தன் பிள்ளைகள் நல்ல தரமான படிப்பு படிக்கணுமே என்று பார்த்தால் கல்விக் கட்டணம் ஆனை விலை குதிரை விலை ரேஞ்சுக்குப் போகிறது. திகைக்கிறார் சாமானிய தந்தை. இவரது திகைப்பு தீர குரல் கொடுக்கிறது ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத செயற்குழு தீர்மானம்.
எந்த ஒரு நாடும் வளர்ச்சி காண முக்கிய காரணம் கல்வி. இவற்றை சமுதாயமும் அரசும் ஊட்டமளித்து, ஆதரவளித்து, ஊக்குவிக்க வேண்டும். மாணவரின் முழுமையான வளர்ச்சி பெற அஸ்திவாரத்திற்கு வலு சேர்ப்பது கல்வி. நாட்டின் நலனுக்காக, ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு, உடை, இருப்பிடம் வேலை ஆகியவற்றோடு கல்வியும் நலவாழ்வும் கிடைக்கச் செய்வது ஒரு சேமநல அரசின் கடமை.
பாரத நாடு அதிக அளவு இளைஞர்களை கொண்ட நாடு. இளைஞர்கள் எவ்வித தடையுமின்றி அவர்களுடைய திறன் தகுதிக்கேற்ப பொருத்தமான கல்வி பெற்று அறிவியல், தொழில் நுட்ப, பொருளாதார, சமுதாய வளர்ச்சியில் அவர்கள் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும். இன்று அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறபடியால் அதிக செலவில்லாமல் தரமான கல்வி என்பது கடினமாகிறது. இத்தனை ஆண்டுகளாக கல்விக்கு போதிய நிதி ஒதுக்கீடும் முன்னுரிமையும் அரசின் கொள்கையில் இல்லாததால் கல்வி நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் செயல்பட ஏதுவாகி விட்டது. இன்று ஏழ மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. இதன் காரணமாக சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றதாழ்வு தேசத்திற்கே பெரும் கவலையளிப்பதாக உள்ளது.
இன்றைய கல்வி சூழலில், போதுமான நிதி ஒதுக்கவும் உரிய கொள்கைகளை வகுப்பதிலும் அரசு பொறுப்புடன் முனைப்புக் காட்ட வேண்டும். கல்வி வணிக மயமாக்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கட்டுப்படுத்தினால், மாணவர்கள் மிக அதிக செலவு செய்து கல்வி பயில வேண்டிய கட்டாயம் ஏற்படாது.
கல்வித் தரம், கட்டமைப்பு, சேவைகள், கட்டணம் ஆகிய அம்சங்களில் கல்வி நிலையங்கள் சுயமாக கட்டுப்பட்டு நடக்க அரசு தகுந்த சூழலை உருவாக்க வேண்டும். அரசின் கொள்கைகள் வெளிப்படையாக செயல் படுத்தப்படுவதற்கு இது அவசியம்.
ஒவ்வொரு குழந்தையும் பண்புடன் கூடிய, தேசிய உணர்வூட்டும், வேலைவாப்புள்ள, திறன் சார்ந்த கல்வி பெற சமமான வாய்ப்பு வேண்டும் என்பது அகில பாரத பிரதிநிதி சபாவின் கருத்து.
தனியார் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் சரியான பயிற்சி, உரிய ஊதியம் அளிக்கப்பட்டு கடமையுணர்வுடன் பணி புரிவதை உறுதி செய்வது அவர்களின் தரத்தை மேம்படுத்த மிகமிக அவசியம்.
பாரம்பரியமாகவே நம் சமுதாயம் சாமானியருக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி அளிப்பதில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. இன்று அனைத்து சமூக, சமய அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், கல்வியாளர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு தரமான கல்வியளிப்பது தங்கள் பொறுப்பு என உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும். தரமான கல்வி அதிக செலவில்லாமல் அனைவருக்கும் கிடைக்க மத்திய மாநில அரசுகள், உள்ளாட்சிகள் ஆகியவை நிதியையும் சட்டதிட்டங்களையும் ஏற்படுத்த வேண்டும் என அகில பாரத பிரதிநிதி சபா கோருகிறது.
குறிப்பாக, கிராமங்கள், பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள், வளர்ச்சி அடையாத இடங்கள் போன்றவற்றின் மக்களுக்கு தரமான கல்வியை அளித்து அறிவாற்றலின் சக்தி கொண்ட சமுதாயமாக அவர்கள் தேச முன்னேற்றத்தில் உறுதுணை புரியச் செய்ய வேண்டும் என சமுதாயத்திடமும் பிரதிநிதி சபா வேண்டுகோள் வைக்கிறது.