திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டுப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுற்றுச்சூழல் விதிகளை மீறியும், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறியும், பல்வேறு கட்டுமானங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், அதை தடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க உத்தரவிடுமாறும், ஆலயம் காப்போம் அமைப்பின் சார்பில் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
திருச்செந்துார் கோவிலில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுவது குறித்த வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. அதன் விபரங்களை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை, ஜூலை 8ல் நடக்கும். அதற்குள் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர், ஹிந்து சமய அறநிலையத் துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.