தி.மு.க., – எம்.பி., கதிர்ஆனந்த்துக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

தி.மு.க., –எம்.பி., கதிர் ஆனந்த்துக்கு எதிராக, வேலுார் நீதிமன்றத்தில் உள்ள, வருமான வரி தொடர்பான வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. வேலுார் லோக்சபா தொகுதி தி.மு.க., எம்.பி.,யாக கதிர்ஆனந்த் உள்ளார். இவர் அமைச்சர் துரைமுருகனின் மகன். கதிர்ஆனந்த்துக்கு எதிராக, வேலுார் நீதிமன்றத்தில், வருமான வரித்துறை தாக்கல் செய்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 2012––13 நிதியாண்டுக்கான வருமான கணக்கை, தணிக்கை அறிக்கையுடன் கதிர்ஆனந்த் தாக்கல் செய்யவில்லை; தாமதமாக 2015ல் தாக்கல் செய்துள்ளார். அதில், 1.04 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால், 2015 மார்ச்க்குள் வரி செலுத்தவில்லை. நோட்டீஸ் அனுப்பிய பின்னே, வரி செலுத்தி உள்ளார். குற்ற நடவடிக்கை ஏன் தொடரக்கூடாது எனக் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியதும், எந்த பதிலும் இல்லை. எனவே, கதிர்ஆனந்த்துக்கு எதிராக, வருமான வரி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் கதிர்ஆனந்த் மனுத் தாக்கல் செய்தார். வருமான வரித்துறை சார்பில், சிறப்பு வழக்கறிஞர் எம்.ஷீலா ஆஜராகி, ”தாமதமாக கணக்கு தாக்கல் செய்த போது, அதோடு சேர்த்து வரியை செலுத்தவில்லை. அதிகாரியிடம் இருந்து நோட்டீஸ் போன பின், வரி செலுத்தப்பட்டது,” என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: வேலுார் நீதிமன்றத்தில் அனைத்து முகாந்திரங்களையும் மனுதாரர் எழுப்பிக் கொள்ளலாம். அதை, தகுதி அடிப்படையில் நீதிமன்றம் பரிசீலிக்கும். மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.