இந்த மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தன்று பௌர்ணமி தினம் வருவதால் இந்த மாதத்திற்கு பெயர் கார்த்திகை. கார்த்திகை நட்சத்திரம் கூட்டமாக வானில் ஒரு குத்துவிளக்கு போல் தெரியும். கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஸ்ரீலங்கா, கேரளா ஆகிய பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் மட்டுமல்லாமால் கோயில்களிலும் இது கொண்டாடப்பட்டு வருகிறது. இது தீபங்களின் உற்சவம். விளக்கின் அடையாளமே பரிசுத்தம். விளக்கை ஏற்றுவதால் புற இருட்டு அகல்வது போல் ஏற்றுபவர்களின் உள் இருட்டு அதாவது அஞ்ஞானமும் அகன்று போகிறது. தென் தமிழகத்தில் ‘திருக்கார்த்திகை’ என்று வட தமிழகத்தில் ‘தீபம்’ என்றும் மக்கள் இந்தத் திருநாளளை அழைக்கிறார்கள்.
கார்த்திகை மாதம் முழுவதும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றும் வழக்கம் நம்மிடையே இருக்கிறது. கார்த்திகை மாதங்களில் பகல்பொழுது குறைவு, இரவு அதிகம். மாலை வேளையில் வழிப்போக்கர்களுக்கு வழி காட்டும் வகையில் கூட இந்த ஏற்பாடுகள் நம் முன்னோர்களால் செய்யப்பட்டு வந்தது. நமது தமிழ் நூல்களில் கார்த்திகை தீபம் பற்றி வருகிறது. சமணக் காப்பியமான சீவகசிந்தாமணியில் ‘குன்றின் கார்த்திகை விளக்கிட்டன்ன’ என்று வருகிறது. மதுரை தமிழ்ச்சங்கத்தின் புலவர் பொய்கையார் ‘கார்த்திகை தீபக்காட்சியைக் கண்டு ஆனந்தித்தவர் கண்களே கண்கள்; மற்றவர்களின் கண்கள் கண்களல்ல’ என்று கூறுகின்றார். பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று ஒரு வழக்கு நம்மிடையே உண்டு. அங்குள்ள மலையே சிவபெருமான் தான். அதனால்தான் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் மக்கள் மலையை வலம் வருகிறார்கள். அதுதான் கிரிவலம். திருக்கார்த்திகை தினத்தன்று சிவபெருமான் ஜோதி வடிவமாக காட்சியளிக்கிறார். அப்படிப்பட்ட சிவபெருமனின் அடி, முடியைத் தேடப் புறப்பட்டனர் பிரம்மாவும் விஷ்ணுவும். திருமால் வராஹ வடிவம் எடுத்துக்கொண்டு அடியையும் பிரம்மா அன்னப்பறவை வடிவம் எடுத்துக்கொண்டு முடியையும் தேடப் புறப்பட்டனர். பாதாள உலகம் வரை சென்றும் திருமாலால் காண முடியவில்லை. சிவனடியைப் பற்றி மாணிக்கவாசகர் கூறும்போது ‘விண்ணிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இல்லாதவன்’ என்கிறார். அறிவின் துணை கொண்டு அந்தப் பேரறிவைக் கண்டறிய முடியாது. பிரம்மா அறிவின் துணை கொண்டு மேலே செல்லும்போதும் அவரது முடியைக் காண முடியவில்லை. அறிவு, பணம் ஆகியவற்றின் துணையோடு இறைவனைக் காண முடியாது. பூரண பக்தி, சரணாகதி தான் முக்கியம் என்பது இதன் மூலம் தெரிகின்றது. ஆதியும் அந்தமும் இல்லாத பெருஞ்சோதி என்கிறார் மாணிக்கவாசகர்.
கார்த்திகைத் திருநாளில் நிறைய அகல் விளக்குகள் வாங்கி அந்த வேலை செய்பவர்களுக்கு பேருதவி செய்கிறோம். இந்தத் திருவிழா மூன்று நாட்கள் நடக்கும். சிவ கார்த்திகை, விஷ்ணு கார்த்திகை, குப்பை கார்த்திகை என்பர். ஒரு பகுதி மக்கள் கார்த்திகையோ கல்யாணமோ என்பதற்கிணங்க காலையில் நல்ல விருந்து சமைத்துச் சாப்பிடுவார்கள். சில பகுதியில் தீபம் ஏற்றும் வரை உபவாசம் இருப்பார்கள். அதன்பிறகு தான் சாப்பிடுவார்கள். முருகனுக்கும் விசேஷமான நாள். ஒவ்வொரு கார்த்திகை அன்றும் விரதம் இருந்து முருகனின் அருளுக்குப் பாத்திரமாவார்கள். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகே மற்ற இடங்களில் தீபம் ஏற்றுவார்கள்.
முற்பிறவியில் எலியாகப் பிறந்து கார்த்திகை பௌர்ணமி அன்று சிவாலயத்தில் அணையும் நிலையில் இருக்கும் விளக்கைத் தூண்டி விட்டதால்தான் மஹாபலி சக்கரவர்த்திக்கு உயர்ந்த நிலை கிடைத்தது. அவன் முக்தி அடைந்த தினமும் கார்த்திகை தீபத்திருநாளில் தான். இந்த தீப ஒளி நமது மன அழுக்கைப் போக்குகிறது. எந்த நிகழ்ச்சியிலும் முதலில் தீபம் தான் ஏற்றுவார்கள். அது அத்தனை மகத்துவமான செயல். எல்லா கோயில்களிலும் இந்த நாட்களில் பனை ஓலையால் உயரமான தீபஸ்தம்பம் செய்து எரியூட்டுவார்கள். அதற்கு சொக்கப்பனை என்று பெயர். சில ஊர்களில் அதிலிருந்து தீயை எடுத்துக்கொண்டு போய் தான் வீடுகளில் உள்ள விளக்கை ஏற்றுவார்கள். சொக்கப்பனையே சிவ ரூபம் தான். கார்த்திகை தீப ஒளி தெரியும் இடம் வரை பாப விமோசனம், நிரந்தரமான சிரேயஸ் கிடைக்கும். மலை உச்சியில் ஏற்றும் திருவண்ணாமலை தீபம் பல மைல்கள் வரை பரவி இருக்கும்.
நமது பண்டிகைகளின் நோக்கமே வீடுகள், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து, மன அழுக்கைப் போக்கி பிறவிப் பயனை அடைய வேண்டும் என்பது. ஒவ்வொரு ஆண்டும் நாம் நல்ல மதிப்பீடுகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் பண்டிகைகள் கொண்டாடுவதன் தாத்பரியம். அதனால் தான் நாம் தினமும் தீபம் ஏற்றும் போது,
‘சிவம் பவது கல்யாணம் ஆயுள் ஆரோக்கிய வர்த்தனம்,
மம துக்க வினாசாய சந்த்யா தீபம் நமோ நம: ’
என்று கூறுகின்றோம்.