக்கிறது. சந்திரனில் போட்டோ எடுக்கக் கூடிய மிகச்சிறந்த கேமரா உலகத்திலேயே  பாரதியர்களிடம் மட்டுமே இருக்கிறது.

6,200 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றிக் கொண்டிருந்த சந்திரயான் 3 ஐ 19 நிமிடத்தில் நிலவின் தென் துருவத்தில் தரை இறக்கிய ஒரே நாடு, முதல் நாடு பாரதம். ரஷ்யர்கள் ஒரே ராக்கெட்டில் 37 செயற்கைக்கோள்களை அனுப்பியது ஒரு சாதனையாக பேசப்பட்டது. ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவிய ஒரே நாடு பாரதம்.

இப்போது சூரியனை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் அனுப்பியுள்ளோம். அந்தத் திட்டத்தின் தலைவராக நான் இருந்தேன். சூரியனை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் அனுப்பி வெற்றியடைந்த நான்காவது நாடு பாரதம். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது.

வெளிநாட்டவரின்
433 செயற்கைக்கோள்கள்

முதல் ராக்கெட் ஏவ மாட்டு வண்டியில் எடுத்துச் சென்ற நாடு,  இன்று வெளிநாட்டவரின்  433 செயற்கைக்கோள்களை பாரத மண்ணிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 90 சதவீத வெற்றியை நாம் ஈட்டி  உள்ளோம். நமது மரியாதைக்குரிய பிரதமர் மோடி விண்வெளி திட்டங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறார்.

தமிழ் நாட்டின் குலசேகரப்பட்டினம் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமெரிக்காவும் பாரதமும் சேர்ந்து செய்யும் ஒரு செயற்கைக்கோளை பாரத ராக்கெட் மூலம் பாரத மண்ணிலிருந்து விண்ணில் செலுத்தப் போகிறோம் என்று சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அது மிகவும் பெருமையாக உள்ளது. சந்திரயான் 5 க்கு தற்ேபாது அனுமதி அளித்துள்ளார்கள். ஜப்பானும் பாரதமும் சேர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளன. பாரதியர்களை பாரதத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் சந்திரனுக்கு கொண்டு சென்று திரும்ப கொண்டு வரும் திட்டம் உள்ளது. இதெல்லாம் பாரதப் பிரதமரின் கனவு திட்டங்கள்!

நாம் சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டான 2047 ஆம் ஆண்டில்  வளர்ச்சி அடைந்த நாடாக  நிச்சயம் மாறுவோம்.அதற்கு ஊக்கமளிக்கும் உந்து சக்தியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை இருக்கும் என்று உங்களுக்கு நான் உறுதி கூறுகிறேன்.” என்றார்.

− வ.நாராயணன்

(முற்றும்)

v