தற்போது மீட்டு எடுக்க வேண்டியது கோவில் நிலத்தை மட்டும் அல்ல கோவிலையும் தான்

“கோவில் இல்லாத ஊரில், குடியிருக்க வேண்டாம்” என நமது முன்னோர்கள் கூறினார்கள். ஒரு கோவில் இருந்தால், அதனைச் சுற்றி வாழ்பவர்களுக்கு, பல்வேறு வகையில் ஆதாயம் இருக்கும். கோவில் என்றாலே, நிச்சயமாக குளம் இருக்கும். அந்த குளத்தில், மீன்கள் போன்ற ஜீவன்கள் உயிர் வாழும். கோவிலை சுற்றி நிறைய வியாபாரம் நடக்கும். கோவிலுக்கு வருபவர்கள் மூலம், அவர்களின் வியாபாரம் வளர்ச்சி அடையும். கோவிலை சுற்றியுள்ள ஊர் மக்களுக்கு, மழை போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால், ஊர் மக்கள் அனைவரும் கோவிலில் வந்து குடியேறுவார்கள். இடி இடிக்கும் போது கோவிலுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது. நமது கோவில்களின் கோபுரத்தில், இடி தாங்கி அமைக்கப் பட்டு இருப்பதால், இடி இடிக்கும் போது கோவிலை பாதுகாத்து, கோவிலில் அடைக்கலம் ஆகும், அனைத்து உயிரினங்களுக்கும், மக்களுக்கும், பாதுகாப்பான சூழல் ஏற்படும். எனவே, இதனை கருத்தில் கொண்டு தான், “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என நமது முன்னோர்கள் கூறினார்கள்.

பின்பு வருவதை முன்பே யோசித்து செயல் பட்ட நமது மன்னர்கள்:

பல ஆயிரம் வருடங்களாக, தமிழகத்தில் மன்னர்கள், ஆட்சி செய்து வந்தார்கள்.  சோழ மன்னர்கள், பல வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்து, தெற்காசியா முழுவதும் மிகச் சிறந்த ஆட்சியை நடத்தி வந்தார்கள். அவர்களைப் போலவே, பாண்டிய மன்னர்கள், சேர மன்னர்கள், பல்லவ மன்னர்கள், விஜய நகர பேரரசு என அனைத்து அரசர்களும், கோவில்களை கட்டி அதனை காப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகித்தார்கள்.

தங்களுடைய காலத்திற்கு பின்னரும், கோவில்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, கோவிலுக்கு என விவசாய நிலங்களை ஒதுக்கி, அங்கு விவசாயம் செய்து, அந்த வருமானத்தின் மூலம், கோவிலுக்கான செலவுகளை செய்ய திட்டமிட்டு, அதற்கு ஏற்றார் போல, வழி வகைகளை செய்து வந்தார்கள். காலப் போக்கில், அவர்களின் மறைவிற்குப் பின்னர், கோவில்களின் சொத்துக்கள், மற்றவர்களுக்கு சென்று, அதன் மூலம், அந்த கோவில்களின் வருமானம் குறைந்து, வரக் கூடிய பக்தர்களிடம் இருந்து பணத்தை பெற்று, அதன் மூலம் அந்த கோவிலை நிர்வகிக்க கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

இது போன்ற ஒரு சூழலை, கனவில் கூட நினைத்துப் பார்க்காத நமது மன்னர்கள், அதற்கென தனியாக சொத்தை ஏற்படுத்தி, நிர்வகிக்க ஏற்பாடு செய்து இருந்தாலும், அதனை முறையாக கடைபிடிக்காமல், பாதிப்பை ஏற்படுத்தியது, நம்மை  ஆட்சி செய்த அந்நியர்கள்.

 

தொல்காப்பியம்:

“மாயோன் மேய காடுறை உலகமும்,

சேயோன் மேய மைவரை உலகமும்,

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்,

வருணன் மேய பெருமணல் உலகமும்…”

காடுகளும் அதனை சார்ந்த இடங்களுக்கும் மேயோன் இறைவன் எனவும்,

மலைகளும் அதனை சார்ந்த இடங்களுக்கு சேயோன்  இறைவன் எனவும்,

விவசாய நிலங்களும் அதனை சார்ந்த இடங்களுக்கு வேந்தன் இறைவன் எனவும்,

கடலும் அதனை சார்ந்த இடங்களுக்கு வருணன் இறைவன் எனவும், தங்களுடைய நிலத்திற்கு ஏற்ற தெய்வங்களாக தொல்காப்பியர் வரிசைப் படுத்தி உள்ளார். தொல்காப்பியரின் வரிகளில், நமது வரலாற்று சிறப்புகளையும், நமது மக்களின் மரபுகளையும், பண்பாடுகளையும், நிர்வாக ஒருங்கிணைப்புகளையும் போற்றும் படியாக உள்ளது.

