திரிபுரத்திலும் பறக்குது காவிக்கொடி!

அண்மையில் நடந்த திரிபுரா, நாகலாந்து, மேகாலயம் மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் முடிவுகள், தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த விரும்புவோருக்கு இனிய சேதியை அளித்திருக்கின்றன. குறிப்பாக, திரிபுராவில் பாஜக அடைந்துள்ள வெற்றி மிகவும் அற்புதமானது. அங்கு 20 ஆண்டுகாலமாக முதல்வராக இருந்த, காட்சிக்கு எளியவரான மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, ஆட்சிக் கட்டில் ஏறுகிறது பாஜக.

நாகலாந்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சிதான் (நாகலாந்து மக்கள் முன்னணி) இதுவரை ஆட்சியில் இருந்தது. இப்போது அதன் கூட்டணிக் கட்சி (நாகலாந்து தேசிய முற்போக்கு கட்சி) மாறி இருக்கிறது. அங்கு தேர்தலே பாஜகவின் நண்பர்களிடையிலான களமாகத் தான் இருந்தது. எதிர்பார்த்தபடியே,  கூட்டணியே வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் அங்கு சுத்தமாக துடைத்தெறியப்பட்டிருக்கிறது. பாஜக கூட்டணி 33 இடங்களிலும், என்.பி.எஃப். 22 இடங்களிலும், மற்றவர்கள் 5 இடங்களிலும் வென்றிருக்கிறார்கள். நாகா பழங்குடியினர் விவகாரம் இனிமேல் சுமுகமாகத் தீர்வதற்கான வாப்பை இத்தேர்தல் முடிவு அளித்திருக்கிறது.

மேகாலயத்தில் மொத்தமுள்ள தொகுதிகள் 60. இங்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. பெரும்பான்மையான மாநிலம் என்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்த்து. ஆயினும், அங்கும் பாஜக இத்தேர்தலில் வென்றிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெறவில்லை.எனவே, தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) கூட்டணி ஆட்சி அமைக்க வாப்புள்ளது. அனேகமாக அக்கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரைவில் இணையும்.

இவ்விரு மாநிலங்களை விட, திரிபுராவில் ஏற்பட்டுள்ள மாற்றமே மகத்தானது. இந்தியாவில் இடதுசாரிகள் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பிரதான அம்சங்களில் ஒன்று திரிபுரா. அங்கு இதுவரை முதல்வராக இருந்த மார்க்சிஸ்ட் தலைவர்கள் அனைவருமே எளியவர்களாகவும், தன்னலமற்றவர்களாகவும் அமைந்தது அக்கட்சியின் பேறு. அதைப் பயன்படுத்தியே அம்மாநிலத்தில் நீண்டகாலம் ஆட்சியை தக்கவைத்திருந்தது அக்கட்சி.

ஆனால், மாநிலத்தில் மார்க்சிஸ்ட் தொண்டர்களின் அரசியல் வன்முறைகளைப் பொருத்த வரை நமது அண்டை மாநிலமான கேரளம் போலவே தான். அங்கு தேர்தலே மார்க்சிஸ்ட் கட்சியினர் நினைத்தால் தான் அமைதியாக நடக்கும் என்ற நிலைமையே சென்ற தேர்தல் வரை நிலவியது. காங்கிரஸ் கட்சியால் மார்க்சிஸ்டுகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

இந்த நேரத்தில் தான் தேசத்தின் பிரதமர் ஆனார் நரேந்திர மோடி. அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகர்தலா தொகுதியில் பாஜக வெல்ல முடியாத போதும், அங்கு அக்கட்சியின் வாக்குகள் கூடின. அப்போதே பாஜக திரிபுராவை தனது அடுத்த இலக்காகத் தீர்மானித்துவிட்டது.

