திமுக அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுவது ஒன்றும் அதிசயம் கிடையாது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடைத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் முகாம் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேரடியாக தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் அலுவலகமாக இது செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையொட்டி நடைபெற்ற கணபதி ஹோமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுவது ஒன்றும் அதிசயம் கிடையாது. திமுக என்றாலே ஊழல்தான்.
ஆ.ராசா மிகப் பெரிய ஊழல்வாதி. கோவையில் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற அரசியல்வாதிகளை மக்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டனர். ஊழல்வாதிகளிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும் என்பதே மக்களின் கருத்து. அதிமுக கூட்டணி குறித்து, கட்சித் தலைமைமுடிவெடுக்கும். மத்திய அரசு, வீடுதோறும் தண்ணீர் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களைசெயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 9 தொகுதிகளும், நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளும் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.