 

சட்ட திருத்தங்கள்:

ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆட்சி செய்த போது, 1817ல் முதன் முறையாக அன்றைய மதராச பட்டினத்தில் உள்ள, வாரிசு இல்லாத சொத்துக்களை “ஒழுங்குறுத்தும் சட்டம்” என்ற பெயரில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டமானது, கோவில்களுக்கு வரும் நன்கொடைகள் சரியாக பயன்படுத்தப் படுகின்றன என்பதனை கண்காணிக்க வழி வகை செய்தது. அதிகாரமும், அப்போது இருந்த வருவாய் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம், ஆயிரக்கணக்கான திருக்கோவில்கள், அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.

1858ல் பாரதத்தின் நிர்வாகம், ஆங்கிலேயரிடம் சென்றது. “மத விவகாரங்களில், பிரிட்டிஷ் அரசு தலையிடாது”, என்ற வாக்குறுதியை அன்றைய கிழக்கு இந்திய கம்பெனி அளித்தது.

1920ல் பனகல் அரசர் முதல் அமைச்சராக பொறுப்பு ஏற்ற உடன், அப்போதைய மதராஸ் பட்டணத்தில் இருந்த அனைத்து திருக் கோயில்களையும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயன்றார். 1922ல் “இந்து பரிபாலன சட்டத்தை” முன் மொழிந்தார். 1925ல் “இந்து பரிபாலன சட்ட மசோதாவை” அறிமுகம் செய்து வைத்தார். 1927ல் “இந்து சமய அறநிலை வாரியம்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம், திருக் கோயில்களின் நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம், வாரியத்திடம் கொடுக்கப் பட்டது. நிர்வாகம் சரியாக நடை பெறாத கோவில்களுக்கு, அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரமும், வாரியத்திற்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து “இந்து சமய அறநிலை” வாரியத்தை ஏற்படுத்தும் பொருட்டு, 1940 ஆம் ஆண்டில் சிறப்பு அலுவலரை நியமனம் செய்தது.

இந்து சமயம் மற்றும் அறநிலையங்களை, வாரியத்திற்கு பதிலாக அரசே நிர்வகிக்கலாம் என்ற சிறப்பு அலுவலரின் பரிந்துரையின் பேரில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் வாரியத்தினை, அரசு நிர்வாகமாக மாற்றி அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், 1942ல் நியமனம் செய்யப்பட்ட அலுவல் சாரா குழு பரிந்துரை செய்தது.

இதனை ஏற்று, இந்து சமய அறக்கொடைகள் சட்டம் 1951-ல் இயற்றப் பட்டு, பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இந்து சமய அற நிறுவனங்களின் நிர்வாகத்தினை அரசு ஏற்றது. இந்த சட்டத்தில் விரிவான திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டு, 1959-ம் ஆண்டின் “தமிழ்நாடு இந்து சமய அறக்கொடைகள் சட்டம்”, 22, ஜனவரி 1960, 1ம் தேதி அன்று அமலுக்கு வந்தது. இதன் படி, இந்து சமய திருக் கோயில்களை நிர்வகிப்பதற்கான தனியான அரசுத் துறை ஒன்று உருவாக்கப் பட்டது.

 

தமிழகத்தில் கோவில்கள் இரண்டு வகைகளாக நிர்வகிக்கப் படுகின்றது:

 பரம்பரை பரம்பரையாக குடும்பத்தின் சார்பாக வருபவர்களை, “கோவில் தர்மகர்த்தா” என்று அழைக்கப் படுவார்கள்.

  1. “இந்து சமய அறநிலைத்துறை” என்ற குழு ஏற்படுத்தப் பட்டு, அந்தக் குழுவில் எஸ்சி, எஸ்டி சமூகத்தை சேர்ந்தவர்கள், பெண்கள் உட்பட 5 பேர்களாக, அந்த குழு உருவாக்கப் படும். குழுவின் ஆயுட்காலம் 2 வருடங்கள்.

கோவில்களுக்கு வருமானம்:

கோவில்களுக்கு இரண்டு வகைகளில் வருமானம் வருகின்றது. ஒன்று உண்டியலில் வரும் தொகை. மற்றொன்று, பொது மக்கள் நன்கொடையாக வழங்கும் தொகை.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், தமிழகத்தில், அரசு கணக்கின் படி, தற்போது, 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளது. அதில் 300 கோவில்களில் மட்டுமே, வருடத்திற்கு பத்து லட்சத்திற்கும் மேல், வருமானம் வருகின்றது. 650 கோவில்களில், 2 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் வருட வருமானம் வருகின்றது. 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில், வருடத்திற்கு 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே, வருமானம் வந்து கொண்டு இருக்கின்றது.

