தாமதமற்ற, தடங்கலற்ற நீதி

தாமதமற்ற, தடங்கலற்ற நீதி

குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், “அதிக தாமதம், அதிக செலவு, எளிதில் அணுக முடியாத நிலை போன்றவை சாதாரண மனிதர்களுக்கு நீதி கிடைப்பதில் குறிக்கீடுகளாக உள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்து உண்மை நிலையை பிரதிபலிக்கிறது. நீதித்துறை மேம்படுத்தப்பட வேண்டும். செம்மைப்படுத்தப்பட வேண்டும். இதை எவ்வளவு துரிதமாக சாத்தியப்படுத்த முடியுமோ, அவ்வளவு துரிதமாக சாத்தியப்படுத்த வேண்டும்.

நமது அரசியல் சாசனம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 39(ஏ) சமநீதிக்கான உரிமையை அளித்துள்ளது. இது எல்லா குடிமக்களுக்குமானது. 1976ம் ஆண்டு 42வது திருத்தமாக இது சேர்க்கப்பட்டது. அனைவருக்கும் சமநீதி கிடைக்க வேண்டும் என்ற போதிலும் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இது கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அனைவருக்கும் சமநீதி கிடைக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் வரையறை செய்துள்ள போதிலும் நடைமுறையில் பல தடைகள் உள்ளன. இந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்தால்தான் குடிமக்கள் அனைவருக்கும் சமநீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். குடிமக்கள் அனைவருக்கும் சமநீதி கிடைக்க வேண்டும் என்பதை ஒற்றைக் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. இது பன்முகத்தன்மை வாய்ந்தது. தீர்ப்புகள், அரசியல், பொருளியல், சமூகவியல் நீதியை உறுதிப்படுத்துகின்றன. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு துளியும் குந்தகம் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்யும் கடமை நீதிமன்றத்திற்கு உண்டு.

உச்சநீதிமன்றம் 75 ஆண்டுகளைக் கடந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் சிகர நிலையை அரசியல் சாசனம் ஐயத்திற்கு இடமின்றி அழுத்தம் திருத்தமாக உறுதிப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்குவது எளிதல்ல. உச்சநீதிமன்ற நீதிபதியின் செயல்பாடு அரசியல் சாசனத்துக்கு புறம்பானது என்ற அடிப்படையிலோ அல்லது அவரது திறன் வரையறை செய்துள்ள தகுதியை விட குறைவாக உள்ளது என்ற அடிப்படையிலோ நீக்க வேண்டும் எனில் நாடாளுமன்றத்தில் ஆஜராகி வாக்களிக்கும் எம்.பிக்களின் மூன்றில் இரு பங்கினர் சம்பந்தப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கலாம் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே இந்த தீர்மானத்தை ஏற்று நீதிபதியை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிப்பார்.

நீதித்துறைக்கு உயர்ந்த இடம் அளிக்கப் பட்டுள்ளது. நீதித்துறையில் யாரும் அனாவசியமாக தலையிட முடியாது. நீதிமன்றத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே அரசியல் சாசனத்தில் ஷரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்டரீதியாக எழும் பிரச்சினைகளில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே உறுதியானது. நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் அதிகாரமும் உச்சநீதிமன்றத்துக்கே உள்ளது. மனித உரிமைகளுக்கு குந்தகம் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில்தான் உச்சநீதிமன்றத்துக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற செயல்பாட்டில் சில போதாமைகள் உள்ளன. இவற்றை களைய வேண்டியது அவசியம். ஏழை, எளிய மக்களுக்கு எட்டாததாக உச்சநீதிமன்றம் இருக்கக்கூடாது.

நீதிமன்றத்தில் கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை இவ்வாறு ஏராளமான வழக்குகள் பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ளன. இதை ஆரோக்கியமானதாக கருத முடியாது. இதற்கு தீர்வு காண வேண்டியது அவசியம். நீதிபதிகளின் பணியிடங்களை தாமதமில்லாமல் நிரப்ப வேண்டும். சில வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன. இதற்கும் முடிவு கட்ட வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் வாயிலாகவும், காலதாமதத்தை தவிர்க்க முடியும். அடுத்த 25 ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் எவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினரிடமும் உள்ளது. தாமதமற்ற, தடங்களற்ற நீதியை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் என்பது தான் பிரதான எதிர்பார்ப்பு.

நீதிமன்றத்துக்கு வெளியே மத்தியஸ்தம் வாயிலாக பல வழக்குகளுக்கு தீர்வு காண முடியும். இந்த சமரச முயற்சியை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். லோக் அதாலத்துகளை பரவலாக நடத்த வேண்டும். இவற்றின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும்.

தேசிய, மாநில, மாவட்ட, வட்ட அளவில் வழக்கு தொடுத்துள்ளவர்களுக்கு அல்லது வழக்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கக்கூடிய ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். அதைப் போல நீதிமன்ற கூர்நோக்கர்களையும் நியமிக்க வேண்டும். இதையெல்லாம் நடைமுறைப் படுத்தினால் தாமதத்தை பெருமளவு தவிர்க்க முடியும். ஏதாவது முக்கியப் பிரச்சினை தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ தாக்கத்தை ஏற்படுத்தினால் அது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றமே தன்னிச்சையாக தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு விசாரிக்கலாம். இதுதொடர்பான பல முக்கிய நிகழ்வுகள் வரலாற்றில் திருப்புமுனைகளை ஏற்படுத்தி உள்ளன.

உச்சநீதிமன்றம் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்த நம்பிக்கையை உச்சநீதிமன்றம் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. நம் உச்சநீதிமன்றத்தின் முதன்மை சாதனையாகவே இதை கருதலாம். உச்சநீதிமன்றத்துக்கும் மக்களுக்கும் இடையே உள்ள பிணைப்பு 75 ஆண்டுகளாக வலுவாக உள்ளது. எதிர்காலத்திலும் இவ்வாறே இது நீடிக்கும் என்பதில் துளியும் சந்தேகத்துக்கு இடமில்லை.

கட்டுரையாளர்: அரசு சட்டக்கல்லூரி
முதல்வர், மும்பை

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி