திருச்செந்துார் கோவிலில் கடத்தப்பட்ட குமரி மாவட்ட குழந்தை சேலத்தில் மீட்பு

திருச்செந்துார் கோவிலில் கடத்தப்பட்ட, ஒன்றரை வயது ஆண் குழந்தையை, சேலம் அருகே போலீசார் மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ், 35. இவரது மனைவி ரதி, 32. இவர்களின் ஒன்றரை வயது மகன் ஸ்ரீஹரிஷ். மனைவி, மகனுடன் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து, கோவிலில் தங்கி செப்., 28 முதல் விரதம் இருந்தார். அங்கு, 40 வயது பெண் அறிமுகமாகி பழகி வந்தார். அக்., 5ல், திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு குழந்தையுடன் சென்றார். அந்த பெண்ணும் வந்தார். குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி, அந்த பெண் எடுத்து சென்றார்; வரவேயில்லை. திருச்செந்துார் போலீசில் புகார் அளித்தார்.

குலசேகரப்பட்டினம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அந்த பெண்ணும், வாலிபரும் துாத்துக்குடி புதுார், பாண்டியபுரம் சுங்கச்சாவடி வழியாக பைக்கில், குழந்தையுடன் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் ஆலந்துறை போலீசார், குழந்தையை கடத்தி வந்த திலகவதி, பாண்டியன் தம்பதியை நேற்று கைது செய்தனர். பாண்டியன், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே தென்னம்பிள்ளையூரைச் சேர்ந்தவர்.

கோவை, திருப்பூர் பகுதியில் வசித்து இவர்கள், திருச்செந்துார் சென்று குழந்தையை கடத்தியதை ஒப்புக்கொண்டனர். தென்னம்பிள்ளையூரில் இருந்த குழந்தையை, சேலம் மாவட்ட போலீசார் நேற்று மாலை மீட்டனர். இந்நிலையில், போலீஸ் விசாரணையில் இருந்த திலகவதி, மயங்கி விழுந்து இறந்ததால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.