வீணாகும் வருமானம்:

பழனி முருகன் கோவிலை சுற்றி, 450 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும், வருட வாடகை வெறும் 100 ரூபாய் மட்டுமே. இன்றைய காலக் கட்டத்தில, அந்த வாடகைக்கு, எதுவும் கிடைக்காது. ஆனாலும், சிலரின் சுய லாபத்திற்காக, தொடர்ந்து கோவில் வருமானத்தை சூறையாடி வருகின்றார்கள் என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனை தடுக்க வேண்டிய, இந்து சமய அறநிலைத்துறையோ வேடிக்கை பார்க்கின்றது என அவர்கள் வருத்தப் பட்டு, தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது போல, பல சம்பவங்களை, உதாரணமாக கூற முடியும். வர வேண்டிய வருமானத்தை இழந்து, பக்தர்களிடம் பணம் வசூல் செய்வது மிகவும் வருத்தமான சம்பவம்.

திம்மராஜபுரம் பெருமாள் கோவில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி:

மொத்த கோவில் நிலங்கள்  சுமார் 120 ஏக்கர்கள். அதில், 40 ஏக்கர் மேல், தமிழக அரசு  கையகப் படுத்தி உள்ளது ( வாட்டர் போர்டு, காவல் துறை, என). கோவில் நிலத்தை நூற்றுக்கணக்கானோர் பத்திர பதிவு செய்து உள்ளனர். இன்று வரை, அது தொடர்கின்றது. 1983ல் கோவில் நிலத்தை குறிப்பிட்ட பகுதிகளுக்கு, பட்டா போட்டு, கொடுத்து உள்ளனர். 1965 முதல் தற்போது வரை,  2000 வீடுகளுக்கும் மேல், கோவில் பெயரில் வாடகை, குத்தகை செலுத்தாமல் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டும்  தொடர்கின்றனர். இதில்,  இந்து சமய அறநிலைத்துறை சட்டங்களை மீறி, இந்து அல்லாதவர்களுக்கும், சுமார் 200 வீடுகள் உள்ளன.

இது போன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடை பெற்று வருகின்றது. கோவில்களை பாதுகாக்க வேண்டிய,  இந்து சமய அறநிலைத் துறையோ, பாதுகாக்க தவறுவது, பக்தர்களை மிகவும் கோபம் கொள்ள வைக்கின்றது. இந்து சமய கோவில்களை, பாதுகாக்க வேண்டிய அரசாங்கமோ, அதனை கண்டு கொள்ளாமல் இருப்பது பக்தர்களிடையே கோபத்தை ஏற்படுத்துகின்றது.

கிரிப்டோ கிறிஸ்டியன்ஸ்:

இந்து கோவில்களில், தமிழக அரசு ஆணைப் படி, ஹிந்துக்கள் மட்டுமே பணி செய்ய வேண்டும். அனால், அதனை மீறி, ஹிந்து பெயரை வைத்துக் கொண்ட, மதம் மாறிய  கிறிஸ்துவர்கள், ஹிந்து சமய அறநிலை துறையில், பணி புரிவது சட்டத்தை மீறிய செயல். குற்றம் என தெரிந்தும், அவர்கள் வேலை செய்து வருவது, தண்டணைக்கு உரிய குற்றம்.

இஸ்லாமிய படை எடுப்பு:

இஸ்லாமிய படை எடுப்பின் போது அயோத்யா, மதுரா, காசி போன்ற எண்ணற்ற கோயில்களை, இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து இடித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கூட, இஸ்லாமிய மன்னர்களால் சூறையாடப் பட்டது. இஸ்லாமிய மன்னர்கள், இந்து கோவில்களை சிதைத்து, அங்கு தங்களுடைய விருப்பப் படி, மசூதிகளை கட்டி, நிர்வகித்து வந்தனர்.

பழமையும், தொன்மையும் வாய்ந்த இந்து கோவில்களையும், அதனை சார்ந்த நிலங்களையும் மீட்டெடுக்க, பல்வேறு இந்து அமைப்புகள் போராடி வருகின்றன. அவர்களுக்கு தோள் கொடுத்து, அனைத்து இந்துக்களும் ஒன்று சேர்ந்து, நம்முடைய பாரம்பரியமான ஹிந்து கோவில்களை மீட்டெடுக்க, அதன் பாரம்பரியத்தை காக்க, அனைத்து இந்துக்களும் ஒன்று பட்டு முயற்சி செய்ய வேண்டும். நமது கலாச்சாரம், இன்றளவும் மேன்மையுடன் இருப்பதற்கு, புராதன கோயில்களும், சிற்பங்களுமே முக்கிய காரணம். அதனை பாதுகாப்பது, நமது ஒவ்வொருவரின் கடமை.

“ஊர் கூடி தான், தேர் இழுக்க முடியும்” அனைவரும் ஒன்று சேர்ந்து, இறைவன் பணிக்கு தங்களுடைய நேரத்தை செலவிட முன் வருவோம்.