தேர்தல் களத்தில் வெல்ல நல்ல தலைமை, அர்ப்பணிப்புள்ள தொண்டர் படை, சிறந்த அரசியல் வியூகம் ஆகிய மூன்றும் அவசியம். இம்மூன்றும் பாஜகவிடம் இருந்தது. கடந்த இரண்டாண்டுகளாக பாஜக கீழ்மட்டத்தில் நடத்திவந்த அரசியல் போராட்டமும், கைக்கொண்ட தேர்தல் அணுகுமுறையும் தான் அக்கட்சிக்கு தற்போது இமாலய வெற்றியை வழங்கியுள்ளன.

மோடி என்ற நிகரற்ற ஆளுமையை பிரதமராகக் கொண்ட பாஜகவுக்கு அதன் தலைவரான அமித்ஷாவின் ராஜதந்திர அணுகுமுறையும் சேர்ந்ததால்தான் அடுத்தடுத்து பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று இன்று ஏகதேச பாரதம் காவிமயமாகி இருக்கிறது. அதன் தொடர்ச்சியே, தற்போது வடகிழக்கில் பாஜக பெற்றுள்ள வெற்றி.

திரிபுராவில் சென்ற தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரஸ், திருணமூல் காங்கிரஸ் கட்சிகளிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் பலர் பாஜகவில் ஐக்கியமாயினர். அவர்கள் மார்க்சிஸ்ட்களை எதிர்க்க பாஜகவைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்துவிட்டனர். இந்த காட்சிகளை பின்னிருந்து இயக்கியவர், வடகிழக்கு மாநில நிர்வாகத்தை கவனிக்கும் ஹிமாந்த பிஸ்வ சர்மா. முன்னாளில் காங்கிரஸில் இருந்தபோது கறிவேப்பிலையாக தூக்கி எறியப்பட்ட சர்மாவிடமிருந்த தலைமைப் பண்பை உணர்ந்த அமித் ஷா  அவரையே வட கிழக்கு மாநிலங்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக்கினார். இப்போது அவர் சர்வானந்த் சோனோவால் தலைமையிலான அசாம் மாநில பாஜக அரசில் கல்வி அமைச்சராகவும் இருக்கிறார்.

சர்மாவிடம் திரிபுரா தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டது. தவிர, அவருக்கு உதவியாக, ஆர்.எஸ்.எஸ். முன்னாள் பிரசாரகரும், சமூக சேவகருமான விப்ளவ குமார் தேவும் களம் இறக்கப்பட்டார். இவர்கள் இருவரும் இணைந்து நடத்திய துல்லியமான தாக்குதலுக்குக் கிடைத்த வெற்றியே பாஜகவுக்கு பல்லாண்டு காலக் கனவை நனவாக்கி இருக்கிறது.

சர்மாவும் தேவும் இணைந்து திரிபுராவின் 60 தொகுதிகளிலும் பம்பரமாகச் சுழன்றார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் களப் பணியாளர்களை நியமித்தார்கள். மார்க்சிஸ்ட் ஆட்சி மீதான அதிருப்தி மாநிலமெங்கும் விரவிக் கிடந்தது. அதை பாஜக ஆதரவாக அவர்களின் தொடர் பிரசாரத்தால் மாற்றினார்கள். தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் மோடிக்கு தலைநகர் அகர்தலாவில் கூடிய பிரமாண்டமான கூட்டத்திலேயே, அங்கு பாஜக வெல்லப்போவது தெரிந்துவிட்டது.

எனினும், எந்த ஒரு வாப்பையும் வீணாக்க விரும்பாத அமித் ஷா, கம்யூனிச அரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட பழங்குடியினரின் கட்சியான ஐ.டி.எஃப்.டி. உடன் கூட்டணி கண்டது வாக்குகள் சிதறுவதைத் தடுத்ததாலும், மார்க்சிஸ்ட்கள் முன்புபோல வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முடியாததாலும், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.

அங்கு மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அவற்றில் பாஜக கூட்டணி 43 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கூட்டணி 16 இடங்களிலும் வென்றுள்ளது. திரிபுராவில் சென்ற தேர்தலில் அடையாளமே இல்லாமல் இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் இப்போது 42.4 %. அதன் கூட்டணிக் கட்சியின் வாக்கு சதவீதம் 7.9 %. மார்க்சிஸ்ட் கட்சி 43.2 % வாக்குகளைப் பெற்றபோதும், கூட்டணி வலுவால் பாஜக வென்றுள்ளது. இதற்கு அமித் ஷாவின் தேர்தல் வியூகமே காரணம்.

திரிபுராவில் ஐ.டி.எஃப்.டி. கட்சியுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவால் ஆதாயமும் கிடைக்கலாம்; பாதகமும் ஏற்படாலாம் என்று நாங்கள் சோன்னபோது, உடனடியாக அக்கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்தார் ஷா. அவரது தேர்தல் வியூகமே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்” என்கிறார் சர்மா. அது மட்டுமல்ல, அரசியல் பலகலைக் கழகத்தில் அமித்ஷா முனைவர் பட்ட மானவர் என்றால் ராகுலை எல்கேஜி மாணவராகத் தான் கருத வேண்டும்” என்றும் அவர் கூறி இருக்கிறார். உண்மைதான். தேர்தல் முடிவுகளுக்கு பதில் அளிக்காமல் இருக்க பாட்டியைப் பார்ப்பதற்காக என்று சோல்லி இத்தாலிக்கு ஓடிவிட்ட ராகுல் குறித்து, முன்னாள் காங்கிரஸ்காரர் கூறுவது சரிதான்.

ஒருகாலத்தில் மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் இப்போது 1.8 % வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பது பரிதாபம்தான். மோடி கூறுவது போல காங்கிரஸ் இல்லாத பாரதம் நோக்கி மக்கள் பயணிக்கத் துவங்கிவிட்டதையே திரிபுரா தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதேபோல, இடதுசாரிகளின் செங்கோட்டைகளுள் ஒன்றான மேற்குவங்கம் ஏற்கனவே தகர்க்கப்பட்ட நிலையில், இப்போது இரண்டாவது கோட்டையான திரிபுராவும் தகர்க்கப்பட்டுவிட்டது. இனி அவர்கள் கேரளத்துடன் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ கோஷத்தை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

கேரள முதல்வர் பிணராயி விஜயன் இனியேனும் அரசியல் எதிரிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடாமல் நல்லாட்சி நடத்துவது அவருக்கு நல்லது. இல்லையெனில், அங்கும் தாமரை மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 

திரிபுராவில்

ஆர்.எஸ்.எஸ். அன்று சிந்திய ரத்தம்!

இந்த நல்ல நேரத்தில் துயராமன ஒரு நினைவைப் பகிர்ந்து கொள்வது அவசியம். 1999 ஆகஸ்டில் திரிபுராவில் வனவாசி கல்யாண் ஆசிரம பணிகளை பார்வையிடச் சென்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நால்வர் பிரிவினைவாதிகளால் பங்களாதேஷுக்குக் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்க வாஜ்பா அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஏனெனில், திரிபுரா அதிகார வர்க்கம் பிரிவினைவாதிகளுக்கு சாதகமாக இருந்தது. கடுமையான சித்ரவதைகளுக்குப் பிறகு அவர்கள் நால்வரும் கொல்லப்பட்டதாக 2000 நவம்பரில் தெரிய வந்தது.

அந்த நால்வர்: வடகிழக்கு பாரதத்தின் ஆர்.எஸ்.எஸ். க்ஷேத்திர கார்யவாஹ் சியாமள காந்தி சென்குப்தா, அகர்தலா விபாக் பிரசாரக் சுதாம தத்தா, ஜில்லா பிரசாரக் சுபாங்கர் சக்கரவர்த்தி, தெற்கு அசாம் பிரசாரக் தீபேந்திரநாத் தேவ் ஆகியோர்.

பல்லாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் சகோதர இயக்கங்களும் புரிந்த தியாக மயமான பணிகளுக்குக் கிடைத்துள்ள மதிப்புமிகு பயனே, தற்போது பாஜக பெற்றுள்ள வெற்றியின் ஆதாரம் என்பதை, 2000ல் பலியான இந்த நான்கு உத்தம ஸ்வயம்சேவகர்களும் உணர்த்திக் கொண்டிருப்பார்கள்.